தொங்கு நாடாளுமன்றமும்... குடியரசுத் தலைவரின் முடிவுகளும்...!

உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த ஏப்ரல் 11-ஆம்
வாஜ்பாய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சங்கர் தயாள் சர்மா (1996)
வாஜ்பாய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சங்கர் தயாள் சர்மா (1996)


உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 12-ஆம் தேதி வரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், ஏழாவது மற்றும் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்தி ன் செயல்பாட்டில், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் எத்தனையோ குற்றம் குறைகள் இருந்தாலும் நமது தேர்தல் முறையை நினைத்து ஒவ்வொருவரும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்.

ஒருவழியாக மக்களவைத் தேர்தல் முடியும் நிலையில், அடுத்ததாக ஆட்சி அமைக்கப்போகும் கட்சி எது? எந்தக் கட்சியாவது தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்குமா? கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது தொங்கு நாடாளுமன்றம் ஏற்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல, குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க முதலில் அழைப்பது தனிப்பெரும் கட்சியையா? அதிக இடங்களைக் கைப்பற்றிய தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் தலைவரையா? அதிக இடங்களைக் கைப்பற்றிய தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியின் தலைவரையா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 273 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தொடரும் நம்பிக்கையில் இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான அணி, கூட்டணி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் இருக்கிறது.இந்த இரு பிரதான கட்சிகள் அல்லாமல் மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து 3-ஆவது அணி ஆட்சி அமைக்கவும் ஒரு முயற்சி நடக்கிறது. இந்த மூன்றில் ஏதாவது ஒன்று நடந்தால் அடுத்த ஆட்சி அமைவதில் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், நான்காவதாக தொங்கு நாடாளுமன்றம் அமையவும் வாய்ப்பு உள்ளது. எந்த ஓர் அணியும் அறுதிப் பெரும்பான்மை எனப்படும் 273 தொகுதிகளில் வெற்றி பெற இயலாமல்போகும்போது தொங்கு நாடாளுமன்றம் அமையலாம். அச்சூழ்நிலையில் குடியரசுத் தலைவரின் பணி மிக முக்கியமானதாக இருக்கும். இந்திய பொதுத் தேர்தல் வரலாற்றில் எப்போதெல்லாம் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது, அப்போது குடியரசுத் தலைவர் எடுத்த முடிவுகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

வி.பி.சிங்குக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் ஆர்.வெங்கட்ராமன் (1989)

1989-வி.பி.சிங்
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற 1952 முதல் 1984 வரை காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. போஃபர்ஸ் முறைகேடு விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து 1989-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில்தான் முதல் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாதபோதும் 197 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. அந்த வகையில் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜீவ் காந்தியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால், ராஜீவ் ஆட்சி அமைக்க முன்வராததையடுத்து, 143 இடங்களைப் பெற்றிருந்த 2-ஆவது தனிப்பெரும் அணியான தேசிய முன்னணியின் தலைவர் வி.பி.சிங்கை ஆட்சி அமைக்குமாறு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். அதேவேளையில், பிரதமராகப் பதவியேற்ற 30 நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வி.பி.சிங்கிடம் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு பாரதிய ஜனதா, இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த வி.பி.சிங், குறிப்பிட்ட நாள்களுக்குள் அவையில் தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபித்தார். தனிப்பெரும்பான்மை கட்சி என்ற பதம் பலமிழந்து தனிப்பெரும் கட்சி என்ற பதம் பலம்பெறத் தொடங்கியது அப்போதுமுதல்தான்.

1996-வாஜ்பாய்
அடுத்ததாக 1996-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும் தொங்கு நாடாளுமன்றமாக அமைந்தது. அத்தேர்தலில் 161 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வாஜ்பாயை பிரதமராக நியமித்தார் அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா. மேலும், மே 31-ஆம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு கட்சிகளின் ஆதரவைப் பெற முடியாத நிலையில், மே 28-ஆம் தேதி பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் வாஜ்பாய். அதன்பிறகு காங்கிரஸ் ஆதரவுடன் தேவெ கௌடா தலைமையில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தது.

1998-இல் புதிய நடைமுறை
இந்த இரு தொங்கு நாடாளுமன்ற நிகழ்வின்போதும், தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்த அப்போதைய குடியரசுத் தலைவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். 1998-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவின்போது பாரதிய ஜனதா கூட்டணி 280 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தும் ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தினார் அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன். தனிப்பெரும்பான்மை அணி என்ற வகையில் பாரதிய ஜனதா சார்பில் வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த கே.ஆர்.நாராயணன், ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் கட்சிகள், எம்.பி.க்களின் கடித ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். 

மேலும், பிரதமராகப் பதவியேற்ற 10 நாள்களுக்குள் பெரும்பான்மையை அவையில் நிரூபிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். 1996 முதல் 1998 வரையிலான மூன்று ஆண்டுகளில் வாஜ்பாய், தேவெ கௌடா, குஜ்ரால் என மூன்று பிரதமர்கள் பதவியேற்க நேர்ந்ததையடுத்து, நிலையான அரசு அமைவதை உறுதிப்படுத்தும் நோக்கில் கே.ஆர்.நாராயணன் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறப்பட்டது.

தொங்கு நாடாளுமன்றம் அமையும்போது, முதலில் ஆட்சியமைக்கும் கட்சி குறிப்பிட்ட நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகும்போது, அடுத்ததாக இரண்டாவது தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறும்போது, மக்களவையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவிடக்கூடும். இதுதான் கடந்தகால வரலாறு. இந்த முறை வரலாறு தொடருமா? மாறுமா? என்பதற்கு விடை மே 23-ஆம் தேதி தெரியும். இந்த தேர்தலில் எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழலில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மேற்கொள்ளும் முடிவுகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com