தேமுதிகவுக்கு 4 தொகுதிகள்: கையெழுத்தானது கூட்டணி ஒப்பந்தம்

அதிமுக, தேமுதிக கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கையெழுத்தானது.  
தேமுதிகவுக்கு 4 தொகுதிகள்: கையெழுத்தானது கூட்டணி ஒப்பந்தம்


அதிமுக, தேமுதிக கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கையெழுத்தானது.  

மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், 1 மாநிலங்களவை இடமும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், என் ஆர் காங்கிரஸுக்கு 1 தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதியும், புதிய நீதி கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டணியில் தேமுதிக கட்சி இடம்பெறுவதில் மட்டும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் அதிமுக, தேமுதிக கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி இன்று உறுதியாகும் என்று தகவல்கள் வெளியானது. 

அதன்படி, சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு அதிமுக தலைவர்கள் மற்றும் தேமுதிக தலைவர்கள் வந்தனர். அதிமுக தரப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் வந்திருந்தனர். தேமுதிக தரப்பில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் வந்திருந்தனர். 

அப்போது இரு கட்சிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தில் வரவுள்ள 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிக்கும் என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதையடுத்து அதிமுக, தேமுதிக கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிக சார்பில் விஜயகாந்தும், அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும் கையெழுத்திட்டனர்.  

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி, விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது, அதிமுக, தேமுதிக கூட்டணி உணர்வுப்பூர்வமானது என்று ஓபிஎஸ் தெரிவித்தார். எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக தெரிவிக்கப்படும் என்று பதில் அளித்தார். கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைவது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்றார். 

இதைத்தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், தேமுதிக தலைமையகத்தில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அதற்கு முதல்வரும், அமைச்சர்களும் சரியான விளக்கத்தை அளித்தனர். அதிமுக, தேமுதிக கூட்டணி இடைத்தேர்தலையும் கடந்து உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். எண்களில் ஒன்றும் இல்லை, அனைத்தும் எண்ணங்களில் தான் உள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com