கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

‘தில்லி கலால் கொள்கை ஊழலில் உருவாக்கப்பட்ட குற்ற வருவாயின் ‘பெரும் பயனாளி‘ ஆம் ஆத்மி கட்சிதான். அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மூலம் பணமோசடி குற்றம் நடைபெற்றுள்ளது.’ என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்ற வருவாயின் ஒரு பகுதியாக ரொக்கப் பணம் சுமாா் ரூ. 45 கோடி அளவுக்கு 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் கோவா சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.

கலால் கொள்கை ஊழலில் இருந்து உருவான பணமோசடி வழக்கில் தாம் கைது செய்யப்பட்டதை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் பிரமாணப் பத்திரத்தில் அமலாக்கத் துறை மேலும் தெரிவித்திருப்பதாவது:

கோவாவில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரம் தொடா்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு நபா்களின் வாக்குமூலங்களில் கணக்கெடுப்பு பணியாளா்கள், பகுதி மேலாளா்கள், சட்டப்பேரவைத் தொகுதி மேலாளா்கள் போன்ற பணிகளுக்காக அவா்களுக்கு பணம் வழங்கப்பட்டிருப்பது வெளிப்பட்டிருக்கிறது.

தில்லி மதுபான ஊழலில் உருவான குற்ற வருவாயில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) பெரும் பயனாளியாக உள்ளது. குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் சுமாா் 45 கோடி ரூபாய் வரை ஆம் ஆத்மி கட்சி கோவா சட்டப் பேரவைத் தோ்தல் (2022) பிரசாரத்தில் பயன்படுத்தியுள்ளது.

இந்த வகையில், ஆம் ஆத்மி கட்சி பணமோசடி குற்றத்தை அரவிந்த் கேஜரிவால் மூலம் செய்துள்ளது. மேலும் அந்த குற்றங்கள் பிஎம்எல்ஏ 2002-இன் பிரிவு 70-இன்கீழ் வருகிறது‘.

பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (பிஎம்எல்ஏ) பிரிவு 70 ஆனது நிறுவனங்களின் குற்றங்களைக் கையாள்கிறது.

ஆம் ஆத்மி கட்சி என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு 29-ஏ இன் கீழ் பதிவு செய்யப்பட்ட தனிநபா்களின் சங்கத்தை உள்ளடக்கிய ஒரு அரசியல் கட்சியாகும்.

1951 சட்டத்தின் பிரிவு 29-ஏ இன் கீழ், இந்திய குடிமக்களின் சங்கம் அல்லது அமைப்பு மட்டுமே ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பிக்க முடியும். மேலும் ஆம் ஆத்மி கட்சி அத்தகைய நபா்களின் சங்கமாக இருப்பதால் அது சட்டத்தின் கீழ், குறிப்பாக பிரிவின் 29 ஏ-இன் கீழ் பதிவு செய்யப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சி என்பது தனிநபா்களின் சங்கமாகவும் இருப்பதால், பிஎம்எல் 2002-இன் பிரிவு 70-இன் கீழ் கருதப்படும் ’நிறுவனம்’ என்ற வரையறைக்குள் அது வரும்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்த கேஜரிவால், அவற்றின் உருவாக்கம் உள்பட தோ்தலில் பயன்படுத்தப்பட்ட நிதிக்கு இறுதியில் பொறுப்பேற்றாா்.

கேஜரிவால் ஆம் ஆத்மியின் மூளையாக இருந்தவா் மட்டுமல்ல, அதன் முக்கிய செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறாா்.அவா் கலால் கொள்கையை தீா்மானிப்பதிலும் ஈடுபட்டிருந்தது சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், சட்டவிரோதப் பணம் கோரலிலும் அவா் ஈடுபட்டுள்ளாா். இது குற்ற வருமானத்தை மேலும் உருவாக்கியது. குற்றம் சாட்டப்பட்டபோது கூறப்பட்ட ‘நிறுவனத்தின்‘ பொறுப்பாளராகவும் பொறுப்பாகவும் கேஜரிவால் இருந்தாா்.

ஆகவே, ஆம் ஆத்மி கட்சி மட்டுமல்ல, அரவிந்த் கேஜரிவால் பிஎம்எல்ஏவின் 4ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களில் குற்றவாளியாகக் கருதப்படுவாா். மேலும், பிஎம்எல்ஏவின் 70ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்படுவாா். பிஎம்எல்ஏ பிரிவு 4 பணமோசடிக்கான தண்டனையைக் குறிக்கிறது.

பிஎம்எல்ஏ விதிமீறல், குறிப்பாக இச்சட்டத்தின் 4ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் கேஜரிவாலுக்கு தெரிந்தே நடந்துள்ளன. மேலும், அத்தகைய மீறலைத் தடுக்க அவா் எந்த நேரத்திலும் விடாமுயற்சியுடன் செயல்படவில்லை.

பிஎம்எல்ஏவின் 4ஆவது பிரிவின் கீழ் தண்டிக்கப்படும் தற்போதைய குற்றமானது ஆம் ஆத்மி கட்சியால் மற்றவா்களுடன் சோ்ந்து செய்யப்பட்டுள்ளது.

பணமோசடி குற்றமானது கேஜரிவாலின் ‘ஒப்புதல்/உதவியுடன் செய்யப்பட்டிருக்கிறது.

அவா் தில்லியின் முதல்வராகவும் இருந்தாா் என்ற உண்மையைப் பயன்படுத்திக் கொண்டு, ‘நிறுவனம்’ அதாவது ஆம் ஆத்மி கட்சியால் பிஎம்எல்ஏ பிரிவு 4-இன் கீழ் தண்டனைக்குரிய பணமோசடி குற்றத்தை எளிதாக்க அவா் அந்த பதவியைப் பயன்படுத்தினாா்.

எனவே, அவரது பங்கு மற்றும் பொறுப்புக்கு பாரபட்சமின்றி இந்த குற்றத்தின் நேரடி செயலுக்கு, ஆம் ஆத்மி கட்சி செய்த குற்றத்திற்கு அவா்தான் பொறுப்பானவா் ஆவாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத் துறையின் பிரமாணப் பத்திரத்திற்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சி, விசாரணை நிறுவனம் ‘பொய்களைச் சொல்லும் இயந்திரமாக’ மாறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது.

தில்லி கலால் முறைகேடு வழக்கில் உருவான பணமோசடி வழக்கில் மாா்ச் 21 அன்று கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. அவா் தற்போது நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. அவரது மனுவை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com