பாஜக அல்லாத அரசு: தென்னிந்தியத் தலைவர்கள் வியூகம்

மக்களவைக்கு 5 கட்டத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது. இனி இரண்டு கட்ட வாக்குப்பதிவு மட்டும் நடைபெற வேண்டியுள்ளது
பாஜக அல்லாத அரசு: தென்னிந்தியத் தலைவர்கள் வியூகம்

மக்களவைக்கு 5 கட்டத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது. இனி இரண்டு கட்ட வாக்குப்பதிவு மட்டும் நடைபெற வேண்டியுள்ளது. வரும் 19-ஆம் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்து, 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். 
இந்நிலையில், பாஜக அல்லாத அரசு ஒன்றை அமைப்பது தொடர்பான முன்முயற்சிகளில் தென்னிந்தியத் தலைவர்களான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் தனித் தனியாக ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வியூகங்கள் குறித்துப்  பார்ப்போம்.
தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக அவர் சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக அவர் சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தார்.
அப்போது தென்னிந்தியர் ஒருவரை பிரதமராக்க ஆதரவு தர வேண்டும் என்று சந்திரசேகர் ராவ், பினராயி விஜயனிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. எந்தத் தலைவரின் பெயரையும் அவர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், தன்னை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவது குறித்தே சந்திரசேகர் ராவ் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளதாக கருத முடியும். ஏனெனில் தமிழக அல்லது கேரளத் தலைவர்கள் யாரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை. கர்நாடகத்தைச் சேர்ந்த தேவே கௌடா, குமாரசாமி, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களுக்கு பிரதமராவதற்கு வாய்ப்பு இல்லை.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அந்தத் தகுதி இருந்தாலும் அவரை பரம எதிரியாக சந்திரசேகர் ராவ் கருதுகிறார். எனவே தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால் மாநிலக் கட்சிகளை இணைத்து தன்னை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதே அவரது நோக்கமாக இருக்கக் கூடும்.
பினராயி விஜயனைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் சந்திரசேகர் ராவ் தொலைபேசியில் விவாதித்தார். அப்போது காங்கிரஸுடன் இணக்கமாகச் செல்ல தாம் தயாராக இருப்பதாகவும், அக்கட்சியுடன் தேர்தலுக்குப் பிறகு அணிசேர்வதற்கு உதவுமாறு சந்திரசேகர் ராவ் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில், காங்கிரஸ் கட்சியுடன் அவருக்கு நல்லுறவு இல்லை. எனவே, அக்கட்சியுடன் இணைந்து கர்நாடகத்தில் ஆட்சியமைத்துள்ள குமாரசாமியின் உதவியை அவர் நாடியதாகத் தெரிகிறது.
தவிர, காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பிறகு இணைந்து செயல்படுவது தொடர்பாக பேசுவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்த சந்திரசேகர்ராவ் தன் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரை அனுப்பியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. தெலங்கானாவில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 11-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து பத்து நாள்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. 


பாஜக - டிஆர்எஸ் உறவில் விரிசல்
சந்திரசேகர் ராவைப் பொருத்த வரை பாஜகவை மறைமுகமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதரித்து வந்துள்ளார். முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நேரங்களிலும், குடியரசுத் தலைவர் தேர்தல் போன்ற நேரங்களிலும் அவரது கட்சி பாஜகவை ஆதரித்தே வாக்களித்து வந்துள்ளது. இந்தச் சூழலில் அண்மைக் காலமாக பாஜகவுடனான அவரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு, சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது கட்சி எம்எல்ஏக்கள் சிலருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தவிர, பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட தெலங்கானாவைச் சேர்ந்த 25 விவசாயிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதன் பின்னணியில் சந்திரசேகர் ராவ் இருப்பதாக பாஜக பகிரங்கமாக குற்றம்சாட்டியது. இவ்வாறு இரு கட்சிகளுக்கு இடையே மனக்கசப்பு அதிகரித்துள்ளது.
 

காங்கிரஸ் பக்கம் சாயும் கட்சிகள்
தெலுங்கு தேசம், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் காங்கிரஸை ஆதரிக்கக் கூடிய கட்சிகள் என்று கருதலாம். இந்தக் கட்சிகளுக்கு பாஜகவை விட காங்கிரஸ் ஒரு விதத்தில் வசதியானது. அதாவது பாஜகவை விட தற்போதைக்கு காங்கிரஸ் பலவீனமாக இருப்பதால் அக்கட்சியிடம் கடுமையாக பேரம் பேசி தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம் என்று இக்கட்சிகள் கணக்கு போட வாய்ப்புள்ளது. அந்த வகையில் தற்போதைக்கு காங்கிரஸ் பக்கம் காற்று வீசுவதாகக் கருதலாம்.
காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலக் கட்சிகளை இணைத்து ஆட்சியமைப்பது பற்றி சந்திரசேகர் ராவ் பரிசீலித்து வருகிறார். காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத அணி என்ற அவரது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து இது மாறுபட்ட நிலைப்பாடாகும். இது குறித்து சந்திரசேகர் ராவின் நெருங்கிய சகாவும் டிஆர்எஸ் கட்சியின் முக்கிய தலைவருமான வினோத்குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். பாஜகவுக்கு சுமார் 170 இடங்கள் கிடைக்கும். 1996-இல் காங்கிரஸ் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்ததுபோல் இம்முறையும் நடக்கும். அதாவது மாநிலக் கட்சிகள் அடங்கிய கூட்டாட்சி முன்னணியின் ஆட்சி, காங்கிரஸின் ஆதரவுடன் அமையும். காங்கிரஸின் ஆதரவைப் பெறுவதைத் தவிர கூட்டாட்சி முன்னணிக்கு வேறு வழியில்லை என்றார். 
பினராயி விஜயனை சந்திரசேகர் ராவ் சந்தித்தபோது, வினோத்குமாரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த விஷயத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்து டிஆர்எஸ் கட்சியின் அதிகாரபூர்வமான கருத்தாகக் கொள்ளலாம். அக்கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு உட்கட்சியில் நடைபெற்ற விவாதங்களே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது இப்போதைய அரசியல் சூழல் குறித்து சந்திரசேகர் ராவ் தன் கட்சியின் மூத்த தலைவர்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்தியுள்ளார். 
அப்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டாட்சி முன்னணி ஆட்சியை அமைக்கலாம். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் ராகுல் காந்தி பிரதமராக நாம் ஆதரவு தரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதை சந்திரசேகர் ராவ் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவரது கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இது தொடர்பாகக் கூறும்போது ஓரிரு கட்சிகளைத் தவிர, பல்வேறு மாநிலக் கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக உள்ளன. சில கட்சிகளுக்கு காங்கிரஸைப் பிடிக்காவிட்டாலும், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற காரணத்துக்காகவே அவை காங்கிரஸை ஆதரிக்கும் என்றார். 
சந்திரபாபு நாயுடுவின்  முயற்சி
மத்தியில் பாஜக அல்லாத அரசை அமைப்பது தொடர்பான முயற்சிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே அவர் சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தில்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது இரு தலைவர்களும் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் பற்றி விவாதித்ததாகத் தெரிகிறது.
மேலும், தேர்தல் முடிவுகள் வெளிவரும் 23-ஆம் தேதிக்கு முன்பாக 21-ஆம் தேதி வாக்கில் தில்லியில் 21 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்துமாறு ராகுலை சந்திரபாபு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தத் தலைவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கக வேண்டாம் என்று வற்புறுத்தும் என்று கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக ஆட்சி அமைக்கத் தேவையான எம்.பி.க்களின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் 21 கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்ட கடிதத்தை அளிக்க தாங்கள் தயார் என்றும் அப்போது அவர்கள் குடியரசுத் தலைவரிடம் தெரிவிப்பார்கள் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ள பாஜகவை குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைக்க முடியாமல் தடுக்க முடியும் என்று இந்தக் கட்சித் தலைவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.
எனவே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்பது அல்லது மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை காங்கிரஸ் ஆதரவுடன் அமைப்பது என்ற செயல்திட்டத்துடன் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் மற்ற கட்சிகள் ஆதரவுடன் பிரதமராக அவர் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஏனெனில், மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற்றுள்ளது. அதில் ஒருவேளை ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அக்கட்சி தன்னையும் தன் குடும்பத்தாரையும் வழக்குகள் மூலம் பழிவாங்கலாம் என்ற கவலை நாயுடுவுக்கு இருக்கலாம். அந்தச் சூழலில் மத்திய ஆட்சியில் பங்கு, அல்லது பிரதமர் பதவியை தாம் வகிப்பது போன்றவை பாதுகாப்பாக இருக்கும் என்பது சந்திரபாபு நாயுடுவின் கணிப்பாக இருக்கக் கூடும்.

பாஜகவின் மாற்றுத் திட்டம் என்ன?
பாஜக கூட்டணி 220 இடங்கள் வரை வெல்லும்பட்சத்தில் மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்புள்ளது. அப்போது பிஜு ஜனதா தளம், ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட நான்கு கட்சிகள் ஆதரித்தாலே பெரும்பான்மையை நிரூபித்து விட முடியும். மாறாக 220-க்கும் குறைவான இடங்களை பாஜக கூட்டணி பெற்றிருந்தால் அப்போது, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் போன்ற ஒரு தலைவர் பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம். அதற்கும் குறைவாக வந்தால் பிகார் முதல்வர் நிதீஷ்குமாரை பிரதமராக பாஜக ஏற்க வாய்ப்புள்ளது. இது தவிர, பாஜக கூட்டணிக்கு 200-க்கும் குறைவான இடங்கள் கிடைக்கும்பட்சத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைப்பதைத் தடுக்க புதிய வியூகத்தையும் பாஜக தலைவர் அமித் ஷா வகுக்கலாம்.
அதன்படி நிதீஷ்குமார் அல்லது மாயாவதி போன்ற ஒரு தலைவரின் தலைமையில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு தரவும் வாய்ப்புள்ளது. இது பாஜகவின் கடைசி அஸ்திரமாக இருக்கக் கூடும்.
மறைந்த துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதாவது, அந்தத் தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்றும், ஒருவேளை அது நடக்காத பட்சத்தில் ஜெயலலிதா பிரதமராக பாஜக ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அது போன்ற ஒரு திட்டத்தை பாஜக கடைசி முயற்சியாக கையில் எடுக்க வாய்ப்புள்ளது.

முடிவு குடியரசுத் தலைவர் கையில்?
எதிர்க்கட்சிகள் என்னதான் வலியுறுத்தினாலும், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் பட்சத்தில் அக்கட்சியையே குடியரசுத் தலைவர் ஆட்சியமைக்க அழைப்பார் என்பது உறுதி. ஏனெனில் கடந்த 1989 தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான் பெறாதபோதிலும், 197 இடங்களுடன் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ் காந்தியையே அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அழைத்தார். அப்போதைய மக்களவைத் தேர்தலில் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் 143 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. எனினும், பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க ராஜீவ் மறுத்துவிட்டார். அதன் பிறகே பாஜக மற்றும் இடதுசாரிகள் ஆதரவுடன் வி.பி.சிங் ஆட்சியமைத்தார்.
அதன் பின் 1996 தேர்தலில் 161 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. அப்போது வாஜ்பாயை ஆட்சியமைக்க வருமாறு அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அழைத்தார். அந்த  மரபைப் பின்பற்றி, தேர்தலுக்குப்பின் பாஜகவை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கவே வாய்ப்புகள் அதிகம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com