காங்கிரஸ் தோல்விக்கு அண்ணாவின் கூட்டணி வியூகமே முக்கிய காரணம்

வேலூர் விஐடி கல்வி நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான ஜி.விசுவநாதன், 1938 -ஆம் ஆண்டு குடியாத்தம் கொத்தகுப்பம் என்ற  குக்கிராமத்தில்
காங்கிரஸ் தோல்விக்கு அண்ணாவின் கூட்டணி வியூகமே முக்கிய காரணம்



வேலூர் விஐடி கல்வி நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான ஜி.விசுவநாதன், 1938 -ஆம் ஆண்டு குடியாத்தம் கொத்தகுப்பம் என்ற  குக்கிராமத்தில்  பிறந்தவர்.  சென்னை  லயோலா கல்லூரியில்  முதுநிலை  பொருளாதாரப்  பட்டப் படிப்பையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார். சட்டப் படிப்பின்போதே அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டார். இவருடை மேடைப் பேச்சையும், சிறந்த தலைமைப் பண்பையும் கண்ட அறிஞர் அண்ணா, 1967 மற்றும் 1971 மக்களவைத் தேர்தல்களில்  திமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பை  இவருக்கு  அளித்தார்.  இரண்டு முறையும் வந்தவாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். 
அதன் பிறகு, அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980 சட்டப்பேரவைத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியிலிருந்தும், 1991 தேர்தலில் ஆற்காடு தொகுதியிலிருந்தும் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வானார். தமிழக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இவர் தனது முதல் தேர்தல் அனுபவம் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது:
பள்ளிப்பருவத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மீது பற்று கொண்டிருந்த நான், பெரியார், ஈ.வி.கே.சம்பத், அண்ணா ஆகியோரது பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்க ஆதரவாளரானேன். 1957-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதன் முதலில் திமுக போட்டியிட்டபோது வேலூர் தொகுதியில் ம.பா.சாரதி நிறுத்தப்பட்டார். அப்போது ஊரீசு கல்லூரியில் இடைநிலைக் கல்வி (பிளஸ் 1க்கு பிறகு) பயின்று வந்த நான், அந்த தேர்தலில்தான் முதன் முதலில் வாக்களித்தேன்.
1962-இல் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றபோது திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தில் இருந்த நான், அவ்வாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் பேராசிரியர் அன்பழகன் வெற்றிக்காக பணியாற்றினேன். அப்போதுதான் முரசொலி செல்வம், மைனர் மோசஸ் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.
முதன் முதலில் தேர்தலில் போட்டி... பிறகு, 1967-இல் குடியாத்தத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் அண்ணா முன்னிலையில் பேச வாய்ப்பு கிடைத்தது. அந்த பேச்சைக் கேட்ட அண்ணா, மதுரை சென்றிருந்தபோது என்னைப்பற்றி விசாரித்துள்ளார். அங்கிருந்த அப்போதைய சென்னை மேயர் மைனர் மோசஸ் கூறியதை அடுத்து என்னை மக்களவை உறுப்பினர் ஆக்க அங்கேயே அண்ணா முடிவு செய்தார். பிறகு, அதே ஆண்டு நடந்த தேர்தலில் முதன்முதலில் வந்தவாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
தேர்தல் செலவு: அப்போது வாக்காளர்களுக்கோ, கட்சியினருக்கோ பணம் தரவேண்டிய அவசியம் இல்லாததால் எனக்கு மொத்தம் ரூ.50 ஆயிரமே தேர்தல் செலவானது. அதில் ரூ.4 ஆயிரம் கட்சி நிதியளித்தது. 1971-இல் மீண்டும் வந்தவாசி தொகுதியில் போட்டியிட்டபோதும் ரூ.1.25 லட்சம்தான் செலவானது. அப்போது, கட்சிக் கிளைகளில் ஏலச்சீட்டு நடத்தியும், பொதுக் கூட்டங்களில் துண்டு ஏந்தியும் தேர்தல் செலவுக்கு பணம் திரட்டுவர். தவிர, வசதி படைத்த வேட்பாளர்களிடம் பணம் பெற்று அதில் ஒரு பகுதியை ஊருக்காக செலவிட்டு மீதியை வசதியற்ற வேட்பாளருக்கு செலவிடுவதும் உண்டு. அவ்வாறு காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட பி.எஸ்.ராஜகோபால்நாயுடுவிடம் பணம் பெற்று, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜி.நடராஜனுக்கு செலவிடப்பட்டது மறக்க இயலாதது.
வாக்குக்கு பணம் கொடுத்தது... நான் அறிந்த வகையில் 1969-இல் தென்காசித் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில்தான் முதன்முதலில் ஒரு வாக்குக்கு ரூ.2 வீதம் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது. அந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சம்சுதீன் என்கிற கதிரவனுக்கு ஆதரவாக புலியறை எனும் சிற்றூரில் பணியாற்றினேன். வாக்குக்கு பணம்தர ஆன செலவை சி.பா.ஆதித்தனார் ஏற்றுக் கொண்டார். தற்போது வாக்குகளை பெற ஆயிரம், லட்சங்களைக் கடந்து கோடிகளில் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது மக்களாட்சிக்கு நல்லதல்ல.
வேட்பாளர் தேர்வில் பணம், சாதி... அண்ணா காலத்தில் பணம், சாதியை வைத்து அல்லாமல், ஆய்வுக்குழு மூலம் கட்சிக்காரர்களிடம் ஆய்வு நடத்தியே வேட்பாளர்களைத் தேர்வு செய்தனர். இந்நிலை மாறி 1970-க்கு பிறகு வேட்பாளராகப் பணமும், சாதியும் முக்கியம் என்றாகி விட்டது. இதனால், வசதியற்ற நல்ல வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே அரிதாகியுள்ளது. இந்
நிலையை தேர்தல் ஆணையம் மட்டும் தடுக்க முடியாது. அரசியல் கட்சிகளும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கூட்டணி அமைத்து போட்டி: தமிழகத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடும் நடைமுறை 1967-இல் தான் முதன்முதலில் ஏற்பட்டது. அப்போது பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸை வீழ்த்த எதிர்கட்சிகளாக இருந்த திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சுதந்திரா கட்சி, முஸ்லிம் லீக், தமிழரசுக் கழகம், சோஷலிஸ்ட் கட்சிகளை கூட்டணியாக இணைத்து அண்ணா போட்டியிடச் செய்தார். அந்தத் தேர்தலில் காமராஜர் உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள் 14 பேர் படுதோல்வி அடைந்தனர்.  கூட்டணி வியூகமே இதற்கு முக்கியக் காரணமாகும். அதிலிருந்து கூட்டணியாக போட்டியிடுவது வழக்கமாகி விட்டது. கூட்டணிகள் கொள்கை ரீதியானதாக அமைந்தால் நல்லது. ஆனால், தற்போது அந்த மாதிரியான கூட்டணி அமைவது இல்லை.
நிர்வாகத்திலும் மாற்றம் தேவை: நாடு பொருளாதார ரீதியாக முன்னேற விவசாயம், தொழில்துறை வளர்ச்சி அவசியமாகும். அதற்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும் போதாது, நிர்வாகத்திலும் மாற்றம் வரவேண்டும். ஊழலை ஒழித்து உற்பத்தித் துறையில் அதிக கவனம் செலுத்திட வேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த முடியும். அதற்கு முன் எல்லோருக்கும் நல்ல கல்வி வழங்க வேண்டியதும் அவசியமாகும்.
மழை வளம் குறைந்ததால் தரிசான விளை நிலங்களைப் பாதுகாக்க ஏரி, குளங்களை தூர்வாரவும், பாலாறு முதல் தாமிரவரணி வரையிலான நதிகளை இணைக்கவும் வேண்டும். ஒரு காலத்தில் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது. குடிமைப் பணிகள் தேர்வுக்கு பயிற்சிபெற வடஇந்தியாவில் இருந்துகூட சென்னைக்கு வந்தனர். அந்தநிலை மீண்டும் வர வேண்டும் என்றார் ஜி.விசுவநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com