வந்தாரை வெற்றி பெற வைக்கும் விஐபி தொகுதிகள்!

அறிந்த முகம், நம்பிக்கை, நாணயம், சாதி என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உள்ளூர் வேட்பாளர்களை மதிப்பீடு செய்யும் வாக்காளர்கள், வேறு தொகுதியிலிருந்து வரும் பிரதான கட்சிகளின்
வந்தாரை வெற்றி பெற வைக்கும் விஐபி தொகுதிகள்!
Updated on
2 min read

 
அறிந்த முகம், நம்பிக்கை, நாணயம், சாதி என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உள்ளூர் வேட்பாளர்களை மதிப்பீடு செய்யும் வாக்காளர்கள், வேறு தொகுதியிலிருந்து வரும் பிரதான கட்சிகளின் விஐபி வேட்பாளர்களுக்கும் வெற்றிக் கனியை வழங்கத் தவறுவதில்லை.  
தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பெரும்பாலானோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து விட்டனர். இதில், போட்டியிடும் வேட்பாளர்களின் மூலம் சில தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
அந்த வகையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் போட்டியிடும் கன்னியாகுமரி, கனிமொழி (திமுக) மற்றும் தமிழிசை செளந்தரராஜன்(பாஜக) போட்டியிடும் தூத்துக்குடி, ஹெச்.ராஜா(பாஜக), கார்த்தி சிதம்பரம் (காங்.,) போட்டியிடும் சிவகங்கை, ஈவிகேஎஸ்.இளங்கோவன்(காங்.),  துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் (அதிமுக), மற்றும் தங்கத் தமிழ்செல்வன்(அமமுக) ஆகியோர் போட்டியிடும் தேனி, சு.வெங்கடேசன் (மா.கம்யூ.) போட்டியிடும் மதுரை, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்(பாஜக) போட்டியிடும் ராமநாதபுரம், திருநாவுக்கரசர் (காங்.) போட்டியிடும் திருச்சி, ஜி.செந்தமிழன் (அமமுக) போட்டியிடும் ஆரணி, மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி (பாமக) மற்றும் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்(அமமுக) போட்டியிடும் தருமபுரி, சுதீஷ் (தேமுதிக) போட்டியிடும் கள்ளக்குறிச்சி, திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்,  பாரிவேந்தர் (ஐஜேகே) போட்டியிடும் பெரம்பலூர், தமிழச்சி தங்கபாண்டியன்(திமுக) போட்டியிடும் தென் சென்னை, திமுக வேட்பாளர்களான முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் போட்டியிடும் நீலகிரி, ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை என 16 தொகுதிகள் இந்த முறை விஐபி தொகுதிகளாக உள்ளன.
இந்த 16 தொகுதிகளில், கன்னியாகுமரி, தேனி, சிவகங்கை, தருமபுரி உள்ளிட்ட சில தொகுதிகளிலுள்ள வேட்பாளர்கள் நீங்கலாக பிற நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் வேறு தொகுதியில் வசிப்பவர்களாகவும், மற்றொரு தொகுதியை பூர்வீகமாக கொண்டவர்களாகவும் உள்ளனர்.
பெரம்பலூரைச் சேர்ந்த ஆ.ராசா, சென்னையில் வசிக்கும் கனிமொழி, ஹெச்.வசந்தகுமார், ஈவிகேஎஸ்.இளங்கோவன், பாரிவேந்தர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் வெவ்வேறு தொகுதிகளில் களம் இறங்கியுள்ளனர்.  வெளியூர் வேட்பாளராக இருந்தால் எளிதில் அணுக முடியாது, குறைகளை  தெரிவிக்க  முடியாது போன்ற உள்ளூர் வாசிகளின் பிம்பங்களைக் கடந்து, இந்த விஐபி தொகுதி வேட்பாளர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஆனாலும் சாதி என்ற கட்டுப்பாடு பெரும்பாலான விஐபி தொகுதிகளுக்கும் பொருந்துவதாகவே உள்ளன.
தனித் தொகுதியாக இருந்தவரை பெரம்பலூரில் களம் இறங்கிய ஆ.ராசா, பொதுத் தொகுதியாக மாறிய பின் நீலகிரிக்கு மாறிவிட்டார். சென்னையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நாடார்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதற்காக கனிமொழியும், தமிழிசையும் தூத்துக்குடியை தேர்வு செய்துள்ளனர். நாயக்கர் சமுதாய மக்களின் வாக்குகளை  எதிர்நோக்கியே ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனியில் களம் காண்கிறார். முக்குலத்தோரின் வாக்குகளை நம்பி நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்தை குறிவைத்துள்ளார்.
 விஐபி தொகுதிகளைப் பொருத்தவரை, தொகுதி மக்களுக்கு வேட்பாளர் என்ன செய்வார், அணுகுமுறை எப்படி இருக்கும், தொகுதிக்கான வளர்ச்சிக்கு அவர் வைத்துள்ளத் திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் வாக்காளர்கள் சிந்திப்பதில்லை என்பதே கடந்த கால வரலாறு. உள்ளூர்வாசிகளிடம் நம்பிக்கை, நாணயத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள், சின்னம், விஐபி அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் வெளியூர்களிலிருந்து களம் இறங்கும் நட்சத்திர வேட்பாளர்களை வாழ வைத்து வருகின்றனர். கடும் நெருக்கடியில் வெற்றிக்கு போராடுவதற்குப் பதிலாக, எளிமையாக வெற்றி பெறும் இடங்களைத் தேடி பாதுகாப்பாக களம் காண்பதே விஐபி வேட்பாளர்களுக்கு கெளரவம் போலும்!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com