மஞ்சள் மாநகரில் மக்கள் யார் பக்கம்?

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியார், கணிதமேதை ராமானுஜன் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு.
மஞ்சள் மாநகரில் மக்கள் யார் பக்கம்?


திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியார், கணிதமேதை ராமானுஜன் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு. மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்ற பெயர்களும் உண்டு. விவசாயம் பிரதானத் தொழில். பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் விவசாயப் பாசனத்துக்கு ஆதாரமாக உள்ளது. குடிநீருக்கு ஆதாரமாக காவிரி ஆறு உள்ளது.
நெல், மஞ்சள், நிலக்கடலை, கரும்பு, வாழை, மரவள்ளி ஆகியவை முக்கியப் பயிர்கள். ஈரோடு மஞ்சள் சந்தை இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை சார்ந்த தொழில்கள் இங்கு உள்ளன. ஈரோடு ஜவுளி சந்தையைச் சார்ந்து சிறிய மற்றும் மொத்த ஜவுளி வியாபாரிகள், விசைத்தறியாளர்கள், சாய, சலவைத் தொழிற்சாலை நடத்துபவர்கள் உள்ளனர்.
ஈரோடு தொகுதி கடந்த 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது புதிதாக உருவாக்கப்பட்டடு முதன் முதலாக 2009-ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தது. அதற்கு முன்பு ஈரோடு (ஈரோடு கிழக்கு, மேற்கு என்று பிரிக்கப்படவில்லை), மொடக்குறிச்சி தொகுதிகள் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டவையாக இருந்தன.
திருச்செங்கோடு தொகுதி 1951ஆம் ஆண்டில் இருந்து, 2004 ஆம் ஆண்டு வரை 14 முறை மக்களவைத் தேர்தலைச் சந்தித்துள்ளது. இதில் சுயேச்சை ஒரு முறையும், காங்கிரஸ் 2 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 5 முறையும், மதிமுக 1 முறையும் வெற்றிபெற்றுள்ளன.
மறுசீரமைப்புக்குப் பிறகு 2009 தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுக சார்பில் அ.கணேசமூர்த்தி வெற்றிபெற்று ஈரோடு தொகுதியின் முதல் எம்.பி. என்ற பெருமையைப் பெற்றார். 2014 தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.செல்வகுமார சின்னையன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், செங்குந்த முதலியார், வன்னியர், வேட்டுவக் கவுண்டர், நாயுடு, நாடார், வாணிய செட்டியார் உள்ளிட்ட சமூகத்தினரும், சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் கணிசமான அளவு வடஇந்திய மக்களும் உள்ளனர்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி மற்றும் காங்கயம், தாராபுரம், குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கயம், தாராபுரம்(தனி) தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், குமாரபாளையம் தொகுதி நாமக்கல் மாவட்டத்திலும் உள்ளன.
இந்த 6 தொகுதிகளில் தாராபுரம் (தனி) தொகுதி மட்டுமே திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி வசம் உள்ளது. காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு உள்ளார். மற்ற 4 தொகுதிகளிலும் அதிமுக எம்எல்ஏக்களே உள்ளனர்.
தொகுதியில் நிலவும் பிரச்னைகள்
ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜவுளித் தொழிலை பெரிதும் பாதித்திருப்பதாக ஜவுளித் துறையினர் கூறுகின்றனர்.  விளை நிலங்களைப் பாதிக்கும் உயர் மின்கோபுரப் பணிகள், குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம், விவசாய நிலங்கள் வழியாக குழாய் மூலம் பெட்ரோலியம் கொண்டு செல்லும் திட்டம் ஆகியத் திட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர்.
சாயக்கழிவு, தோல்கழிவு நீர் வெளியேற்றம் காரணமாகப் புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. வேளாண்மைக்கான நீர்ப் பற்றாக்குறை காரணமாக, பாசனப் பரப்பு குறைந்து வருகிறது.
காலிங்கராயன், கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பதில் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் சிக்கல் விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது. மஞ்சள் உள்ளிட்ட விவசாய விளை பொருள்களுக்கான விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது இத்தொகுதியின் முக்கியமானப் பிரச்னை ஆகும்.
ஈரோடு நகரைச் சுற்றி அமைக்கப்படும் வெளிவட்டச் சாலைப் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலைய அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை.
ஈரோடு-பழனி ரயில் திட்டம், ஒருங்கிணைந்த ஜவுளிச் சந்தை, ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் அமைத்தல், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், காங்கயம், தாராபுரம் பகுதிகளில் எண்ணெய், அரிசி ஆலைத்தொழில் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். கரும்புக்கு அரசு நிர்ணயித்த தொகையை சர்க்கரை ஆலைகள் நிலுவையின்றி வழங்க வேண்டும். அரசுத் தலைமை மருத்துவமனையைப் பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.
தொகுதி நிலவரம்:
ஈரோடு தொகுதியில் அதிமுக கூட்டணியில் அக்கட்சி நேரடியாக களம் இறங்குகிறது. அதிமுக வேட்பாளராக ஜி.மணிமாறன் போட்டியிடுகிறார். ஏற்கெனவே இந்த தொகுதி அதிமுகவுக்கு பலம் பொருந்தியதாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு அவருக்கு வெற்றி வாய்ப்பை வழங்கிய காங்கயம் தொகுதி உள்ளிட்டவை ஈரோடு மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
அதிமுக வேட்பாளர் ஜி.மணிமாறன் காங்கயம் நகர் மன்றத் தலைவராக 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அந்த நகர மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். மேலும் கணிசமான வாக்கு வங்கி உள்ள தேமுதிக, பாமக, பாஜக கட்சிகளின் ஆதரவு அதிமுக வேட்பாளருக்கு பலம் எனலாம்.
திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.கணேசமூர்த்தி களம் இறங்கியுள்ளார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், அவர் திமுக வேட்பாளராகவே கருதப்படுகிறார். இத் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். 2009 இல் எம்.பி.யாக இருந்துள்ளார். 2014 இல் போட்டியிட்டு 2,55,432 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதனால் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு அவருக்கு உள்ளது எனலாம். கணிசமான வாக்கு வங்கி உள்ள திமுக, காங்கிரஸ், கொமதேக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு சணேசமூர்த்திக்கான பலம் எனலாம்.
இவர்களைத் தவிர்த்து அமமுக சார்பில் கே.சி.செந்தில்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் சரவணகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி, முதலியார் சமுதாய வாக்குகளை குறிவைத்து களம் இறங்கியுள்ள சுயேச்சை வேட்பாளரான ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர் எ.அருணாசலம் ஆகியோரும் கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 152 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்க வாய்ப்புள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு 16,268 வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் நோட்டாவுக்குச் செல்லும் வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்க்கவும் வேட்பாளர்கள் கடுமையாகப் போராட வேண்டும். இந்தத் தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

வாக்காளர்கள் விவரம்
ஆண்கள்    7,15,617
பெண்கள்    7,46,355
மூன்றாம் பாலினம்    104
மொத்தம்    14,62,076

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com