நினைவுத் திரையில்...

சென்னை கோகலே ஹாலில் அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் கச்சேரி. கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை பிடில். அரியக்குடியின் சங்கீதம் என்றால் சொல்லவே வேண்டாம்- துரித காலத்தில் ஸ்வரம் பாடிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஈடு கொடுத்து ராஜமாணிக்கம் பிள்ளையும் வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறார்.

சென்னை கோகலே ஹாலில் அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் கச்சேரி. கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை பிடில். அரியக்குடியின் சங்கீதம் என்றால் சொல்லவே வேண்டாம்- துரித காலத்தில் ஸ்வரம் பாடிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஈடு கொடுத்து ராஜமாணிக்கம் பிள்ளையும் வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறார்.

கும்பகோணத்திலிருந்து வரும்போதே, பிள்ளைவாளின் பிடில் பெட்டிக்குள் ஒரு கருந்தேள் புகுந்து கொண்டு விட்டிருந்தது. அப்போதெல்லாம், கருந்தேள் நிறைய இருக்கும். இப்போதுதான் அந்த ஜீவன் கணிசமாக குறைந்துவிட்டது. அந்தத் தேள் மெல்லப் பெட்டியிலிருந்து வெளியேறி, ராஜமாணிக்கம் பிள்ளையின் ஜிப்பா வழியாக கழுத்தை நோக்கி ஏறிக் கொண்டிருந்தது. சட்டென்று இது ஒரு ரசிகரின் பார்வையில் பட்டுவிட்டது. அவர் கச்சேரிக்கு பங்கம் ஏற்பட்டுவிடாமல் மெல்ல நகர்ந்து வந்து, ராஜமாணிக்கம் பிள்ளையின் பிடரியில் உட்கார்ந்திருந்த தேளை "பளார்' என்று ஒரு போடு போட்டுவிட்டார்.

தேள் செத்து விழுந்தது இருக்கட்டும். ராஜமாணிக்கம் பிள்ளை அடி விழுந்த வேகத்தில் சரசரவென்று அடுத்த கால வேகத்தில் பிடில் வாசிக்கத் தொடங்கிவிட்டார். அதற்குப் பிறகு அவர் சொன்னாராம்- ""இனிமேல் இந்த ஜென்மாவில் அந்த துரித காலம் வராதே!''

========================

திருவாரூர் பக்கத்தில் சர் ஆர்.எஸ். சர்மா என்கிற மிராசுதார் ஒருவர் இருந்தார். அவரை மாவூர் சர்மா என்றுதான் அழைப்பார்கள். அப்போதிருந்த வெள்ளைக்கார அதிகாரிகள் எல்லாம் அவரது கையில். பிரிட்டிஷாரின் பரம விசுவாசி.

அவர் கல்கத்தாவில் இருப்பது போன்ற ஒரு காளி கோயிலை மாவூரில் கட்டினார். அந்தக் கோயிலுக்கு, அன்றைய சென்னை ராஜதானியின் கவர்னராக இருந்த லார்ட் விலிங்டனை அழைத்தார். லார்ட் விலிங்டனும் அவரது மனைவி லேடி விலிங்டனும் அவரது அழைப்பை ஏற்று மாவூருக்கு வந்தார்கள் என்றால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்திருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

கவர்னரை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகள் செய்திருந்தார் மாவூர் சர்மா. பேண்ட் வாத்தியம், சாக்ஸஃபோன் போன்றவற்றுடன் வேண்டா வெறுப்பாக நமது கர்னாடக சங்கீதமும் இருக்கட்டுமே என்று கருதி, ஒரு புல்லாங்குழல் வித்வானை ஃப்ளூட் வாசிக்க ஏற்பாடு செய்தார். கவர்னர் வரவேற்பில் கலந்து கொள்ளும் புல்லாங்குழல் வித்வான் வேட்டி, சட்டையில் வந்தால் எப்படி? அவருக்கு "ட்வீட்' கோட்டும் சூட்டுமெல்லாம் தைத்துக் கொடுத்தார் சர்மா.

பாவம் அந்த புல்லாங்குழல் வித்வான். கோட்டு சூட்டெல்லாம் போட்டால் அவரால் புல்லாங்குழல் வாசிக்க முடியவில்லை. வந்தது வரட்டும் என்று வழக்கமான வேட்டி சட்டையில் குறிப்பிட்ட நாளில் புல்லாங்குழலுடன் ஆஜரானார் வித்வான். சர்மாவுக்குக் கோபமோ கோபம். கோயில் மண்டபத்தில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து, கவர்னர் தம்பதியர் போவதுவரை வாசித்துக் கொண்டிரும் என்று உத்தரவு போட்டார்.

லார்ட் விலிங்டனும், லேடி விலிங்டனும் வந்தார்கள். கோயிலுக்குள் நுழையும்போதே, ஏதோ ஒரு இடத்திலிருந்து வித்வான் புல்லாங்குழல் வாசிப்பது கேட்டது. "ரொம்ப இனிமையாக இருக்கிறதே...' என்றபடி லேடி விலிங்டன் புல்லாங்குழல் இசை வந்த இடத்தை நோக்கி நகர, கவர்னர் உள்பட கூட வந்த கூட்டமும் பாகவதரை நோக்கி நகர்ந்தது.

கவர்னர் தனது புல்லாங்குழல் சங்கீதத்தைக் கேட்க வந்ததில் பாகவதருக்குப் பரம ஆனந்தம். குஷியில் தனக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் காட்டத் தொடங்கிவிட்டார். பக்க வாத்தியங்கள் வரவழைக்கப்பட்டு, அந்த இடத்தில் இருந்தபடியே அவர் சில மணி நேரம் புல்லாங்குழல் வாசிக்க, கவர்னர் உள்ளிட்டோர் நகராமல் கேட்டு ரசித்தனர்.

""உங்கள் அற்புதமான இசைக்கு எவ்வளவு தந்தாலும் தகும்'' என்று கூறி லேடி விலிங்டன் தனது கைப் பையிலிருந்து நூறு பவுண்டு நோட்டைக் கொடுத்தபோது, பாகவதரின் கண்களில் குளம். மாவூர் சர்மாவின் முகத்தில் ஈயாடவேண்டுமே!

========================

கும்பகோணம் சிவக்கொழுந்து என்பவர் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான நாயன வித்வான். அவர் தங்க நாயனம் வைத்திருந்தார். தங்கப் பிளேட்டிங்தான் என்றாலும், அதுவே இருபது முப்பது பவுனுக்கு மேல் தேறுமே... அவரது வாசிப்பைக் கேட்க வரும் கூட்டம் பாதி, அந்தத் தங்க நாயனத்தைப் பார்க்க வரும் கூட்டம் பாதி.

÷மெலட்டூர் கைலாசம் அய்யர் என்றொரு மிராசுதார். கும்பகோணம் சிவக்கொழுந்தின் பரம ரசிகன். தனது ஊரில் சிவக்கொழுந்து கச்சேரி பண்ண வேண்டும் என்பது அவரது ஆசை. அப்போது வழியில் காட்டுப் பிரதேசம் எல்லாம் இருப்பதால், தங்க நாயனத்துடன் தன்னால் வர இயலாது என்று சொல்லிவிட்டார் சிவக்கொழுந்து.

÷விடுவாரா மிராசுதார்? கும்பகோணத்திலிருந்து மெலட்டூர் வரை முப்பது அடிக்கு ஒரு அடியாள்- கையில் வேல், கம்பு என்று வைத்துக் கொண்டு இருபுறமும் வரிசையாகக் காவல் போட்டு, முன்னும் பின்னும் காவலுக்கு இரண்டு மாட்டு வண்டிகளையும் போட்டு, சாரட்டில் கும்பகோணம் சிவக்கொழுந்தைத் தனது ஊருக்கு அழைத்துப் போய்க் கச்சேரி பண்ணச் சொன்னார்.

÷அன்று சிவக்கொழுந்து ஒரு "காம்போதி' வாசித்தாராம். அதில் உருகிப் போன மெலட்டூர் கைலாசமய்யர், "சிவக்கொழுந்து, இந்த ஒரு காம்போதியில நான் பட்ட சிரமமெல்லாம் போயிடுத்து...' என்று கண்ணீர் மல்க உருகியதாகச் சொல்வார்கள்.

========================

ஆண்டிப்பட்டி ஜமீன் பெத்தாச்சி செட்டியார் பெரும் தனவந்தர். புரவலர். கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நிர்வாகம் அவருடையதுதான். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் பரம ரசிகர் பெத்தாச்சி செட்டியார். காசீப்பூரிலிருந்து பீப்பாய் பீப்பாயாக பன்னீர் வரவழைத்து, கச்சேரி முடிந்தவுடன், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதருக்கு பன்னீரால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தாராம் செட்டியார். அந்த நாளில் செட்டியார் பற்றி இப்படிப் பல சம்பவங்கள் சொல்வார்கள்.

========================

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் நடந்த இன்னொரு நிகழ்ச்சி. முசிரி சுப்பிரமணிய அய்யர் கச்சேரி. புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை கஞ்சிரா. முசிரி விஸ்தாரமாக "காம்போதி' ஆலாபனை செய்து கொண்டிருக்கிறார்.

÷தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை தனது சிஷ்யனிடம் ஜாகையிலிருந்து இன்னொரு கஞ்சிராவை எடுத்துக் கொண்டு வரும்படி அனுப்பி இருந்தார். போகும்போது கூட்டமில்லை. கொஞ்ச நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கச்சேரி கேட்க கூடிவிட்டது. சிஷ்யன் கூட்டத்தில் சிக்கி மேடைக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது தக்ஷிணாமூர்த்திப் பிள்ளைக்குப் புரிந்தது. அவர் ஒரு உபாயத்தைக் கையாண்டார்.

""ஆண்டவனே, ஒரு நிமிஷம் நிறுத்துங்க'' என்று முசிரியிடம் அவர் சொன்னதும், தார ஸ்தாயியில் பாடிக் கொண்டிருந்த இடத்தில் நிறுத்தினார் முசிரி.

""என் சிஷ்யன் மேடைக்கு வர வழிவிட்டால்தான் மேற்கொண்டு கச்சேரி நடக்கும்'' என்று மைக்கில் தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை அறிவிக்க, கூட்டம் தன்னைப் போல விலக, அந்த சிஷ்யன் கம்பீரமாக மேடையை நோக்கி நடந்து வந்தான்.

கஞ்சிரா கையில் கிடைத்தவுடன், அதில் ஒரு சாப்புக் கொடுத்து, "ஆண்டவனே, பாடுங்க' என்று தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை கூற, தார ஸ்தாயியில் விட்ட இடத்திலிருந்து எதுவுமே நடக்காதது போல பாடத் தொடங்கினாராம் முசிரி.

கரகோஷம் விண்ணைப் பிளக்காமல் என்ன செய்யும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com