

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும் மாநிலங்களில் முக்கியமானது மத்தியப் பிரதேசம். கடந்த முறை பாஜகவின் அமோக வெற்றிக்கு மோடி அலையும், ஹிந்தி பேசும் மாநிலங்களில் கிடைத்த பெருவாரியான தொகுதிகளுமே முக்கியக் காரணம்.
மத்தியப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 27 இடங்களில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து, மத்தியில் அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை வழங்கியதில் மத்தியப் பிரதேச வாக்காளர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். கடந்த மக்களவைத் தேர்தலில் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அதுவும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த தேர்தலில் பாஜகவுக்கு மத்தியப் பிரதேசத்தில் அந்த அளவுக்கு பலமான செல்வாக்கு இருந்தது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்து, காங்கிரஸிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்களும், பாஜகவுக்கு 109 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 116 தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை. சமாஜவாதி (ஒரு எம்எல்ஏ), பகுஜன் சமாஜ் (2) சுயேச்சைகள் (4) ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. இதன் மூலம் சுமார் 14 ஆண்டுகளாக இருந்த பாஜக ஆட்சி கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு ரத்லம் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து அத்தொகுதியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவே கிடைத்தால்...:
சட்டப் பேரவைத் தேர்தலை முடித்த கையோடு மத்தியப் பிரதேச மாநிலம் மக்களவைத் தேர்தலையும் சந்திக்கிறது. எனவே, சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு மக்களவைத் தேர்தலில் எத்தகைய முடிவுகள் கிடைக்கும் என்பது தொடர்பான கணக்கீடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சட்டப் பேரவை தேர்தலின்போது வாக்களித்தது போலவே மக்களவைத் தேர்தலிலும் மக்கள் மாறாமல் வாக்களித்தால், பாஜக 11 தொகுதிகளை இழக்கும். இந்தத் தொகுதிகள் அப்படியே காங்கிரஸூக்கு சென்றுவிடும். இந்தக் கணக்கீட்டின்படி பார்த்தால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 16 இடங்களும், காங்கிரஸூக்கு 13 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் அப்படியே மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், ஒரே நேரத்தில் மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் போதும் கூட இரு தேர்தல்களிலும் வெவ்வேறு கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இது, இந்தியாவின் கடந்த கால வரலாறு.
மோடியின் செல்வாக்கு
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பிரதமர் மோடிக்கு மத்தியப் பிரதேசத்தில் 63.5 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தாலும், பிரதமர் மோடிக்கு அந்த மாநிலத்தில் ஆதரவு அதிகரித்தே உள்ளது. அதே நேரத்தில் தங்கள் மாநில எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த மத்தியப் பிரதேச மக்களின் மதிப்பீடு பாஜகவுக்கு பாதகமாக உள்ளது. 75 சதவீதம் பேர் தங்கள் எம்.பி.க்களின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத்தின் செல்வாக்கு ஆட்சி அமைந்த சில மாதத்திலேயே சற்று சரிந்துள்ளது. 40 சதவீத மக்களே அவரது செயல்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.
ஹிந்துத்துவ குற்றச்சாட்டு:
ஹிந்துத்துவக் கொள்கையை முன்னெடுக்கிறது. நாட்டில் மதரீதியாக பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது ஆகியவை பாஜக மீது காங்கிரஸ் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு. ஆனால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த விஷயத்தில் பாஜகவுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோலவே காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது.
பசுக்களைக் கடத்திச் சென்றதன் மூலம் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக மத்தியப் பிரதேசத்தின் மால்வா மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இருவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். பசுப் பாதுகாப்பு விஷயத்தில் அந்த மாநில காங்கிரஸ் அரசு கூடுதல் கவனம் எடுத்துச் செயல்படுவது இது முதல்முறையல்ல. இந்த சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பே கந்த்வா மாவட்டத்தில் பசுவதைக் குற்றச்சாட்டில் 3 பேரை மாநில போலீஸார் கைது செய்தனர். இது அந்த மாநில காங்கிரஸ் அரசு மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. எனினும், இந்தக் கொள்கைதான் மக்களிடம் தேர்தல் நேரத்தில் எடுபடும் என்பதில் முதல்வர் கமல்நாத் உறுதியாக இருந்தார்.
வாக்கு சதவீதம் ஒப்பீடு
மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதமும், அவை வென்ற தொகுதிகளின் ஒப்பீடும் சற்று சுவாரசியமானது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி 40.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் பாஜக 41 சதவீத வாக்குகளைப் பெற்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 5 சதவீத வாக்குகளையும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்ளிட்ட இதர கட்சிகள் 4.5 சதவீத வாக்குகளையும் பெற்றன.
விகிதாச்சார அடிப்படையில் காங்கிரûஸவிட பாஜகவுக்கு சற்று கூடுதலாகவே வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் தொகுதி அடிப்படையில் காங்கிரஸூக்கு 114 தொகுதிகளும், பாஜகவுக்கு 109 இடங்களும் கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சி இரு இடங்களிலும், சமாஜவாதி கட்சி ஓரிடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது பாஜக 56 தொகுதிகளை இழந்திருந்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி அதே அளவு தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. சட்டப் பேரவைத் தேர்தலில் பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி, தோல்விகள் தீர்மானிக்கப்பட்டன.
கடந்த 2013 சட்டப் பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது பாஜகவின் வாக்கு வங்கி 3.88 சதவீதமே சரிந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸின் வாக்கு வங்கி 4.59 சதவீதம் அதிகரித்தது. இந்த இழந்த வாக்கு வங்கியை மட்டுமே மீட்டுவிட்டால் மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட முடியும் என்பதே பாஜகவின் கணக்காக உள்ளது. அதனைக் குறிவைத்து மாநிலத்தில் பாஜக பிரசாரத் திட்டங்களை வகுத்துள்ளது.
நட்சத்திர வேட்பாளர்கள்
மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் செளகானை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. அதே நேரத்தில் மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யாவை வேட்பாளராக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்களில் சிலர் கூறியுள்ளனர். "ஹிந்து தீவிரவாதம்' என்று பேசிய திக்விஜய் சிங்குக்கு எதிராக சாத்வி பிரக்யாவை நிறுத்துவதே தேர்தலில் அவருக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று பாஜகவில் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்தியப் பிரதேசத்தின் மொரினா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த தேர்தலில் குவாலியர் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அவருக்கு தொகுதி மாற்றித் தரப்பட்டுள்ளது. குவாலியரில் போட்டியிட்டால் தோல்வியடைந்துவிடுவார் என்ற அச்சத்திலேயே தோமர் தொகுதி மாறிவிட்டார் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மொரினா தொகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினரான அனுப் மிஸ்ரா இப்போது எம்.பி.யாக உள்ளார். அவரது பெயர் இதுவரை பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து 8 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன். மக்களவையில் மிக நீண்டகாலமாக இருக்கும் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் அவரையே சாரும். அவருக்கு இப்போது 75 வயதாவதால், இந்த முறை அவருக்கு தொகுதி ஒதுக்கப்படுவது சந்தேகம் என்றே தெரிகிறது. இந்தூர் தொகுதிக்கு இதுவரை பாஜக வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பதால் சுமித்ரா மகாஜன் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது இப்போது வரை விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கி
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் வாக்கு வங்கியாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் கருதப்படுகின்றனர். குறிப்பாக, பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் செளகானுக்கு இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. அந்த செல்வாக்கை குறைக்கும் வகையிலான திட்டத்தை முதல்வர் கமல்நாத் கையிலெடுத்தார். அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 13 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதுதவிர பொதுப் பிரிவில் பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்துவதாக அறிவித்தார். இதன் மூலம் உயர்ஜாதி வாக்குகளையும் கவரும் வகையில் "ஒரே கல்லில் இரண்டு மாங்காயை' குறிவைத்தார் முதல்வர் கமல்நாத். ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அதிகரிப்புக்கு மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
மத்தியப் பிரதேசத்தில்தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 சதவீதமும், மலைவாழ் மக்களுக்கு 20 சதவீதமும் ஏற்கெனவே இடஒதுக்கீடு உள்ளது. இவை அனைத்தையும் சேர்க்கும்போது மொத்த இடஒதுக்கீடு 60 சதவீதத்தை தாண்டுகிறது. இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவு குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்நாத், "ஏற்கெனவே தமிழ்நாட்டில் 69 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது' என்று சுட்டிக்காட்டினார்.
சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியின் தாக்கம்
உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி களத்தில் இறங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிரான இந்தக் கூட்டணியை, மத்தியப் பிரதேசத்தில் வலுவாக உள்ள காங்கிரஸ் கட்சி தங்கள் அணியில் இணைக்க முடியாதது பெரும் பின்னடைவுதான். மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளிலும், சமாஜவாதி 27 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்தக் கூட்டணியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது என்றாலும், காங்கிரஸூக்கு கிடைக்கும் வாக்குகளைத்தான் பெருமளவில் பிரிக்கும் என்பதால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும். சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸூடன் இணைந்தால் அக்கட்சிகளுக்கு உள்ள சுமார் 5 சதவீத வாக்குகளும் காங்கிரஸூக்கு கிடைக்கும். இது வெற்றியைத் தீர்மானிக்கும் சதவீதமாகவும் இருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு காங்கிரஸூக்கு இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.