தனித் தன்மையை இழந்துவிடக் கூடாது!
By -இல.அன்பரசு | Published On : 28th March 2019 01:53 AM | Last Updated : 28th March 2019 01:53 AM | அ+அ அ- |

திண்டிவனம் கே.ராமமூர்த்தி
காமராஜர் காலத்தில் இருந்து 24 ஆண்டுகள் காங்கிரஸில் பணியாற்றி, மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியவர் திண்டிவனம் கே.ராமமூர்த்தி (84). தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், கட்சியின் மாநில பொதுச் செயலராகவும் பணியாற்றியவர்.
ஒரு கட்டத்தில் காங்கிரஸிலிருந்து விலகி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். பின்னர், தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அரசியலில் தனது நீண்ட நெடிய அனுபவம் குறித்து நம்மோடு பகிரிந்துகொண்ட விவரம்:
முதல் தேர்தல் அனுபவம் எவ்வாறு இருந்தது?
தமிழகத்தில் 1952-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது படித்துக் கொண்டிருந்தேன். எனது உறவினர் வேணுகோபால் தேர்தலில் போட்டியிட்டபோது, அரசியல் அனுபவம் கிடைத்தது. திண்டிவனம் (தனி) தொகுதியில் ஜெயராமனும், பொதுத் தொகுதிக்கு முனுசாமியும் போட்டியிட்டனர்.
1952-இல் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி தொடங்கப்பட்டது. முதல் வாக்கை அப்போது பதிவு செய்தேன். ராஜாஜி அறிவுறுத்தியதன் பேரில், அவரது சுதந்திரா கட்சியில் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டேன். அதில் வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரஸ் வெற்றி பெற்றது.
26 வயதில் நான் தேர்தலில் போட்டியிட்டு, பிரசாரம் செய்ததையும், அதிக வாக்குகள் பெற்றதையும் அறிந்த காமராஜர், என்னை அழைத்து, தேர்தலில் போட்டியிட அறிவுறுத்தினார். நான் தயங்கிய போதும், கட்சி உறுப்பினராக சேர்த்து களத்தில் இறங்க அன்புக் கட்டளையிட்டார் காமராஜர்.
1967-இல் திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். காங்கிரஸில் வெற்றி பெற்ற 50 பேரில் நானும் ஒருவன். காமராஜர் விருதுநகரில் தோல்வியடைந்தார். 1976-இல் மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கினார் இந்திரா காந்தி. 1991-இல் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
1996-இல் காங்கிரஸ்-திமுக கூட்டணி சேர்ந்தபோது, கட்சிக்கு அதிக இடங்கள் கேட்டு கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தேன். என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிறகு, தேசியவாத காங்கிரஸில் இணைந்தேன். தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸை தோற்றுவித்த நிலையில், தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்.
தேர்தலின்போது வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்வார்கள்?
அன்றைய தேர்தலின் போது, வேட்பாளர் பணம் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை இல்லை. முக்கியத் தலைவர்கள் சேர்ந்து, பல ஊர்களுக்குச் செல்வார்கள். அங்குள்ள முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுவர். பொதுக்கூட்டங்கள் மூலமே பிரசாரம் நடக்கும். ஊர்கூடி பேசியும், உறவினர்களுக்குள் கலந்தாலோசித்தும் ஒற்றுமையாக வாக்களிப்பார்கள்.
பிரசார கூட்டங்களுக்கு, அந்தந்த ஊர்க்காரர்களே செலவு செய்வர். காங்கிரஸுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சிகளுக்கு, மும்பை உள்ளிட்ட வெளி மாநில தொழில் நிறுவனங்களிடமிருந்தும் நிதியுதவியும் வந்தது. ஆனால், காங்கிரஸார் அதைத் தடுத்துவிட்டனர்.
பிரசாரத்துக்கு காரில் செல்வதுதான் செலவாக இருக்கும். வாக்குச்சாவடி செலவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கொடுப்பார்கள், அதையும் பல கிராமங்களில் வாங்க மறுத்தனர். பிரசாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள், அவருடன் செல்லும் கட்சியினரை, சாப்பாடு போட்டு வாக்காளர்கள் உபசரித்தனர்.
தேர்தலுக்கே பணம் செலவிடாத காலம் போய், தற்போது வாக்குக்கு பணம் கொடுக்கும் காலமாகிவிட்டது. வேட்பாளரின் தகுதியை பணம்தான் நிர்ணயிக்கிறது.
இப்போதைய தேர்தல் கூட்டணி குறித்து...
அனைத்துக் கட்சிகளுமே, கொள்கைக்கு தொடர்பே இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணியாகி விட்டது. கொள்கை சார்ந்த தேர்தல் இல்லை. விமர்சிப்பதும், கூட்டு சேர்ந்து புகழ்வதும் வாடிக்கையாகிவிட்டது. தேர்தல் கூட்டணி யாருடனும் இருக்கலாம். ஆனால், தனித் தன்மையை இழந்துவிடக் கூடாது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...