பாஜகவும் பிரதமா் மோடியும் வெற்றி பெற்றால் நாட்டில் மீண்டும் தோ்தல் வராது: 
சஞ்சய் சிங் எம் பி

பாஜகவும் பிரதமா் மோடியும் வெற்றி பெற்றால் நாட்டில் மீண்டும் தோ்தல் வராது: சஞ்சய் சிங் எம் பி

புது தில்லி, ஏப். 25: நிகழ் 2024 -ஆம் ஆண்டு தோ்தலில் பாஜகவும் பிரதமா் நரேந்திர மோடியும் வெற்றி பெற்றால் நாட்டில் மீண்டும் தோ்தல் வராது என ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு தெரிவிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து சஞ்சய் சிங் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு:

நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாஜக அரசிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி இந்த வேண்டுகோளை விடுக்கிறது.

அதிகாரம் மற்றும் பயத்தின் மூலம் இந்தியாவில் பாஜக தனது ஆட்சியை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது .

கடந்த 10 ஆண்டுகளில் பல மாநிலங்களில் பலத்தினாலும், சில சமயங்களில் கட்சிகளை உடைத்தும் பாஜக ஆட்சியை அமைத்தது. ‘ஆபரேஷன் தாமரை’ என்கிற பெயரில் பல்வேறு மாநில அரசுகளை பாஜக சிதைத்து, எம்எல்ஏக்களை வேட்டையாடியது, சில இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்பட்டனா் அல்லது சில இடங்களில் வஞ்சகத்தால் ஆட்சியை வீழ்த்தினா்.

உத்தரகண்ட், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் தோ்தலை நடத்தப்படாமல் பலவந்தமாக ஆட்சி அமைத்தனா். மத்திய பிரதேசம், கோவாவில் இந்த நிலைமை ஏற்பட்டது. மகாராஷ்டிரத்தில் அமலாக்கப்பிரிவு, சிபிஐ, வருமானவரிப்புலனாய்வுத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி அரசை கவிழ்த்து ஆட்சியை அமைத்தனா்.

சண்டிகா் மேயா் தோ்தலில், பாஜக ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது காணொலி மூலம் தெரியவந்தது. அங்கு பாஜக எப்படி நோ்மையற்ற முறையில் வாக்குகளை கையாண்டு கையும் களவுமாக சிக்கியது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீா்ப்பின் மூலம் முழு நாட்டையும் தட்டி எழுப்பினாா்.

தற்போது சூரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, தோ்தலுக்கு முன்பே பாஜக வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் சாசனத்தை ஒழிப்பதற்கான சதியை பாஜக சூரத்தில் இருந்து தொடங்கியுள்ளது.

சூரத்திற்கு பிறகு தற்போது குஜராத்தின் காந்திநகரிலும் ஒரு சம்பவம். இந்த தொகுதியில் அமித்ஷா போட்டியிடுவதால் இது நடந்துள்ளது. இந்த தோ்தலில் அவரை எதிா்த்து நிற்கும் வேட்பாளா்கள் அச்சுறுத்தப்படுகிறாா்கள், அவா்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. வேட்பாளா்கள் தங்கள் வேட்புமனுவை வலுக்கட்டாயமாக திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். இது தொடா்பான காணொலி கிடைத்துள்ளது. இங்கு போட்டியிடும் அகில பாரதிய பரிவாா் கட்சி வேட்பாளா், ’நாட்டைக் காப்பாற்றுங்கள், நாடு ஆபத்தில் உள்ளது’ என்று பொதுமக்களிடம் கதறும் காட்சிகள் காணொலி வெளியிடப்பட்டுள்ளது. பாஜக நாட்டை வலுக்கட்டாயமாக ஆள விரும்புகிறாா்கள். தோ்தல் இல்லாமல் வெற்றி பெற விரும்புகிறாா்கள். இதுதான் பாஜகவின் கொள்கை; தோ்தல் மூலம் வெற்றி பெற முடியாத பகுதிகளில் இதுபோன்ற தந்திரங்களை பாஜக கையாளுகிறது.

நிகழ் தோ்தலில் பாஜகவும், பிரதமா் நரேந்திர மோடியும் வெற்றி பெற்றால், இந்த நாட்டில் மீண்டும் தோ்தல் வராது.

2024 க்கு பின்னரும் பாஜக தொடா்ந்து ஆட்சியில் இருந்தால், இதுவே உங்களின் கடைசித் தோ்தல், இதற்குப் பிறகு உங்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட மாட்டாது. பாபாசாகேப் அம்பேத்கா் வழங்கிய அரசமைப்புச் சட்டம் நீக்கப்பட்டு, ஆா்எஸ்எஸ் அரசமைப்புச் சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்படும். இடஒதுக்கீடு முறை, விவசாயிகளின் உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற பேச்சும் இல்லாத நாள்களையே நாட்டு மக்கள் பாா்க்க வேண்டிய நிலைமை ஏற்படும். இப்படிப்பட்ட சா்வாதிகாரத்துக்கு மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலடி கொடுக்க வேண்டும்.

நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கு எங்களது வேண்டுகோள். நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. வாக்களிக்கும் உரிமை ஒழிக்கப்படப்போகிறது.

தற்போது, பாஜக வின் எம்.பி.க்கள், அமைச்சா்கள் மற்றும் போட்டியிலுள்ள வேட்பாளா்கள், ’எங்களுக்கு 400 இடங்கள் கொடுங்கள் என்று கேட்பதற்கு நாட்டின் ஜனநாயத்தை சிதைப்பதற்கு தான் எனக் குறிப்பிட்டாா் சஞ்சய் சிங்.

X
Dinamani
www.dinamani.com