மம்தாவின் மருமகனா? மருத்துவரா?: கடும் போட்டியில் டைமண்ட் ஹார்பர்

மேற்கு வங்கத்தில் பாயும் ஹூக்ளி நதி, வங்கக் கடலில் சங்கமிக்கும் முகத்துவாரத்துக்கு அருகில் அமைந்துள்ளது டைமண்ட் ஹார்பர் மக்களவை
டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் மருமகன் அபிஷேக்குடன் பிரசாரம் மேற்கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் மருமகன் அபிஷேக்குடன் பிரசாரம் மேற்கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.


மேற்கு வங்கத்தில் பாயும் ஹூக்ளி நதி, வங்கக் கடலில் சங்கமிக்கும் முகத்துவாரத்துக்கு அருகில் அமைந்துள்ளது டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதி. தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில், வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் களத்தில், இந்த தொகுதி அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. 
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீண்டும் களமிறங்கியிருப்பதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம். அவருக்கு சவால் விடும் விதமாக, அந்தப் பகுதியில் பிரபலமான மருத்துவர் ஃபுவாத் ஹாலிமை களமிறக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
மீனவர்கள், தேன் எடுப்பவர்கள், தினசரி கூலிக்கு வேலை செய்பவர்கள் கணிசமாக வசித்து வரும் இந்தத் தொகுதியில், பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து மருத்துவச் சேவையாற்றி வருபவர் ஃபுவாத் ஹாலிம். ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும் தனது மருத்துவ சேவையைத் தொடர்கிறார். இதனால், குக்கிராம மக்களுக்கும் அறிந்தவராக, மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகத் திகழ்கிறார்.
இது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு கூடுதலாக கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த வேளையில் மருத்துவர் ஃபுவாத் ஹாலிம் இரண்டு முறை தாக்கப்பட்டிருக்கிறார். அவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்தாலும், பின்வாங்காமல் தொடர்ந்து களத்தில் இருக்கிறார் மருத்துவர் ஹாலிம்.
திரிணமூல், மார்க்சிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் செளமியா ஐச் ராய் என்பவர் போட்டியிடுகிறார். அடுத்ததாக, மேற்கு வங்கத்தில் எழுச்சி பெற்று வரும் பாஜக சார்பில் நிலஞ்சன் ராய் என்பவரை கட்சித் தலைமை களமிறக்கியுள்ளது. அவர் கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை மாநில சிறார் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், நிலஞ்சன் ராய் மீதான குற்றச்சாட்டு, திரிணமூல் காங்கிரஸின் சதிவேலை என்று கூறி பாஜக மறுப்பு தெரிவித்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரான மருத்துவர் ஹாலிம் தேர்தல் களத்தில் போட்டியிடுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பல்லிகுங்கே தொகுதியில் போட்டியிட்டு திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரிடம் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில்தான், இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தை திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியது.
ஹாலிமின் தந்தை ஹாசிம் அப்துல் ஹாலிம், 2011-ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து 29 ஆண்டுகள் மேற்கு வங்க பேரவைத் தலைவராக இருந்தார். ஹாலிமின் தாத்தா, நேதாஜி சந்திர போஸ் தலைமையின் கீழ் கொல்கத்தா மேயராக இருந்தவர். இத்தனை நீண்ட பின்னணி இருந்தாலும், மம்தாவின் மருமகன் மீண்டும் போட்டியிடுவதால், டைமண்ட் ஹார்பர் தேர்தல் களம் மருத்துவருக்கு சவாலானதாகவே இருக்கிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தாவுக்கு அடுத்த அதிகாரமிக்கவராக இருக்கும் அபிஷேக் பானர்ஜியை, தேர்தலில் வெற்றிபெறச் செய்துவிட வேண்டும் என்பதில் மம்தா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அனைவரும் குறியாக உள்ளனர். அதற்காக, அமித் ஷா பேரணி நடைபெற்ற அதே நாளில், டைமண்ட் ஹார்பர் தொகுதியில்  அபிஷேக் பானர்ஜியுடன் மம்தா கடந்த செவ்வாய்க்கிழமை நடைப்பயணப் பிரசாரம் மேற்கொண்டார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி சற்று கலக்கத்துடன் இருப்பதற்கு காரணமில்லாமல் இல்லை.


டைமண்ட் ஹார்பரில் கடந்த 2009-இல் பதிவான வாக்குகளை விட 2014-இல் திரிணமூல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 13 சதவீதம் குறைந்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதத்தில் பெரிய அளவில் மாற்றமில்லை. அதே வேளையில், கடந்த 2009-இல் 2.8 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம், 2014-இல் 16 சதவீதமாக அதிகரித்து விட்டது. அதாவது, டைமண்ட் ஹார்பர் தொகுதியில் கடந்த 2009-இல் பாஜக வேட்பாளருக்கு 37,542 வாக்குகள் பதிவாகியிருந்தன. இது, 2014-இல் 2,00,858 வாக்குகளாக அதிகரித்து விட்டது. எனவே, திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் வேட்பாளர்களுக்கு சவாலாக பாஜக வேட்பாளர் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
டைமண்ட் ஹார்பர் தொகுதியைக் கைப்பற்றுவது மருத்துவரா? அல்லது மம்தாவின் மருமகனா என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான, வரும் 23-ஆம் தேதி தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com