தேசிய கட்சிகளின் கோட்டை கோவா!

நாட்டின் மேற்கு கடற்கரையோரத்தை ஒட்டி அமைந்திருக்கும் குட்டி மாநிலம் கோவா.
தேசிய கட்சிகளின் கோட்டை கோவா!

நாட்டின் மேற்கு கடற்கரையோரத்தை ஒட்டி அமைந்திருக்கும் குட்டி மாநிலம் கோவா. மொத்தமே 11.26 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 2 மக்களவைத் தொகுதிகளும் இருக்கின்றன. 
பனாஜி, மொர்முகோ ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளும் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு முறையே வடக்கு கோவா, தெற்கு கோவா என பெயர் மாற்றப்பட்டுள்ளன. 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, மாநிலத்தின் மக்கள்தொகையில் 66 சதவீதம் ஹிந்துக்களும், 25 சதவீதம் கோவா கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், 9 சதவீதம் பிற மதத்தவரும் இருக்கின்றனர். 
1952, 1957 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் கோவா இடம்பெறவில்லை. போர்த்துகீசியர் ஆதிக்கத்தில் கோவா, டாமன், டையூ ஆகிய பகுதிகள் இருந்ததுதான் காரணம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், சுமார் 15 ஆண்டுகள் போர்த்துகீசியர் இந்தப் பகுதிகளை ஆட்சி செய்திருக்கிறார்கள். 
கோவாவின் விடுதலைக்கு பல்வேறு தரப்பினரும் உழைத்திருக்கின்றனர். பிரபல சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியா, ஆசாத் கோமந்தக் தள், ஜகன்னாத்ராவ் ஜோஷி தலைமையில் சுமார் 3,000 பாரதிய ஜனசங்கத் தொண்டர்கள் அங்கம் வகித்த தேசிய விடுதலை இயக்கம் உள்பட ஏராளமானோர் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு எடுத்த பல்வேறு முயற்சிகளுக்குப் பின், சுமார் 36 மணிநேர போருக்குப் பிறகு, 1961-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி போர்த்துகீசிய வீரர்கள் இந்திய ராணுவ வீரர்களிடம் சரணடைந்தனர். போர்த்துகீசியர்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகள், விடுதலைக்குப் பிறகு மத்திய ஆட்சிப் பகுதியாகத் தொடர்ந்தன.
1962-ஆம் ஆண்டில் தான் கோவாவில் முதல் முறையாக மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றன. கோவாவை அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்துடன் இணைக்கக் கோருவதே தேர்தல் கோரிக்கையாக அமைந்தது. அந்தக் கோரிக்கையுடன் தேர்தலில் போட்டியிட்ட மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி எம்.ஜி.எம். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. மக்களவைத் தொகுதிகளையும் அக் கட்சியே கைப்பற்றியது. 
ஆனால், மகாராஷ்டிரத்துடன் இணைக்கும் கோரிக்கை நிறைவேறவில்லை. கோவா மக்களின் தனி கலாசாரத்தை வலியுறுத்தும் ஐக்கிய கோவன் கட்சியும், பல்வேறு அமைப்புகளும் கோவா தனி மாநிலமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தின. அதற்காக, 1967-இல் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் கோவா தனி மாநிலமாக நீடிக்க வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர். அத்துடன்,  மகாராஷ்டிரத்துக்கு ஆதரவான கோரிக்கையை எம்.ஜி.பி. கட்சி கைவிட்டது.
கோவாவின் தனி அடையாளத்தை வலியுறுத்திய ஐக்கிய கோவா கட்சி 1967, 1971 தேர்தல்களில் மொர்முகோ (இன்றைய தெற்கு கோவா) தொகுதியைக் கைப்பற்றியது. 1971 தேர்தலில் பனாஜி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அது கோவாவில் தேசியக் கட்சிகளின் எழுச்சிக்குத் தொடக்கமாகவும் அமைந்தது. 
நாட்டின் பிற மாநிலங்களின் ஆட்சிகள் தேசியக் கட்சிகளில் இருந்து மாநிலக் கட்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால், கோவாவின் ஆட்சி மாநிலக் கட்சிகளில் இருந்து தேசியக் கட்சிகளுக்கு நகர்ந்திருக்கிறது. 
எம்.ஜி.பி. சார்பில் கோவாவின் முதல் முதல்வராக தயானந்த் பந்தோட்கரும், அவருக்குப் பிறகு அவரது மகள் சசிகலா பந்தோட்கரும் ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்தனர். ஆனால் அதற்குப் பிறகு, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களால் சசிகலா பந்தோட்கர் காங்கிரஸில் சேர்ந்தார். பிறகு, பிராமணரல்லாத பிற ஹிந்துக்களின் கட்சியாக இருந்த எம்.ஜி.பி.யின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டது. 
குறிப்பாக, 1987-இல் கோவா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, தேசியக் கட்சிகளின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
எம்.ஜி.பி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட பனாஜி (வடக்கு கோவா) தொகுதியில் கடந்த 1999 முதல் பாஜக வெற்றி பெற்று வருகிறது. அத்தொகுதி எம்.பி.யான ஸ்ரீபாத் நாயக், மத்திய ஆயுஷ் துறை அமைச்சராக உள்ளார்.
மொர்முகோ (தெற்கு கோவா) தொகுதியைப் பொருத்தவரை, 1977 முதல் 1991 வரை காங்கிரஸ் கட்சியும், 1996-இல் கிறிஸ்தவர்களின் கட்சியாக அறியப்பட்ட கோவா ஐக்கிய ஜனநாயகக் கட்சியும், அதன் பிறகு காங்கிரஸ் நான்கு முறையும் (ஒரு இடைத்தேர்தல் உட்பட), இரண்டு பாஜகவும் கைப்பற்றின. 
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வடக்கு கோவா, தெற்கு கோவா ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. அக் கட்சியின் வாக்கு சதவீதமும் பெருமளவில் உயர்ந்தது. வடக்கு கோவா தொகுதியில் 2004 தேர்தலில் 56.84 சதவீதமாக இருந்த பாஜக வாக்கு சதவீதம், 2014-இல் 58.51 சதவீதமாக உயர்ந்தது. காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்பட்ட தெற்கு கோவா தொகுதியில் 48.44 சதவீதத்தை பாஜக கைப்பற்றியது.
கோவாவில் பாஜக வளர்ச்சியடையத் தொடங்கியது 1990-களின் தொடக்கத்தில் தான். பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நாடு முழுவதும் பாஜகவை பிற கட்சிகள் தனிமைப்படுத்திய நிலையில், அதனுடன் தைரியமாகக் கூட்டணி அமைக்க முன்வந்தது எம்.ஜி.பி. 1994-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 4 இடங்களையும், எம்.ஜி.பி. 10 இடங்களையும் கைப்பற்றின. எம்.ஜி.பி.யின் பிராமணரல்லாத ஹிந்துக்களின் வாக்குகளும், பாஜகவின் ஹிந்து வாக்கு வங்கியும் கோவாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. 1983-இல் கோவா கிறிஸ்தவர்களின் நலன் காக்க தொடங்கப்பட்ட ஐக்கிய கோவா ஜனநாயகக் கட்சியும் பிற்காலத்தில் பாஜக கூட்டணியில் இணைந்தது. இவையனைத்தும் கோவாவில் பாஜகவின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. 
பின்னர் 1999 தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்த பாஜக, 2000-ஆம் அக்டோபர் மாதம் முதல் 2005 வரை ஆட்சியில் இருந்தது. 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. கடந்த (2017) சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 12 இடங்களையும், காங்கிரஸ் 14 இடங்களையும் கைப்பற்றின. ஆனால், மனோகர் பாரிக்கரை முதல்வராக நியமித்தால் ஆதரவு தருவதாக கோவா பார்வர்டு கட்சியும், எம்.ஜி.பி.யும் அறிவித்ததால், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பாரிக்கர் மீண்டும் கோவா முதல்வரானார். சில தினங்களுக்கு முன்பு பாரிக்கர் காலமானதும், சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஆயுர்வேத மருத்துவர் பிரமோத் சாவந்த் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். கூட்டணிக் கட்சிகளான எம்.ஜி.பி., கோவா பார்வர்டு கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றியைத் தக்க வைத்துள்ளது.
கடந்த 2017 பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி உடைந்து இரண்டு அணிகளாயின. அப்போதைய முதல்வர் லக்ஷ்மிகாந்த் பார்சேகர் மீதான அதிருப்தியால் கூட்டணியை விட்டு வெளியேறிய எம்.ஜி.பி.யுடன், கொங்கணி மொழி போராட்டத்தை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ். கோவா மாநில முன்னாள் தலைவர் சுபாஷ் வெலிங்கர் தொடங்கிய கோவா சுரக்ஷா மஞ்ச், சிவசேனை கட்சிகள் கூட்டணி அமைத்து தனியாகப் போட்டியிட்டன. இதில், பாஜக 32.5 சதவீத வாக்குகளைப் பெற்று 13 இடங்களையும், எம்.ஜி.பி. தலைமையிலான கூட்டணி 11.3 சதவீத வாக்குகளுடன் 3 இடங்களையும் பெற்றன. முதல்வராக இருந்த லட்சுமிகாந்த் பார்சேகர், பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்தப் பிளவால், 28.4 சதவீத வாக்குகளே கொண்ட காங்கிரஸ் கட்சி 17 இடங்களைப் பிடித்து, தனிபெரும் கட்சியானது. "கோவாவை பாதுகாப்போம்' என்ற கோரிக்கையுடன் பாஜகவை எதிர்த்து களமிறங்கிய கோவா பார்வர்ட் கட்சி 3 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றினர். 
தற்போது, எம்.ஜி.பி.யும், கோவா பார்வர்ட் கட்சியும், சுயேச்சை எம்எல்ஏக்களும் இடம்பெற்றுள்ள பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் இணைந்து பெரும் பலத்துடன் தேர்தலை எதிர்கொள்கிறது. இது தவிர, அண்மையில் மறைந்த பாரிக்கரின் மக்கள் செல்வாக்கு, அவர் மறைவையொட்டி எழுந்துள்ள அனுதாபம், மத்திய அரசின் பணிகள், வடக்குத் தொகுதி எம்.பி.யான ஸ்ரீபாத் நாயக்கின் பணிகள் என பல்வேறு காரணிகள் ஆளும் கூட்டணியின் செல்வாக்கை அதிகரித்துள்ளன. குட்டி மாநிலமான கோவாவில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதிலும், பாஜக அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. கோவாவைச் சேர்ந்த ஸ்ரீபாத் நாயக், மனோகர் பாரிக்கர் ஆகிய இருவருக்கும் மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்பட்டன.
தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சி அங்கு தனித்து விடப்பட்டாலும், மத்திய அரசின் மீதான அதிருப்தி, சுமார் 25 சதவீதம் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வாக்குகள், கூட்டணி குழப்பங்கள் போன்றவை கைகொடுக்கும் என்று அக்கட்சி எதிர்பார்க்கிறது.
இரண்டு தேசிய கட்சிகளுடன் இணைந்தே தேர்தல் களத்தைச் சந்திக்க வேண்டிய நிலையில் மாநிலக் கட்சிகள் இருக்கின்றன. அதனால், மக்களவைத் தேர்தல் களம் தேசிய கட்சிகளுக்கே சாதகமாக உள்ளது.

எதிரொ−க்குமா பாரிக்கர் அலை?

"பாஜகவுக்கு வாக்களியுங்கள்' என்று கிறிஸ்தவ தேவாலயங்களில் மதபோதகர்கள் அறிவித்திருக்கிறார்கள் என்றால் அதை யாரும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள். ஆனால், கோவாவில் அது சாத்தியமானது. அந்த மாநில வாக்காளர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம் கொண்ட கோவா கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வாக்குகள் கணிசமாக பாஜகவுக்கு விழுந்து வெற்றிபெற வழிவகுத்தது. 
காரணம், அண்மையில் மறைந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், கோவா முன்னாள் முதல்வருமான மனோகர் பாரிக்கரின் செல்வாக்கு அத்தகையது.
இத்தனைக்கும், பாரிக்கர் தனது ஆர்எஸ்எஸ் பின்னணியை மறைத்துக்கொண்டதில்லை. மூன்று முறை முதல்வராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த நேரங்களிலும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு சீருடை அணிந்து கொண்டு சென்றிருக்கிறார். சங்க பரிவார அமைப்புகளுடனும் அவருக்கு நெருக்கம் உண்டு. தனது கருத்துகளையும் அவர் மறைத்துக்கொண்டதில்லை. சகிப்பின்மை விவகாரம் வெடித்தபோது "நம் நாட்டில் சகிப்பின்மை இல்லையென்று சொல்பவர்களுக்கு அவர்களது வாழ்நாளில் மிகப்பெரிய பாடம் புகட்டப்படும்' என்று பாரிக்கர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. பிறகு எந்த தனிநபரையும் தான் குறிப்பிடவில்லை என்ற விளக்கமளித்தார்.
2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று முதலில் குரலெழுப்பிய மாநில முதல்வர் பாரிக்கர் தான். அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது தான், பாகிஸ்தான் மீது முதல் முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குச் செல்வதை நரகத்துக்குச் செல்வதாக அவர் ஒப்பிட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது.
எளிமையானவராகவும், சுலபமாக அணுகக் கூடியவராகவும் அறியப்பட்ட பாரிக்கர், ஸ்கூட்டரில் தலைமைச் செயலகத்துக்கு பயணித்துள்ளதைக் கண்டு மக்கள் வியப்படைந்ததுண்டு. 
கோவாவில் பாஜக வளர்ச்சிக்கு அவரது பங்கு அபரிமிதமானது. 1994-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நான்கு பாஜக எம்.எல்.ஏ.க்களில் பாரிக்கரும் ஒருவர். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவும், சில மாதங்களிலேயே முதல்வராகவும் உயர்ந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் கோவாவில் இருக்கும் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவே வென்றது.
பாரிக்கர் மீது எந்த ஊழல் கறையும் படிந்ததில்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கனமாகவும், எளிமையானவராகவும் அறியப்பட்ட அவர், தனது அரசுப் பொறுப்புகளிலும் அதை பிரதிபலித்தார். பாதுகாப்புத் துறை அமைச்சராக அவர் இருந்தபோது மேற்கொண்ட செலவின கட்டுப்பாடுகள், ராணுவத்தின் தரத்தை மேம்படுத்தவே செய்தன.
கொள்கையைத் தாண்டி அனைவரிடமும் நட்பைக் கடைப்பிடித்தார். அதனால் தான் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த இடங்களையே பெற்றாலும், பாஜக ஆட்சியைப் பிடித்ததோடு, தற்போது வரை வெற்றிகரமாக செயல்படவும் முடிகிறது. கிறிஸ்தவர்களையும் பாஜகவின் பக்கம் ஈர்க்க வைத்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாட்களிலும் கூட, மூச்சுக்குழாயைப் பொருத்தியபடி தனது இறுதி வாழ்நாள் வரை (2019 மார்ச் 17) தொடர்ந்து அரசுப்பணிகளில் இயங்கி வந்த மனோகர் பாரிக்கரின் மறைவு கோவாவிற்கு மட்டுமல்ல, தேசிய அரசியலுக்கும் வெற்றிடம் தான்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் பாரிக்கர் காலமானது, கோவாவில் பாஜகவுக்கு இழப்பு தான். 

கோவா தொகுதிகளின் எம்.பி.க்கள்


வடக்கு கோவா
1962    எம்.ஜி.பி. 
1967    சுயேச்சை 
1971    காங்கிரஸ் 
1977, 1980    எம்.ஜி.பி. 
1984    காங்கிரஸ் 
1989     எம்.ஜி.பி. 
1991     காங்கிரஸ் 
1996     எம்.ஜி.பி. 
1998     காங்கிரஸ் 
1999, 2004, 
2009, 2014     பாஜக

தெற்கு கோவா

1962    எம்.ஜி.பி.
1967, 1971     ஐக்கிய கோவன் கட்சி. 
1977, 1980, 1984, 
1989, 1991     காங்கிரஸ். 
1996    ஐக்கிய கோவா       ஜனநாயகக் கட்சி. 
1998    காங்கிரஸ்.    
1999     பாஜக.    
2004, 2007    (இடைத்தேர்தல்), 
2009     காங்கிரஸ்.
2014    பாஜக.

முக்கிய தலைவர்கள் யார்?

தயானந்த் பந்தோட்கர்

கோவா சுதந்திரப் போராட்ட வீரரும், மாநிலத்தின் (அப்போது மத்திய ஆட்சிப் பகுதி) முதல் முதல்வருமான இவர், சுரங்கத் தொழிலதிபர். மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சேர்ந்தவர். கோவாவை மகாராஷ்டிர மாநிலத்துடனும், டாமன் மற்றும் டையூவை குஜராத்துடனும் இணைக்க வேண்டும் என்று குரலெழுப்பியவர். ஆனால், அந்த முயற்சி வெற்றியடைவில்லை.

எடுவர்டோ ஃபலைரோ

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான இவர், ஐந்து முறை 
மக்களவை எம்.பி.யாகவும், 1986-89 , 1991-96 ஆண்டுகளில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியாக 
இடம்பெற்றவர். 
1999-இல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபலைரோ, கோவா அரசின் வெளிநாட்டு வாழ் இந்தியர் துறை ஆணையராக 2006-இல் நியமிக்கப்பட்டவர்.


ஜாக் டிசெக்வேரா

கோவாவின் தலைவிதியை நிர்ணயித்த "கோவா பொது வாக்கெடுப்பின் தந்தை' என்று அழைக்கப்படுபவர். கோவாவின் தனி அடையாளத்துக்காகப் போராடிய யூனைடட் கோவன்ஸ் கட்சியின் (ஐக்கிய கோவன் கட்சி) நிறுவனர்களில் ஒருவர். கோவாவை தனி மாநிலமாக அறிவித்த நாளான மே 31-இல் ஆண்டுதோறும் செக்வேரா நினைவுகூரப்படுகிறார்.

பிரதாப்சிங் ராவ் ராணே

கோவாவின் 80 வயது வயது நிரம்பிய மூத்த அரசியல்வாதியும், ஆறு முறை முதல்வராக இருந்தவருமான இவர், 1970-களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவரது ஆட்சியில் கதம்பா போக்குவரத்துக் கழகம், கோவா பல்கலைக்கழகம், கோவா மேலாண்மை கல்வி நிறுவனம் போன்றவை தொடங்கப்பட்டன.

ஸ்ரீபாத் நாயக்

பாஜகவைச் சேர்ந்த இவர், மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் (தனி பொறுப்பு). கடந்த 20 ஆண்டுகளாக தெற்கு கோவா தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆயுர்வேத மருந்துகளைச் சொல்லாத டாக்டர்களை தேச விரோதிகள் என்று இவர் சொன்னது சர்ச்சையைக் கிளப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com