தொழில் நகரத்தில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்?
By -க. தங்கராஜா | Published On : 01st April 2019 03:34 AM | Last Updated : 01st April 2019 03:35 AM | அ+அ அ- |

கொங்கு நாட்டின் தலைநகராகக் கருதப்படும் கோயம்புத்தூர், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகான நகரமாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருந்த நகரம் கோவை. பருத்தி விளைச்சலுக்கு உகந்த காலநிலை நிலவியதும், பைக்காரா நீர் மின் நிலையத்திலிருந்து கிடைத்த மின்சாரம் போன்ற வசதிகள் கிடைத்ததாலும் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பே முதல் பஞ்சாலை தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவையைச் சுற்றி ஏராளமான பஞ்சாலைகள் உருவாகின. பஞ்சாலைகளில் வேலை செய்வதற்காக சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கோவைக்கு வந்து இறங்கியதால், தொழிலாளர் வர்க்கம் என்ற புதிய வர்க்கம் உருவாகியது. தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் உருவாகின.
நாளடைவில் பஞ்சாலையைத் தொடர்ந்து ஆயத்த ஆடை உற்பத்தி, அதைச் சார்ந்த கைத்தறி, விசைத்தறி, சாயப்பட்டறைகள், ஜவுளி இயந்திரங்கள் தயாரிப்பு என ஜவுளி சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைந்தன.
மற்றொருபுறம் பம்ப்செட், மோட்டார் தயாரிப்பு, கம்ப்ரஸர் இயந்திரம் தயாரிப்பு, பவுண்டரி தொழில், வெட் கிரைண்டர், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலைகள் என எண்ணற்ற தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இதனால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நிலைக்கு கோவை உயர்ந்தது.
தற்போது தொழிற்சாலைகளுடன் எண்ணற்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், அதிநவீன வசதிகள் கொண்ட பல்வேறு மருத்துவமனைகள், மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் என சேவை சார்ந்த தொழிலிலும் கோவை வளர்ந்து வருகிறது.
கோவை மக்களவை தொகுதி முதலாவது தேர்தலில் இருந்தே இடம் பெற்றுள்ளது. இந்தத் தொகுதியின் முதல் எம்.பி.யாக 1952-இல் தேர்வான காங்கிரஸ் கட்சியின் டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் அதே ஆண்டில் மறைந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் என்.எம்.லிங்கம் வெற்றி பெற்றார். அதேபோல் 1974-ஆம் ஆண்டிலும் இடைத்தேர்தலை கண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 18 தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 6 முறை வென்றுள்ளது. அடுத்தபடியாக இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, பாஜக ஆகியவை தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தேசியக் கட்சிகளே அதிகம் வென்றுள்ள கோவை தொகுதியில் முதல் முறையாக கடந்த 2014 தேர்தலில்தான் அதிமுக நேரடியாகப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வழக்குரைஞர் ஏ.பி.நாகராஜன் 4,31,717 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். திமுகவுக்கு 3-ஆவது இடமே கிடைத்தது. மாநிலத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (42,016) அதிமுக வெற்றி பெற்ற தொகுதி இது மட்டுமே.
கொங்கு வேளாள கவுண்டர்கள், நாயுடுகள், அருந்ததியர்கள், ஒக்கலிக்க கவுடர்கள், பிள்ளை, முதலியார், வேட்டுவ கவுண்டர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகள், புலம் பெயர்ந்து வந்த பல்வேறு ஜாதியினரின் வாக்குகள் கணிசமான அளவில் உள்ள இந்தத் தொகுதியில், கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. இந்தத் தொகுதியில் பெரும்பாலான மக்கள் நகரப் பகுதிகளிலேயே வசிக்கின்றனர். கோவை மக்களவைத் தொகுதியில் கோவை (தெற்கு), கோவை (வடக்கு), சிங்காநல்லூர், பல்லடம், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த 6 தொகுதிகளில் சிங்காநல்லூர் மட்டும் திமுக வசம் உள்ளது. மற்ற 5 தொகுதிகளிலும் அதிமுக எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் அண்மையில் மரணமடைந்ததால் அந்தத் தொகுதி மட்டும் தற்போது காலியாக உள்ளது.
தொகுதியில் நிலவும் பிரச்னைகள்: கோவையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்கூடங்களும் நூற்றுக்கணக்கான பெரிய தொழில் நிறுவனங்களும் உள்ளன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மின் வெட்டு பிரச்னையில் இருந்து விடுபட்டு தொழில்கள் ஏற்றம் பெற்று வந்த நிலையில், 2017 ஜூலையில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டது. பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான சிறு சிறு பொருள்களை கூலிக்கு வேலை செய்யும் முறையில் செய்து கொடுத்து வந்த ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. பதிவு செய்த நிறுவனங்களுக்கே பெரிய நிறுவனங்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டதால், சிறு, குறு தொழிற்சாலைகள் முடங்கின. ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பலர் வேலையிழப்புக்கு ஆளாகினர். மேலும், மூலப் பொருள்களின் விலை உயர்வு பம்ப்செட், கிரைண்டர், மோட்டார் உதிரிபாகத் தயாரிப்பு, கிரில் பட்டறைகள், சிறு, நடுத்தர பவுண்டரிகளை வெகுவாக பாதித்தது.
2016 நவம்பரில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையால் பணப் புழக்கம் குறைந்து, தொழில்கள் நலிவடைந்திருந்த நிலையில் ஜி.எஸ்.டி.யும் தன் பங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தியதால், கோவை வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத வகையில் வேலைக்காக வந்திருந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பத் தொடங்கினர்.
ஜவுளித் தொழில், கிரைண்டர்கள் தயாரிப்பு உள்ளிட்ட சில தொழில்களுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டாலும், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் ஜாப் ஆர்டர்கள் எனப்படும் கூலிக்கு வேலை செய்து கொடுப்பவர்களுக்கான 18 சதவீத வரி குறைக்கப்படவில்லை. இந்தத் தேர்தலில் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளின் தாக்கம் நேரடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதைத் தவிர பொதுப் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படாதது, சாலைகள் அகலப்படுத்தப்படாதது, தேவையான இடங்களில் மேம்பாலங்கள் இல்லாதது, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குப் போதுமான எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படாதது போன்றவையும் தொடர் பிரச்னைகளாகவே உள்ளன. விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படாமல் கிடப்பில் இருப்பது தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே உள்ளது.
இதைத் தவிர மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியது, கட்டணம் செலுத்தியே குடிநீரைப் பெற வேண்டும் என்று அறிவித்திருப்பது, வனப் பகுதியையொட்டியுள்ள நகரம் என்பதால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் விலங்கு - மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாதது போன்றவையும் இந்தத் தொகுதியின் முக்கிய பிரச்னைகளாக உள்ளன. அண்மையில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் கோவை தொகுதியின் தேர்தல் முடிவிலும் எதிரொலிக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.
தொகுதி நிலவரம்: கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருந்தாலும், 1996-க்கு பிறகு பாஜக மிகப் பெரிய வளர்ச்சி பெற்று கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் கோவை தொகுதி அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே 1998, 1999 ஆம் ஆண்டுகளில் இதே தொகுதியில் வெற்றி பெற்றவர். கட்சியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர். மக்களுக்கு அறிமுகமானவர். கட்சியின் மாநிலத் தலைவராக இருந்துள்ளார். இவரது காலத்தில் தென்னை நார் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் நெருங்கி வந்து வாய்ப்பை நழுவ விட்டவர், தற்போது அதிமுகவின் பலமான வாக்கு வங்கி மேலும் வலு சேர்ப்பதால் வெற்றியை எதிர்பார்த்திருக்கிறார்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர். கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு முன் நிற்பவர் என்பதால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் கே.ரமணியின் மருமகனான இவர், கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் மாநகரச் செயலர், மாவட்டச் செயலர், மாநிலக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். எம்.பி.யாக இருந்த காலத்தில் கோவைக்கு புதிய ரயில்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி, பாலங்கள் பெற்றுக் கொடுத்தது போன்றவற்றை இவரது சாதனைகளாகக் கூறலாம். தொழில் துறையில் நிலவும் பிரச்னைகள், முந்தைய அதிமுக எம்.பி.யின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதுவும் இல்லாதது போன்றவை திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதலாம்.
இந்த இரு முக்கிய வேட்பாளர்களைத் தவிர அமமுக சார்பில் கட்சியின் அமைப்புச் செயலர் என்.ஆர்.அப்பாதுரை போட்டியிடுகிறார். இவர் கணிசமான அளவில் அதிமுக வாக்குகளைப் பிரிப்பார் என்று நம்பப்படுகிறது. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஆர். மகேந்திரன் போட்டியிடுகிறார். எம்.பி.பி.எஸ்., எம்.டி. முடித்துள்ள இவர், கட்சியின் துணைத் தலைவராகவும், வேட்பாளர்கள் தேர்வுக் குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார். அரசியலுக்கு புதிய முகம் என்றாலும் கமல்ஹாசன் ரசிகர்களின் வாக்குகளையும், இளைஞர்கள், புதிய வாக்காளர்களின் வாக்குகளையும் கணிசமாக கைக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களைத் தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் எஸ்.கல்யாணசுந்தரம் உள்ளிட்ட மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் 9,65,120
பெண்கள் 9,66,239
மூன்றாம் பாலினம் 199
மொத்தம் 19,31,558.
முக்கிய வேட்பாளர்கள்
சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக)
பி.ஆர்.நடராஜன் (மா.கம்யூனிஸ்ட்)
என்.ஆர்.அப்பாதுரை (அமமுக)
டாக்டர் ஆர்.மகேந்திரன் (ம.நீ.ம.)
பேராசிரியர் எஸ்.கல்யாணசுந்தரம் (நாம் தமிழர்)