நோட்டா வாக்காளர்களைக் கவர கட்சிகள் தீவிரம்
By DIN | Published On : 22nd March 2019 01:42 AM | Last Updated : 22nd March 2019 01:42 AM | அ+அ அ- |

கடந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் நோட்டாவுக்கு 49 ஆயிரத்து 559 வாக்குகள் பதிவான நிலையில், இந்தத் தேர்தலில் அந்த வாக்காளர்களை வசப்படுத்த அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை அமைத்து வருகின்றன.
6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மக்களவைத் தொகுதியில் உதகை, குன்னூர், கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதிகள் நீலகிரி மாவட்டத்திலும், அவிநாசி சட்டப் பேரவை தொகுதி திருப்பூர் மாவட்டத்திலும் , மேட்டுப்பாளையம் சட்டப் பேரவை தொகுதி கோவை மாவட்டத்திலும், பவானிசாகர் சட்டப் பேரவை தொகுதி ஈரோடு மாவட்டத்திலும் உள்ளது.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், நீலகிரி தொகுதியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித் தனியாக களமிறங்கின. இதில், அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 4 லட்சத்து 63 ஆயிரத்து 700 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா 3 லட்சத்து 58 ஆயிரத்து 760 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் காந்தி 37 ஆயிரத்து 702 ஓட்டுகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரைப் பின்னுக்குத் தள்ளி 49 ஆயிரத்து 559 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்தது. இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளரின் மனு கடைசி நேரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. பாஜக களத்தில் இருந்திருந்தால் குறைந்தது 70 ஆயிரம் வாக்குகளைப் பிரித்திருக்கும் என உளவுத் துறையால் கூறப்பட்டது.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுகவும், பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுகவும் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், கடந்த தேர்தலில் பதிவான யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லையென்ற 49 ஆயிரம் நோட்டா ஓட்டுகளைக் கைப்பற்ற திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...