மாற்று அணி தோல்வியடைவது ஏன்?
By DIN | Published On : 22nd March 2019 01:43 AM | Last Updated : 22nd March 2019 01:43 AM | அ+அ அ- |

ஒரு தேர்தலில் தோற்றவுடனேயே மீண்டும் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் சில இடங்களுக்காக கூட்டுச் சேர்ந்து கொள்கையைக் கைவிடுவதே, தமிழகத்தில் மாற்று அணி தோல்வியடைவதற்குக் காரணம் என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றுகின்றன. ஆட்சியில் இருக்கும் ஒரு திராவிடக் கட்சிக்கு எதிரான வாக்குகள் மற்றொரு திராவிடக் கட்சிக்குச் செல்லுகின்றனவே தவிர, மூன்றாவதுஅணிக்கு செல்வதில்லை. இதற்குக் காரணம் என்ன?
1967 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக திமுக தலைமையில் அண்ணா அமைத்த கூட்டணி 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிறகு திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து அதிமுகவை உருவாக்கிய பிறகு தமிழக எதிர்க் கட்சிகள் மேற்கண்ட இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்தநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காக பல கட்சிகள் கூட்டாக இணைந்து மாற்று அணி ஒன்றினை 2016ஆம் ஆண்டு அமைத்தன. இனி ஒருபோதும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேரமாட்டோம் என சூளுரைத்து தேர்தலைச் சந்தித்தன. ஆனால் ஓர் இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. தொடர்ந்து மக்கள் பிரச்னைகளுக்காக 5 ஆண்டு காலம் அந்த மாற்று அணி போராடி, அடுத்த தேர்தலைச் சந்தித்திருந்தால் மக்களுக்கு இவர்கள் அங்குமிங்கும் ஓடமாட்டார்கள் என்ற நம்பிக்கை வந்திருக்கும்.
உதாரணமாக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 41.6% வாக்குகளைப் பெற்று 134 இடங்களைக் கைப்பற்றியது. திமுக 31.86% வாக்குகளைப் பெற்று 89 இடங்களைக் கைப்பற்றியது. மாற்று அணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சேர்ந்து 6.1% வாக்குகள் பெற்றன. ஆனால் சட்டப்பேரவையில் ஓர் இடம் கூட இந்த அணிக்குக் கிடைக்கவில்லை. கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்துக்கும், சட்டப்பேரவையில் பெற்ற இடங்களுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. அதிமுக பெற்ற 41.06% வாக்குகளுக்கு சட்டப்பேரவையில், 96 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 134 இடங்கள் கிடைத்தன. திமுக பெற்ற 31.86% வாக்குகளுக்கு சட்டப்பேரவையில் 74 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 89 இடங்கள் கிடைத்துள்ளன. 6.1% வாக்குகளைப் பெற்ற 3 ஆவது அணிக்கு சட்டப்பேரவையில் 14 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.
இது ஒரு உண்மையை எடுத்துக்காட்டுகிறது. கொள்கை அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் தனித்து தேர்தலில் போட்டியிட்டு பெறும் வாக்குகளின் சதவீதத்துக்கு ஏற்ப சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை இல்லாததே இதற்குக் காரணமாகும். கொள்கையற்றக் கூட்டணிகள் உருவாவதும் இதன் விளைவாகவே ஆகும்.
தற்போதைய தேர்தல் முறையினால் மற்றொரு பெருங்கேடு விளைந்துள்ளது. கோடீசுவரர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நிலை உருவாகி ஜனநாயக முறை, பணநாயக முறையாக மாறிவிட்டது.
கொள்கை அடிப்படையில் மாற்று அணி அமைக்கப்பட்டு 5 ஆண்டு காலம் பொறுமையுடன் மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தியும், ஆளுங் கட்சியின் தவறுதல்களை, எதேச்சதிகாரப் போக்கை அம்பலப்படுத்தி வேலை செய்தால் மாற்று அணி மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். ஒரு தேர்தலில் தோற்றவுடனேயே மீண்டும் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் சில இடங்களுக்காக கூட்டுச் சேர்ந்து கொள்கையைக் கைவிடுவதனால் மக்கள் மாற்று அணியை ஆதரிக்கத் தயங்குகிறார்கள். கொள்கை உறுதிப்பாடும், மக்கள் மீதான நம்பிக்கையும் மட்டுமே மாற்று அணிக்கு வெற்றியைத் தேடித்தரும் என்றார் அவர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...