இதுக்கு போய் அலட்டிக்கலாமா...
By - கே.பாலசுப்பிரமணியன் | Published On : 11th April 2019 02:37 AM | Last Updated : 11th April 2019 02:37 AM | அ+அ அ- |

கொளுத்தும் கோடை வெளியிலில் அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடுமையான வெயில் சுட்டெரித்தாலும், வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், சில வேட்பாளர்களின் முகங்களோ நிறம் குறைந்து கருப்பாகத் தோற்றமளித்து வருகின்றனர்.
திருப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனின் நிறம் முற்றிலும் மாறி அவர் இப்போது கருப்பு நிறத்தில் தோற்றமளிக்கிறார். இதேபோன்று, தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனின் முகத்தின் நிறம் மாறியதால் வீட்டில் அவரது குழந்தையே அவரைப் பார்த்து அச்சம் அடைகிறதாம். அந்த அளவுக்கு கோடை வெயிலின் தாக்கம் வேட்பாளர்களைப் புரட்டி எடுத்து வருகிறது.
இந்த கோடை வெயில் உக்கிரத்தின் இடையே நடைபெறும் பிரசாரத்தில் சுவாரஸ்ய உரையாடலும் நிகழ்ந்தது. சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்-அவுஸ் பகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, மத்திய சென்னை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சாம்பால் அந்த இடத்தை அடைந்தார். அப்போது, அங்கு நடந்த உரையாடல்...
சாம்பால்: அங்கிள்...அங்கிள் (டி.ஜெயக்குமார்) பாருங்கள் எவ்வளவு கருப்பாகி விட்டேன்.
டி.ஜெயக்குமார்: இதுக்கே இப்படிச் சொல்கிறாய். நாங்கள் எல்லாம் எப்படி அலைந்திருப்போம்.
சாம்பால்: இனிமேல் இந்தப் பிரசாரத்தை யாரேனும் கிண்டல் செய்தால், அவர்களையும் நமது பிரசாரத்துக்கு உடன் அழைத்து வந்து காட்ட வேண்டும். அவர்களையும் பிரசாரம் செய்ய விட்டால்தான் அதிலுள்ள கஷ்டம் புரியும் என்றார். இவர்களின் இந்த உரையாடல் அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் வீழ்த்தியது.