அந்த முதல் தேர்தல்
By - அ. சாமிநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியர், அவிநாசி. | Published On : 01st April 2019 03:38 AM | Last Updated : 01st April 2019 03:38 AM | அ+அ அ- |

நாட்டின் முதல் பொதுத்தேர்தல் 1952-ஆம் ஆண்டு நடைபெற்றபோது நான் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு முடித்திருந்தேன். அப்போது 21 வயது நிறைவாகாததால் வாக்களிக்கும் தகுதியைப் பெறவில்லை. எனது தந்தையும் அவரது நண்பர்களும் அரசியல் களத்தில் எவ்வித சிறு பொருளாதார எதிர்பார்ப்பும் இல்லாமல் தீவிரமாக செயல்பட்டனர். பெரும்பாலும் கிராமங்களில் இரவு நேரத்தில் மட்டும் பரப்புரை நிகழ்த்தப்பட்ட காலம் அது. பரப்புரை செய்ய வருவோருக்கு வேட்பாளரின் ஆதரவாளர்களும் நண்பர்களும் கிராமங்களில் உள்ளோரும் அவரவர் சொந்த செலவில் முன்வந்து உணவு உபசரிப்பதை தங்களின் கடமையாகக் கொண்டனர்.
தேர்தல் நாளில் கிராமப்புறங்களில் உள்ளோர் வேலைக்குச் செல்லமாட்டார்கள். கிராம மக்கள் அனைவரும் மைய இடத்தில் பெரிய உருளி வைத்து பெரும்பாலும் உப்புமா தயாரித்து உண்டுவிட்டு வாக்களிக்கச் செல்வர். அல்லது வாக்குப்பதிவைச் செய்துவிட்டு வந்து உண்பர். இதற்கான செலவை வேட்பாளரிடமிருந்து பெற மாட்டார்கள்.
அன்றைய வேட்பாளர்கள் மக்களின் தேவைகளைப் புரிந்து செயலாற்றுவர். நேரில் சந்தித்து குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பும், அதை அவர்கள் உள்வாங்கி தங்களால் முடிந்தவரை முடித்து வைக்கும் பக்குவமும் பெற்றிருந்தனர்.
1960-களில் அவிநாசி தொகுதியில் வறட்சி தோன்றிய காலத்தில் அன்றைய முதல்வரை, தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் அழைத்து வந்து கிராமம் கிராமமாக கூட்டிச் சென்று குளம், குட்டைகள், குடிநீர்க் கிணறுகள், விவசாயக் கிணறுகள் வறண்டு கிடப்பதைக் காண்பித்து மக்கள் நலத் தொண்டனாக இருந்து அரசின் அவசர உதவியை நாடியப் பாங்கு நினைவு கூரத்தக்கது.