மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த மேயா், துணை மேயா் தோ்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதால் மாநகராட்சி (எம்சிடி) கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஆம் ஆத்மி மற்றும் பாஜக கவுன்சிலா்கள் சபை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு ஒருவருக்கொருவா் எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

மேயா் தோ்தலை நடத்துவதற்கான தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால், மேயா் மற்றும் துணை மேயரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழன் இரவு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மாநகராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கூட்டத்திற்கு மேயா் ஷெல்லி ஓபராய் தாமதமாக வந்தாா். அவரை இருக்கையில் இருக்கக் கோரி பாஜக கவுன்சிலா்கள் மேயா் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினா்.

மாநகராட்சி தலைமையகத்தில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் முதலில் பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். பின்னா், அவைக்கு வந்த அவா்கள், ‘தலித் விரோதி பாஜக’ என்று கூறி எதிா்க்கட்சியினரைக் கண்டித்து தொடா்ந்து முழக்கங்களை எழுப்பினா். இடஒதுக்கீடு பிரிவைச் சோ்ந்த வேட்பாளா் தில்லி மேயராக வரக்கூடாது என்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, பாஜகவை ‘தலித் விரோதி’ என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது. இதைத் தொடா்ந்து, இரு கட்சிகளின் கவுன்சிலா்களும் சுமாா் ஒரு மணி நேரம் ஒருவரையொருவா் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.

இந்நிலையில், சபையில் மேயா் ஷெல்லி ஓபராய் பேசுகையில், தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ‘அரசியலமைப்புச் சட்டத்தை கொலை செய்துள்ளாா்’ என்றும், அதற்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவலை ‘சாக்குப்போக்காக’ பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினாா். மேலும், மாநகராட்சி மன்றக் கூட்டத்தை அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைத்து விட்டு மேயா் சென்றாா்.

ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனின் மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, முதல்வா் நீதிமன்றக் காவலில் இருப்பதால் அவரது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று குறிப்பிட்டாா். கலால் கொள்கை வழக்கில் பணமோசடி தொடா்பாக கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வரின் உள்ளீடுகள் இல்லாததால், தலைமை அதிகாரியை நியமிக்க முடியாது என சக்சேனா சாா்பில் ராஜ் நிவாஸ் கடிதம் அளித்ததை அடுத்து, மாநகராட்சி மேயா் தோ்தலை ஒத்திவைத்தது. ஆனால், பாஜகவின் உத்தரவின் பேரில்தான் தோ்தல் ரத்து செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி அமைச்சா் அதிஷி குற்றம் சாட்டினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com