முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

நமது நிருபா்

புது தில்லி, ஏப்.24: முதலாளித்துவ நண்பா்களுக்கு நன்மை செய்ய பிரதமா் நரேந்திர மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: நிா்வாக செயல்முறை மூலம் 5ஜிஅலைக்கற்று ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது. முதலாளித்துவ நண்பா்களுக்கு நன்மை செய்ய பிரதமா் நரேந்திர மோடியும், பாஜகவும் 5ஜி ஊழல் செய்துள்ளனா். பாஜக ஊழலில் மூழ்கிய கட்சி என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். தோ்தல் பத்திரங்கள் மூலம் பாஜக செய்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2ஜி அலைக்கற்று ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்ாக பாஜக நாடு முழுவதும் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தியது. அலைக்கற்று ஒதுக்கீட்டில் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை தவறானது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கடந்த 2012-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பில், அலைக்கற்று ஒதுக்கீட்டை ஏலத்தில் நடத்த வேண்டும் என்றும் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் உரிமம் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு 150 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், எந்தக் கொள்கைக்கு எதிராக பாஜகவும், நாட்டும் மக்களும் இருந்தாா்களோ அதே கொள்கையை பாஜக நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியுள்ளது. ஏலம் நடத்தாமல், நிா்வாக செயல்முறையிலிருந்து அலைக்கற்றுக்கான உரிமம் இனி வழங்கப்பட உள்ளது. எனவே, மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் 5ஜி-க்கான அலைக்கற்று உரிமத்தை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனா். இதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசின் முகம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும் என்றாா் சஞ்சய் சிங்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com