இந்திய துணைப் பிரதமர்கள் அங்கீகாரமில்லாத அதிகாரம்!

ஜவாஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை இதுவரை 14 பிரதமர்கள் பொறுப்பு வகித்திருக்கின்றனர். 
நேரு, இந்திராவுடன் சர்தார் படேல்.
நேரு, இந்திராவுடன் சர்தார் படேல்.

ஜவாஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை இதுவரை 14 பிரதமர்கள் பொறுப்பு வகித்திருக்கின்றனர். 
பிரதமருக்கு அடுத்த இடமாகக் கருதப்படும் துணை பிரதமர் பதவியை இதுவரை 7 தலைவர்கள் மட்டுமே அலங்கரித்துள்ளனர். பிரதமர், அமைச்சர்கள், முதல்வர் போன்ற பதவிகளுக்கு உள்ள 
அதிகாரங்களைப் போன்று துணை பிரதமருக்கோ, துணை முதல்வருக்கோ அரசமைப்புச் சட்ட ரீதியிலானஅங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்பதே உண்மை. 

சிக்கலான, அரசியல் நிலையற்ற நேரங்களில் நிலவிய சூழல்களுக்கு, துணை பிரதமர் பதவி கடிவாளமாக அமைந்திருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டியுள்ளது. சிலரின் பதவியாசைக்கு  தீனியும் போட்டிருக்கிறது. எனினும், மத்திய அமைச்சரவையில் இரண்டாவது இடங்களாகக் கருதப்படும் நிதித்துறை, உள்துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சரவைகளில் பொறுப்பு வகித்த மூத்த அமைச்சர்கள், மரியாதை நிமித்தமாகவே துணை பிரதமர் பதவியை அலங்கரிக்க முடிந்தது.
என்றாலும், முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான ஆட்சியில் துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபபாய் படேலும், இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சியில் சில காலம் இரண்டாவது இடத்திலிருந்த மொரார்ஜி தேசாயும், வாஜ்பாய் அரசில் லால் கிருஷ்ண அத்வானியும் தங்களது பதவிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார்கள். மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசில் ஒரே நேரத்தில் செளதரி சரண்சிங்கும்,  பாபு ஜகஜீவன்ராமும் துணை பிரதமர்களாக பதவி வகித்தார்கள்.
அத்தகைய பதவியின் காலமும், அவர்களின் காலத்தில் நிலவிய சூழலும், அந்தத் தலைவர்களின் அறிமுகமும் இங்கே:

சர்தார் வல்லபபாய் படேல்
15 ஆகஸ்ட் 1947 முதல் 15 டிசம்பர் 1950 வரை
நாட்டின் முதல் துணை பிரதமரும், முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேல், காந்திஜியின் அணுக்கத் தொண்டர். இடைக்கால அரசு அமைவதற்கு முன்னால் படேல் பிரதமராக காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆதரவளித்த போதும், காந்திஜியின் தலையீட்டால் துடிப்புமிக்க ஜவாஹர்லால் நேரு, பிரதமரானார். நாட்டில் உள்ள 565 சமஸ்தானங்களும் சுதந்திர இந்தியாவுடன் இணைவதற்கு படேல் காரணமாக இருந்தார். குஜராத் மாநிலத்தின் ஜூனாகட் சமஸ்தானமும், ஹைதராபாத் நிஜாமும் இந்தியாவுடன் சேர மறுத்தபோது உறுதியான நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்பட்டார். தனது பதவிக்காலம் முழுவதும் நேருவுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த படேல், குஜராத்தில் சோமநாதர் ஆலய புனர்நிர்மாணத்தில் முக்கியப் பங்கு வகித்தார். 1950 டிசம்பர் 15-ஆம் தேதி பம்பாயில் மாரடைப்பால் காலமானார் படேல். அதற்குப் பிறகு நேருவின் ஆட்சி முழுவதும் துணை பிரதமர் பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை.

மொரார்ஜி தேசாய் 
21 மார்ச் 1967 முதல் 6 டிசம்பர் 1969 வரை


நேரு அமைச்சரவையில் 1958 முதல் 1963 வரை நிதியமைச்சராகப் பணியாற்றிய மொரார்ஜி தேசாய், 1964-இல் நேரு மறைந்த பிறகு பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தார். ஆனால், லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1966-இல் தாஷ்கண்டில் பாகிஸ்தானுடன் நடந்த பேச்சுவார்த்தைக்காகச் சென்றிருந்த லால் பகதூர் சாஸ்திரி, அங்கு திடீரென மரணமடைந்தார். இதனால், பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டி ஏற்பட்டது. இதில், இந்திரா காந்தி வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்றார். மொரார்ஜி தேசாய்க்கு துணை பிரதமர் பதவியும், நிதித்துறையும் அளிக்கப்பட்டன. ஆனால், நிதித்துறையை தன்னிச்சையாக எடுத்துக்கொண்ட இந்திரா காந்தி, வங்கிகளை தேசியமயமாக்குதல் போன்ற சீர்திருத்தங்களைத் தன்னிச்சையாக எடுத்தார். இதனால், அதிருப்தியடைந்த மொரார்ஜி தேசாய், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிராக பிரதமர் இந்திரா காந்தி வி.வி.கிரியை நிறுத்தி வெற்றிபெறச் செய்ததும் ஆளும் காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்துவிட்டன. பிற்காலத்தில், இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய எதிர்க்கட்சிகளின் ஜனதா அரசில், நாட்டின் 4-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றார் மொரார்ஜி தேசாய். 

செளதரி சரண் சிங் 
1977 மார்ச் 24 முதல் 1979 ஜூலை 28 வரை


மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசில் துணை பிரதமரானார் செளதரி சரண் சிங். முதல் 16 மாதங்கள் உள்துறை அமைச்சராகவும், அதன் பிறகு நிதியமைச்சராகவும் பணியாற்றினார். ஆரவாரத்துடன் தொடங்கிய ஒற்றுமை நீண்ட நாள் நீடிக்கவில்லை. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் ஜனசங்க பிரமுகர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் ஆர்எஸ்எஸ் பின்னணியை முன்வைத்து  முன்னாள் சோஷலிஸ்ட் கட்சியினரும், முன்னாள் பாரதிய லோக் தள் கட்சியினரும் பிரச்னையைக் கிளப்பினார்கள். இரு தரப்பினருக்குமிடையே நடைபெற்ற மோதல்களின் காரணமாகவும், சில தலைவர்களின் பதவியாசை காரணமாகவும் விரைவிலேயே ஜனதா கட்சி உடைந்தது. இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்த இந்திரா காந்தி, சரண் சிங்குக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து கணிசமான உறுப்பினர்களுடன் மொரார்ஜி அரசைக் கவிழ்த்த சரண் சிங், நாட்டின் 5-ஆவது பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், இரு நாள்களுக்குள் சரண் சிங்கிற்கு ஆதரவில்லை என்று இந்திரா அறிவித்ததும், அதனால் ஒருநாள் கூட நாடாளுமன்றத்தைச் சந்திக்காத பிரதமர் என்ற அடைமொழியுடன் சரண் சிங் பதவியை இழந்தது வரலாறு. 

பாபு ஜகஜீவன் ராம்
1977 மார்ச் 24 முதல் 1979 ஜூலை 28 வரை


பிகாரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ஜகஜீவன் ராம், காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரத்துக்காகப் போராடிய அதே நேரத்தில், தீண்டாமைக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். 1946-இல் நேரு தலைமையிலான இடைக்கால அரசில் இடம்பெற்ற அமைச்சர்களில் மிகவும் இளையவர் இவரே. நேரு, இந்திரா காந்தி அமைச்சரவைகளில் இடம்பெற்ற ஜகஜீவன் ராம், 1969-இல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டபோது காங்கிரஸ் (இந்திரா) பிரிவுக்குத் தலைவரானார். இவர் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியும், பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது 1971-இல் நடந்த யுத்தமும் முக்கியமான நிகழ்வுகள். நெருக்கடி நிலைக்குப் பின்னர் நடந்த தேர்தலுக்கு முன்பு அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்களுடன் விலகி, ஜனநாயக காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் ஜனதா கூட்டணியில் போட்டியிட்டார். 1977-இல் ஜகஜீவன் ராமையும் துணை பிரதமராக அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அறிவித்தபோது, முதலில் அதை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர், ஜெயபிரகாஷ் நாராயணனின் வற்புறுத்தலால் பதவியேற்றுக்கொண்டார். பாதுகாப்புத் துறை அவருக்கு அளிக்கப்பட்டது. ஜனதா அரசு கவிழ்ந்த பிறகு, 1981-இல் காங்கிரஸ் (ஜகஜீவன் ராம்) என்ற கட்சியைத் தொடங்கினார். 1986-இல் காலமாகும் வரை மக்களவை எம்.பி.யாக இருந்தார்.

யஷ்வந்த்ராவ் சவாண் 
28 ஜூலை 1979 முதல் 14 ஜனவரி 1980 வரை


மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த யஷ்வந்த்ராவ் சவாண், ஒத்துழையாமை இயக்கத்தின்போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். 1946-இல் பம்பாய் மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சவாண், பின்னர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான பம்பாய் அரசில் அமைச்சராக இருந்தார். 1960-இல் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் முதல்வராகப் பொறுப்பேற்றார். நேரு அமைச்சரவையில் கிருஷ்ணமேனனுக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற சவாண், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி அரசுகளிலும் இடம்பெற்றார். உள்துறை, நிதி, வெளியுறவு துறைகளில் பொறுப்பு வகித்த சவாண், 1977 தேர்தலுக்குப் பிறகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்னர் தேர்தல் தோல்விக்கு இந்திரா காந்தியைக் காரணம் காட்டி, கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் தலைமையில் சில தலைவர்கள் வெளியேறினர். அவர்களின் பங்களிப்புடன், சரண் சிங் ஆட்சியமைத்தார். யஷ்வந்த்ராவ் சவாண் துணை பிரதமரானார். உள்துறைக்கு பொறுப்பு வகித்தார். ஆறு மாதங்களுக்குப் பின் நடைபெற்ற தேர்தலில், அக்கட்சியில் மகாராஷ்டிரத்தில் இருந்து சவாண் மட்டுமே எம்.பி.யானார். பின்னர், மீண்டும் காங்கிரஸில் இணைந்து 8-ஆவது நிதிக்குழு தலைவரானார்.

செளதரி தேவி லால்
2 டிசம்பர் 1989 முதல் 21 ஜூன் 1991 வரை


ஹரியாணா (அன்றைய பஞ்சாப்) மாநிலத்தில் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த செளதரி தேவி லால், தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு 1930-இல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார்.  சுதந்திரத்துக்குப் பின்னர் பிரபலமான விவசாயத் தலைவராக விளங்கினார். ஹரியாணா மாநில உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த தேவி லால், 1971-இல் காங்கிரஸை விட்டு விலகினார். நெருக்கடி நிலைக்கு எதிரான அவரது போராட்டம் காரணமாக ஹரியாணாவின் சிங்கம் என்று அழைக்கப்பட்டார்.1980-களில் லோக் தளம் என்ற கட்சியைத் தொடக்கினார். 1987-இல் லோக் தளம் தலைமையிலான கூட்டணி ஹரியாணாவில் உள்ள 90 இடங்களில் 85 இடங்களைக் கைப்பற்றியது. தேவி லால் மீண்டும் முதல்வரானார். 1989 மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் சிகர் மற்றும் ஹரியாணாவில் ரோட்டக் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற தேவிலால், 1989 டிசம்பர் முதல் 1990 நவம்பர் வரை வி.பி.சிங் தலைமையிலான அரசிலும், அதன் பின்னர் 1991 ஜூன் வரை சந்திரசேகர் தலைமையிலான துணை பிரதமராக பதவி வகித்தார். விவசாயத் துறைக்குப் பொறுப்பேற்றார். 2001-இல் தில்லியில் காலமானார்.

லால் கிருஷ்ண அத்வானி 
5 பிப்ரவரி 2002 முதல் 22 மே 2004 வரை


நாட்டின் 7-ஆவது துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி (பிறப்பு 1927) இன்றைய பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தார். சிறுவயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த அவர், பின்னர் பாரதிய ஜனசங்கத்தில் இணைந்தார். நெருக்கடி நிலைக்குப் பிறகு அமைக்கப்பட்ட ஜனதா கட்சி ஆட்சியில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக அத்வானி பணியாற்றினார். 1980-இல் பாஜக தொடங்கப்பட்டது. 1976-89 காலகட்டத்தில் மாநிலங்களவை எம்.பி.யாகவும், 1989 முதல் மக்களவை எம்.பி.யாகவும் அத்வானி இருந்து வருகிறார். 1984-இல் 2 எம்.பி.க்கள் பெற்றிருந்த பாஜக, ஆட்சியில் அமர்வதற்கு அத்வானி மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம். ராமஜென்ம பூமி ரத யாத்திரை மேற்கொண்ட அவர், கட்சியின் வெற்றிகளை அதிகரித்தார். 1998 தேர்தலில் வென்று 13 மாதங்களும், 1999 முதல் 2004 வரை நீடித்த வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசில், உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வாஜ்பாயின் வயோதிகம் காரணமாக, 2002-இல் துணை பிரதமராக நியமிக்கப்பட்ட அத்வானிக்கு பணியாளர் நலத்துறை, நிலக்கரி உள்ளிட்ட துறைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டன. 2004-இல் பாஜக அரசு தோல்வியடைந்ததும் அத்வானி எதிர்க்கட்சித் தலைவரானார். 2009-இல் அத்வானி தலைமையில் பாஜக தேர்தலை சந்தித்தாலும், அப்போது வெற்றி பெறவில்லை. 2013-இல் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்து, பெரும்பாலும் ஒதுங்கியுள்ள அத்வானி, கடந்த 2014 தேர்தலில் இதுவே தனது கடைசித் தேர்தல் என்று அறிவித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com