இது ஒன்றும் புதிதல்ல...!
By - க. தங்கராஜா | Published On : 30th March 2019 01:27 AM | Last Updated : 30th March 2019 01:27 AM | அ+அ அ- |

1961 ஆபரேஷன் விஜய்
இந்தியாவில் அந்தப் பிரச்னை அப்போது ஒன்றும் புதிதாகத் தோன்றிவிடவில்லை. அது தொடர்ந்து பல ஆண்டுகளாகவே நீடித்து வந்ததுதான். இருப்பினும் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அந்தப் பிரச்னைக்கான முடிவைத் தேட முயன்றது ஆளுங்கட்சி... அது ஒரு ராணுவ நடவடிக்கை. வெறும் 2 நாள்கள் மட்டுமே நடைபெற்ற இந்தத் தாக்குதல் நடவடிக்கையும் அதில் கிடைத்த வெற்றியும் ஆளுங்கட்சி தன் மீதான விமர்சனங்களுக்கு அளித்த பதிலாக அப்போது பார்க்கப்பட்டது.
மேலும், இந்த ராணுவ வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து நாடு முழுவதும் கொண்டாடியது ஆளுங்கட்சி. ஆனால், எதிர்க்கட்சிகளோ அந்த நடவடிக்கையை தேர்தலுக்கான நடவடிக்கை என்றன. பிரச்னை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வந்த நிலையில், தேர்தல் நேரத்தில் ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது, அதன் உள்நோக்கம் தேர்தல் வரவிருப்பதைத் தவிர வேறு என்ன என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
எதிர்பார்த்தது போலவே அந்த ராணுவ வெற்றி தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது. ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள தொகுதியில் ராணுவ அமைச்சர் போட்டியிட்டார். கடுமையான எதிர்ப்புகளுக்கும் இடையே ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றியும் பெற்றார். அத்துடன் ஆளுங்கட்சியும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
அந்தத் தாக்குதல் நடைபெற்றது ஜவாஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில். தாக்குதலுக்கு உள்ளான இடம், இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போர்த்துகீசியர்களின் காலனியாதிக்கத்தில் நீடித்து வந்த கோவா. வெற்றி பெற்ற ராணுவ அமைச்சரின் பெயர் வி.கே.கிருஷ்ண மேனன்.
போர்ச்சுகல்லிடம் இருந்து விடுதலை கோரி அஹிம்சை வழியிலும், தீவிரவாதத் தாக்குதல்கள் மூலமும் கோவாவில் பல்வேறு குழுக்கள் போராடி வந்தன. இந்தியாவை விட்டு வெளியேறும்படி போர்ச்சுகலுக்கு பல முறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாத நிலையில்தான் 1961 டிசம்பர் 18-ஆம் தேதி ஆபரேஷன் விஜய் என்று பெயரிடப்பட்ட தாக்குதல் மூலம் கோவா விடுவிக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
விடுதலை பெற்று 14 ஆண்டுகளாக நடத்தப்படாத இந்தத் தாக்குதல் 1962 பிப்ரவரி மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தேர்தலை முன்னிட்டே நடைபெற்றதாக எதிர்க்கட்சிகளான ஜனசங்கம் (இன்றைய பாஜக), இந்திய கம்யூனிஸ்ட் போன்றவை குற்றஞ்சாட்டின. முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற சில கசப்பான நிகழ்வுகளும் இந்தத் தாக்குதலுக்கு உந்துதலாக இருந்துள்ளன.
சீன ஆக்கிரமிப்பில் இருந்து திபெத் விடுதலை கோரி வந்த நிலையில், திபெத்தில் இருந்து உயிருக்கு அஞ்சி தப்பி வந்த தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது, சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பு உள்ளிட்ட அண்டை நாட்டு விவகாரங்களும், அஸ்ஸாம், மத்தியப் பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் போன்ற உள்நாட்டு விவகாரங்களும் அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.
ஆபரேஷன் விஜய்-க்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 494 இடங்களில் 361 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார் நேரு (முந்தைய தேர்தலில் அக்கட்சி 371 இடங்களில் வென்றிருந்தது). பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் பாம்பே நகர வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு (கோவாவை ஒட்டியுள்ள தொகுதி) ஒரு லட்சத்து 45,358 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து நின்ற ஜே.பி.கிருபளானியை வீழ்த்தினார்.
இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தேர்தலிலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது. 1998-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி, சுப்பிரமணியன் சுவாமி நடத்திய தேநீர் விருந்தின் காரணமாக 13 மாதங்களில் முடிவுக்கு வந்தது.
தேர்தல் நடைபெறும் வரை காபந்து பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, இந்தியாவின் நிலையற்றத்தன்மையை பயன்படுத்திக் கொண்டு எல்லையில் வாலாட்டியது பாகிஸ்தான். 1999 மே மாதம் பாகிஸ்தான் உடனான கார்கில் போர் நடைபெற்றது. போர் முடிவடைந்த அதே ஆண்டு செப்டம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் பாஜகவே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...