தில்லியில் கோலோச்சுமா ஆந்திரம்?

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 11-ஆம் தேதி ஆந்திரத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும், அந்த
தில்லியில் கோலோச்சுமா ஆந்திரம்?


மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 11-ஆம் தேதி ஆந்திரத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும், அந்த மாநிலத்தில் உள்ள 175 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
ஆந்திர அரசியலைப் பொருத்தவரை ஜாதி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையை விளங்கியது இந்த மாநிலம். அக்கட்சி ரெட்டி சமூகத்தினரின் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டது. எனினும், ஆந்திர மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்த திரைப்பட நடிகர் என்.டி.ராமாராவ் கடந்த 1982-இல் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய பின் அரசியல் களம் மாறியது. அதைத் தொடர்ந்து அவர் 1983-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். தெலுங்கு தேசம் கட்சி, ராமாராவ் சார்ந்த நாயுடு சமூகத்தின் கட்சி என்ற அடையாளத்தைப் பெற்றது.
கடந்த 1989-இல் காங்கிரஸுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய முன்னணியை அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். அதன் ஒருங்கிணைப்பாளராகவும் அவர் இருந்தார்.
தெலுங்கு தேசம் கட்சியில் 1995-இல் பிளவு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட உள்கட்சிப் பூசலைத் தொடர்ந்து, ராமாராவிடம் இருந்து அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கைப்பற்றினார். குறுக்கு வழியில் அவர் ஆட்சியைக் கைப்பற்றியதாக கருதப்பட்டாலும், தனது நிர்வாகத் திறனாலும், அரசியல் சாதுர்யத்தாலும் ஆந்திரத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக சந்திரபாபு நாயுடு உருவெடுத்தார். 1996 மக்களவைத் தேர்தலில் மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், வாஜ்பாய் தலைமையில் அமைந்த சிறுபான்மை அரசு 13 நாள்களில் கவிழ்ந்தது. அப்போது தேவே கௌடா தலைமையில் ஐக்கிய முன்னணி அரசை உருவாக்குவதில் சந்திரபாபு நாயுடு முக்கியப் பங்காற்றினார். இதன் மூலம் தேசியத் தலைவர் என்ற அந்தஸ்து அவருக்கு கிடைத்தது. பிரதமர் பதவியின் மீது அவருக்கு ஒரு கண் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதை அவர் வெளிப்படையாக இதுவரை கூறியதில்லை.
தேவே கௌடா அரசு கவிழ்ந்து, ஐ.கே.குஜ்ரால் தலைமையில் அமைந்த அரசிலும் நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இடம்பெற்றது.
அதன் பின் 1998-இல் வாஜ்பாய் தலைமையில் அமைந்த அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 12 எம்.பி.க்களைக் கொண்டிருந்த தெலுங்கு தேசம், அந்த அரசுக்கு ஆதரவு அளித்தது. இதற்கு கைமாறாக தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஜி.எம்.சி.பாலயோகியை மக்களவைத் தலைவராக பாஜக தேர்வு செய்தது.
அதன் பின் 1999-ஆம் ஆண்டில் வாஜ்பாய் அரசு 13 மாதங்களில் கவிழ்ந்தது. அதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார் சந்திரபாபு நாயுடு. இந்தக் கூட்டணி ஆந்திரத்தில் அமோக வெற்றி பெற்றது. அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் இருந்த 42 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 29 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக 6 இடங்களையும் கைப்பற்றின. எனினும், வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இடம்பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தார் நாயுடு.
அதன் பின் 2004 மக்களவைத் தேர்தலை சில மாதங்களுக்கு முன்பே நடத்தத் திட்டமிட்டது பாஜக அரசு. அதன்படி 2004 ஏப்ரல், மே மாதங்களில் மக்கலவைத் தேர்தலும், ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலும் நடத்தப்பட்டன. தேசிய அளவில் பாஜக கூட்டணி தோல்வியடைந்ததைப் போல், ஆந்திரத்திலும் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி தோல்வியைத் தழுவியது. நாட்டின் மிகச் சிறந்த முதல்வராகக் கருதப்பட்டிருந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் தோல்வி அப்போது பலருக்கும் அதிர்ச்சி தந்தது. 
அப்போது ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை நாயுடு செயல்படுத்தி இருந்தபோதிலும் அவை நகர்ப்புறங்களை மட்டுமே சென்றடைந்ததாகவும், கிராமப்புங்களை எட்டவில்லை என்றும் கருதப்பட்டது. மேலும், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மாநிலம் முழுவதும் மேற்கொண்ட நடைபயணமும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முக்கியக் காரணம் என்றுதான் கூற வேண்டும். அதைத் தொடர்ந்து, 2009-இல் நடைபெற்ற ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர். தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்தத் தொடர் தோல்விகளுக்குப் பிறகு பாஜகவுடனான உறவை முறிந்த சந்திரபாபு நாயுடு, இடதுசாரிகளுடன் கைகோத்தார். அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இதனிடையே, 2009-இல் ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குள் (செப்டம்பர்) நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில்  ஒய்.எஸ்.ஆர். இறந்தார். அதைத் தொடர்ந்து தன்னை ஆந்திர முதல்வராக்குமாறு அவரது மகன் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தினார். எனினும், அதை ஏற்காக காங்கிரஸ் மேலிடம், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அப்போதைய ஆந்திர பேரவைத் தலைவருமான கிரண்குமார் ரெட்டியை ஆந்திர முதல்வர் பதவியில் அமர்த்தியது.
இதனால் மனம் வெதும்பிய ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். அவரது இந்த நடவடிக்கையால் 2014 மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், படுதோல்வியைச் சந்தித்தது.
அந்தத் தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் அணி சேர்ந்தார் சந்திரபாபு நாயுடு. அப்போது இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக பவர் ஸ்டார் என்று தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் ஆந்திரத்தின் பிரபல நடிகரும், ஜனசேனை கட்சித் தலைவருமான பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்ததோடு, பிரசாரமும் செய்தார். இதனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சிஆட்சியைக் கைப்பற்றியது. மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு 16 இடங்களும், அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு 3 இடங்களும் கிடைத்தன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 9 இடங்களில் வென்றது.
2014 மே மாதம் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, ஜூன் மாதத்தில் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதல்வராக டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவும் பொறுப்பேற்றனர். சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் பாஜகவினரும், நரேந்திர மோடி அரசில் தெலுங்கு தேசம் கட்சியினரும் பங்கேற்று அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்றபோதிலும், சந்திரபாபு நாயுடுக்கு ஏராளமான சவால்கள் காத்திருந்தன. வளமை மிகுந்த ஹைதராபாத் நகரம், தெலங்கானாவுடன் இணைக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு, புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய நிர்பந்தம், அதற்கான நிதித் தேவை போன்றவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி எதிர்க்கட்சித் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய போராட்டங்களும், அவரது பாத யாத்திரைக்கு மக்களிடையே கிடைத்த எழுச்சி மிக்க வரவேற்பும் சந்திரபாபு நாயுடுவை நிலைகுலைய வைத்தன.
இந்தச் சூழலில் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி கடந்த ஆண்டு (2018) மார்ச் மாதம் விலகியது. அதன் பின் பாஜக மீதும் மத்திய அரசு மீதும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் சந்திரபாபு நாயுடு, பரம எதிரியாக விளங்கிய காங்கிரஸ் கட்சியுடன் கைகோக்கவும் முன்வந்தார். எனினும், தெலங்கானா சட்டப் பேரவைக்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதனால், காங்கிரஸுடன் ஆந்திரத்தில் கூட்டணி அமைக்கும் முடிவை நாயுடு கைவிட்டார்.
இந்நிலையில், ஒரு சுவாரஸ்யான திருப்பத்தை அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஆங்கில நாளிதழின் தெலுங்கு வலைதளம் நடத்திய அந்தக் கணிப்பில் முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்வியும் இடம்பெற்றுள்ளது. அதில், 40.8 சதவீதம் பேர் ஜெகன்மோகன் என்றும், 40.2 பேர் சந்திரபாபு என்றும் 15.9 சதவீதம் பேர் பவன் கல்யாண் என்றும் கூறியுள்ளனர். இந்தக் கருத்துக் கணிப்பு இப்போதைய ஆந்திர கள நிலவரத்தைப் பிரதிபலிக்கிறது என்பது உண்மையானால் இப்போது தெலுங்கு தேசமும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் சம பலத்தில் இருப்பதாகவே கொள்ள வேண்டும்.
ஆட்சியை இழக்கும் அளவுக்கு பலவீனமாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி அண்மையில் எடுத்த சில நடவடிக்கைகள் அதற்குக் கைகொடுத்துள்ளன என்று கூறலாம். அதாவது கடந்த சில மாதங்களில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தெலுங்கு தேசம் அரசு வேகமாக நிறைவேற்றியது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியா ரூ.10 ஆயிரம் மானியம் போன்ற திட்டங்கள் அவற்றில் அடங்கும். எனவே நாயுடு அரசுக்கு எதிரான அதிருப்தி அலை மங்கியிருப்பதாகத் தோன்றுகிறது.
எனினும், இத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக பவன் கல்யாண் விளங்குவார் என்பதை அடித்துக் கூற முடியும். அவர், ஆந்திர மாநிலத்தின் மற்றொரு பெரிய சமூகமான காபு பிரிவைச் சேர்ந்தவர். மாநில மக்கள்தொகையில் சுமார் 17 சதவீதமாக இருக்கும் இந்தப் பிரிவினருக்கு தங்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறை உண்டு. எனவே பவன் கல்யாணுக்கு காபு பிரிவின் வாக்குகள் கணிசமாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் விஜயகாந்த் செய்ததைப் போல் மற்ற கட்சிகளின் வாக்குகளைக் கணிசமாக பிரிக்க முடியும். அவர் பிரிக்கப் போவது தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு வாக்குகளையா?, அக்கட்சியின் எதிர் வாக்குகளையா? என்ற கேள்விக்கான பதிலாக ஆந்திரத் தேர்தல் முடிவுகள் அமையும்! ஒரு வகையில், ஆந்திரத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் முக்கிய பங்களிப்பை செய்யக் கூடும்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு அதிக இடம்?
கடந்த சில மாதங்களாக ஆந்திரத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்  கட்சியே அதிக இடங்களைப் பிடித்து, மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்து வந்துள்ளன. அதற்கேற்ப, ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து  அவந்தி சீனிவாச ராவ், ரவீந்திர பாபு உள்ளிட்ட எம்.பி.க்களும், தாசரி ஜெய்ரமேஷ் போன்ற மூத்த தலைவர்களும் விலகி, எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்தனர்.
இந்தச் சூழலில், வரும் மக்களவை மற்றும் ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி எந்தக் கட்சியுடனும் அணி சேராமல் தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோல், வரும் மக்களவை மற்றும் பேரவைத் தேர்தல்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. பவன் கல்யாணின் ஜனசேனைக் கட்சி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. 

கிங் மேக்கர் ஆவார்களா நாயுடுவும் ஜெகனும்?
மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, ஆந்திரத்தில் தற்போது 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இத்தேர்தலில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிடுகின்றன. இத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, அடுத்த மத்திய அரசின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகனும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


அதுவும் மக்களவைத் தேர்தலுக்குப் பின் இம்முறை எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன. எனவே, அந்தச் சூழலில் கணிசமான எம்.பி.க்களைக் கையில் வைத்திருந்தால் தேசிய அரசியலில் கோலோச்ச முடியும் என்று ஆந்திரத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் கருதுகின்றன. 
அதன்படி, மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நாயுடுவும், ஜெகன்மோகனும் மத்திய அரசைத் தீர்மானிக்கக் கூடிய கிங்மேக்கராக உருவெடுக்க முடியும் என்று அவர்களின் கட்சியினர் நம்புகின்றனர். இது சாத்தியமா? என்பது தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது தெரிந்து விடும்.

கடந்த மக்களவைத் தேர்தல்களில் கட்சிகள் வென்ற இடங்கள்
2004
காங்கிரஸ்    29
தெலுங்கு தேசம்    5
இந்திய கம்யூனிஸ்ட்    1
மார்க்சிஸ்ட் கம்யூ.    1
டிஆர்எஸ்    5
மஜ்லிஸ் கட்சி    1

2009
காங்கிரஸ்    29
தெலுங்கு தேசம்    6
டிஆர்எஸ்    2
மஜ்லிஸ் கட்சி    1

2014 (மக்களவை)
காங்கிரஸ்    2
தெலுங்கு தேசம்    16
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்    9
டிஆர்எஸ்    11
பாஜக    3
மஜ்லிஸ் கட்சி    1

2014 (ஆந்திர சட்டப் பேரவை)
தெலுங்கு தேசம்     102
பாஜக    4
ஒய்எஸ்ஆர்    67
மற்றவர்கள்    2
மொத்த இடங்கள்     175

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com