சந்திரசேகர் ராவின் கிங் மேக்கர் கனவு நனவாகுமா?
By DIN | Published On : 22nd March 2019 01:38 AM | Last Updated : 22nd March 2019 01:38 AM | அ+அ அ- |

ஆந்திரத்தைப் போலவே தெலுங்கு பேசும் மக்களைக் கொண்டு தெலங்கானா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தற்போதைய அரசியல் நிலவரத்தைப் பார்ப்பதற்கு முன்பு, இந்த மாநிலம் தோன்றிய பின்னணியை சுருக்கமாகப் பார்ப்போம்.
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே ஹைதராபாத் சமஸ்தானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில ஆந்திர மாவட்டங்களை இணைத்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. 50 ஆண்டுகாலமாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன.
இந்தச் சூழலில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்த கே.சந்திரசேகர் ராவ் கடந்த 2001-இல் அக்கட்சியில் இருந்து விலகினார். நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இதற்குக் காரணமாகும். சந்திரசேகர் ராவ் அதே ஆண்டில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வென்றெடுக்கும் நோக்கில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.
கட்சி ஆரம்பித்த 60 நாள்களுக்கும் சித்திப்பேட்டை மாவட்ட ஊராட்சி சபைக்கான உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி நான்கில் ஒரு பங்கு இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின், 2004-இல் நடைபெற்ற மக்களவை மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் டிஆர்எஸ் கட்சி கூட்டணி அமைத்தது. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானா மாநிலத்தை உருவாக்கித் தருவதாக காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்தக் கூட்டணியில் டிஆர்எஸ் இடம்பெற்றது.
அத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதில் கே.சந்திரசேகரர் ராவும் அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வராக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பொறுப்பேற்றார். எனினும், தெலங்கானா மாநிலத்தை அமைப்பதில் காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மத்திய அமைச்சரவையில் இருந்து சந்திரசேகர் ராவ் 2006-இல் விலகினார். அப்போது ஐந்து எம்.பி.க்களைக் கொண்டிருந்த டிஆர்எஸ் கட்சி, மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. எனினும், இதனால் மன்மோகன் சிங் அரசின் ஸ்திரத்தன்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதன்பின் 2009 மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து டிஆர்எஸ் கட்சி போட்டியிட்டது. தேசிய அளவில் மூன்றாவது அணியில் இக்கட்சிகள் இணைந்தன. ஆந்திர அளவில் இக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் இடம்பெற்றன. எனினும், இந்தக் கூட்டணியால் ஆந்திரத்தில் பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை.
மாநிலத்தில் இருந்து 42 மக்களவைத் தொகுதிகளில் 33 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சிக்கு 6 இடங்களும், டிஆர்எஸ் கட்சிக்கு 2 இடங்களும் மட்டுமே கிடைத்தன. இடதுசாரிக் கட்சிகள் ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை. ஹைதராபாத் தொகுதியில் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி வெற்றி பெற்றது. அப்போது மக்களவையுடன் நடைபெற்ற ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.
ஆந்திரத்தில் இருந்து தெலங்கானாவைப் பிரிப்பதற்கான ஆந்திர மறுசீரமைப்பு மசோதாவை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்குப் பிரதிபலனாக, அந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் தன்னுடன் டிஆர்எஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை கொண்டிருந்தது. எனினும், தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக டிஆர்எஸ் கட்சி அறிவித்தது. எனவே, தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
ஒருங்கிணைந்த ஆந்திரத்துக்கு நடத்தப்பட்ட அந்தத் தேர்தலில் மக்களவைக்கான இடங்களில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி 19 இடங்களிலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி தெலங்கானா பகுதியில் இரண்டு இடங்களிலும், முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. அப்போது நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தெலங்கானா பகுதியில் உள்ள 121 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று டிஆர்எஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
அதே ஆண்டு (2014) ஜூன் 2ஆம் தேதி தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட்ட நாளில், புதிய முதல்வராக டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் பதவியேற்றார். அதன் பின் மக்களைக் கவரக் கூடிய பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்தார். அவரது ஆட்சியின் பதவிக்காலம் 2019 மே-ஜூன் வரை இருந்தபோதிலும் முன்கூட்டியே சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த சந்திரசேகர் ராவ் திட்டமிட்டார். அதன்படி தெலங்கானா சட்டப் பேரவை கடந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் கலைக்கப்பட்டது.
அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட பேரவைத் தேர்தலில் 88 இடங்களில் வெற்றி பெற்று டிஆர்எஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைத்தது. ஆந்திர அரசியலில் நீண்ட காலமாக எதிரெதிர் துருவங்களாக இருந்த காங்கிரஸ் கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் இத்தேர்தலில் அணிசேர்ந்து போட்டியிட்டும், கணிசமான வெற்றியைப் பெற இயலவில்லை. காங்கிரஸ் 19 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களிலும் மட்டுமே வென்றன. பாஜகவுக்கு ஓரிடமும், மஜ்லிஸ் கட்சிக்கு 7 இடங்களும் கிடைத்தன.
இந்நிலையில், தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட பிறகு தெலங்கானா முதன்முறையாக தற்போது மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 17 தொகுதிகளில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியும் அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்த மாநிலத்தில் பெயரளவுக்கே செல்வாக்கு கொண்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி சில தொகுதிகளில் மட்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனைக் கட்சி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
தெலங்கானாவில் பல கட்சிகள் போட்டியிட்டாலும், சந்திரசேகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சிக்கும், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி காணப்படுகிறது. தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றுக்கு மாற்றாக கூட்டாட்சி முன்னணி என்ற அணியை உருவாக்கும் முடிவில் சந்திரசேகர் ராவ் இருக்கிறார். அவரது கட்சி தற்போது மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் 16 இடங்களைக் கைப்பற்றுவது என்று இலக்கு நிர்ணயித்து களமிறங்கியுள்ளது. அவர் தன் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
இதனிடையே, தெலங்கானாவில் தனித்துக் களம் காணும் காங்கிரஸ் இதுவரை தலா எட்டு வேட்பாளர்கள் அடங்கிய இரு பட்டியல்களை வெளியிட்டு விட்டது. இரண்டாவது பட்டியலில் அக்கட்சியின் தெலங்கானா மாநிலத் தலைவர் உத்தம்குமார் ரெட்டியும் இடம்பெற்றுள்ளார். அவர் நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மது யாஷ்கி, நிஜாமாபாத் தொகுதியில் டிஆர்எஸ் கட்சித் தலைவரின் மகளும், தற்போதைய எம்.பி.யுமான கே.கவிதாவை எதிர்த்துக் களமிறங்குகிறார்.
நிஜாமாபாத் தொகுதியில் இரணாடவது முறையாகக் களமிறங்கியுள்ள கவிதா, மாநிலக் கட்சிகள் மூலமே நாடு வளர்ச்சியடையும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இம்முறை பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுடன் அணிசேராத மாநிலக் கட்சிகள் சுமார் 120 இடங்களில் வெற்றி பெறும் என்று அவை தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்றும் என்று அவர் கூறியுள்ளார்.
இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார்கள் என்று கருதப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், நடிகை விஜயசாந்தி ஆகியோருக்கு அக்கட்சி வாய்ப்பளிக்கவில்லை. குறிப்பாக, ஹைதராபாத் தொகுதியில் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை எதிர்த்துப் போட்டியிட அசாருதீனுக்கு காங்கிரஸ் வாய்ப்பளிக்கும் என்று கருதப்பட்டது. எனினும், அத்தொகுதியில் ஃபிரோஸ் கான் என்பவரை அக்கட்சி களமிறக்கியுள்ளது.
மொத்தமுள்ள 17 இடங்களில் 16 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்ட காங்கிரஸ், இன்னும் கம்மம் மக்களவைத் தொகுதிக்கு மட்டுமே வேட்பாளரை அறிவிக்கவில்லை. இத்தொகுதியில் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சௌத்ரிக்கு சீட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் கம்மம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களிலேயே காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவைப் பொருத்தவரை பாஜகவுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அண்மையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் விவகாரத்தை முன்வைத்து வாக்கு சேகரிக்க அக்கட்சி மேற்கொண்ட முயற்சி தெலங்கானாவில் எடுபடவில்லை என்பதே யதார்த்தம்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு இந்த மாநிலத்தில் பெரிய செல்வாக்கு இல்லை என்பதால், மல்காஜ்கிரி, கம்மம், செவெல்லா, அடிலாபாத், வாரங்கல் உள்ளிட்ட சில தொகுதிகளில் மட்டுமே போட்டியிட அக்கட்சி உத்தேசித்துள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனை கட்சி, தெலங்கானாவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. காபு சமூகம் மற்றும் தலித் வாக்கு வங்கியைக் குறிவைத்து இந்தக் கூட்டணி களமிறங்குகிறது.
இதனிடையே, கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் 18 எம்எல்ஏக்களில் 8 பேர் ஆளும் டிஆர்எஸ் கட்சியில் இணைந்து விட்டனர். அக்கட்சி தொடர்ச்சியாக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை கவர்ந்திழுத்து வருகிறது. இந்த மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய நாம நாகேஸ்வர ராவ் கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகினார். சில தினங்களுக்கு முன் சந்திரசேகர் ராவைச் சந்தித்துப் பேசிய அவர், விரைவில் டிஆர்எஸ் கட்சியில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
டிஆர்எஸ் கட்சியின் எதிர்பார்ப்பு
சந்திரசேகர் ராவின் மகனும் டிஆர்எஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான கே.டி.ராமாராவ் கூறுகையில் இம்முறை மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 150 இடங்களுக்கு மேலும், காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்களுக்கு மேலும் கிடைக்காது. அப்படிப்பட்ட சூழலில் சந்திரசேகர் ராவ் தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்றுவார். எங்கள் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றால் நாட்டின் அரசியல் சூழலையே அவர் மாற்றிக் காட்டுவார். 70 முதல் 100 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ள மாநிலக் கட்சிகளின் ஆதரவை அவர் திரட்டுவார். சமாஜவாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
தேசிய அளவில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவும் தாம் திட்டமிட்டுள்ளதாக சந்திரசேகர் ராவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத பட்சத்தில் கூட்டாட்சி முன்னணியை உருவாக்கி, அதில் முக்கியப் பங்கு வகிக்க டிஆர்எஸ் கட்சி விரும்புகிறது.
கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன?
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பலவற்றிலும், இந்த மக்களவைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 17 இடங்களில் அக்கட்சிக்கு 10 முதல் 15 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிப்புகள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 2 முதல் 5 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. ஒருவேளை மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், அடுத்த அரசு அமைப்பதில் டிஆர்எஸ் கட்சி முக்கியப் பங்கை வகிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம், கேசிஆர் எனப்படும் சந்திரசேகர் ராவ், கிங் மேக்கராக உருவெடுப்பாரா என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...