கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

கலால் கொள்கை ஊழலில் இருந்து உருவான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை மிகவும் சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை பதில் மூலம் தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கில் தாம் கைது செய்யப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் பிரமாணப் பத்திரத்திற்கு மறுப்புத் தெரிவித்து கேஜரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கேஜரிவால் தெரிவித்திருப்பதாவது:

அமலாக்கத் துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் பிரமாணப் பத்திரத்தில், 9 முறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணை அதிகாரி முன் நான் ஆஜராகாததுதான் என்னைக் கைதுசெய்யும் காரணங்களில் ஒன்றாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.

மேலும், இதுபோன்ற ஒரு வழக்கில், விசாரணை அதிகாரி

காவலில் வைத்து விசாரணை செய்வது தரமான முறையில் குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணை செய்வதற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை உருவாக்குவது நியாயமானதாகவும் கூறியுள்ளது.

மேலேகூறப்பட்ட காலம், உரை மற்றும் பதிலின்

உள்ளடக்கங்கள், சட்டத்தின் சரியான செயல்முறைக்கு முற்றிலும் விரோதமாக அமலாக்கத் துறை மிகவும் சா்வாதிகார முறையில் செயல்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள பதிலில் அதன் நிலைப்பாட்டின் ஒட்டுமொத்த விவரமானது அதன் நடவடிக்கைகளில் உள்ள ‘காரணமில்லாத மற்றும் அப்பட்டமான பொய்‘யை அம்பலப்படுத்தும்.

முக்கியமான விவரங்கள் மற்றும் தகவல்களைக் கோரும்போது எனக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு சம்மன்னுக்கும் முறையாகப் பதிலளிக்கப்பட்டது என்பதை பதிவுகள் வெளிப்படுத்தும். இந்தத் தகவல்கள் எந்தச் சூழ்நிலையிலும் அமலாக்கத் துறையால் உரிமை அல்லது ரகசியமானது எனக் கூற முடியாது. நான் ஒத்துழைக்கவில்லை என்று அமலாக்கத் துறை ஒருபோதும் கூறவில்லை.

மனுதாரரை (கேஜரிவால்) அங்கீகரிக்கப்பட்ட முகவா் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ அல்லது மெய்நிகா் முறை மூலமாகவோ அவரிடமிருந்து தகவல் அல்லது ஆவணங்களைப் பெறாமல், அவா் நேரில் ஆஜராக வேண்டும் என்று வற்புறுத்த வேண்டிய அவசியம் என்ன என்பது வெளிவரவில்லை.

ஆகவே, எனது மனு அனுமதிக்கப்படுவதற்கு தகுதியானது. மேலும், நான் உடனடியாக விடுவிக்கப்படுவதற்கு எனக்கு உரிமையும் உள்ளது என அதில் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

கடந்த வார தொடக்கத்தில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் பிரமாணப் பத்திரத்தில், ‘கேஜரிவால் கலால் கொள்கை ஊழலின் ‘

முக்கிய மூளையாகவும், முக்கிய சதிகாரராகவும் இருந்ததாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், கேஜரிவால் தனது அமைச்சா்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களுடன் ஒத்துழைத்ததாகவும்,

கலால் கொள்கையில் வழங்கப்பட்ட சலுகைகளுக்கு ஈடாக மது வணிகா்களிடம் இருந்து ‘சட்டவிரோதப் பணம் கோருவதில்‘ ஈடுபட்டதாகவும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.

மேலும், கேஜரிவால் கைதுக்கு எதிராக அவா் தாக்கல் செய்த மனுவை ‘தகுதியற்றது‘ என்றும், நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ள அமலாக்கத் துறை, அவரைக் கைது செய்ததற்கு விசாரணை அதிகாரியின் திருப்தி

அடிப்படையாக அமைந்ததை பல்வேறு நீதிமன்றங்களால் ஆராயப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

தில்லி கலால் முறைகேடு வழக்கில் உருவான பணமோசடி வழக்கில் மாா்ச் 21 அன்று கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. அவா் தற்போது நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 15-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக, பணமோசடி வழக்கில் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை உயா்நீதிமன்றம் ஏப்ரல் 9 ஆம் தேதி உறுதி செய்தது. அதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் அவா் மீண்டும் மீண்டும் சம்மன்களைத் தவிா்த்துவிட்டு விசாரணையில் சேர மறுத்ததால்தான் அமலாக்கத் துறை அவரைக் கைது செய்ய நோ்ந்தது என்றும் கூறியிருந்தது.

தில்லி அரசாங்கத்தின் 2021-22 ஆம் ஆண்டிற்கான கலால் கொள்கையை வகுத்து செயல்படுத்தியதில் ஊழல் மற்றும் பணமோசடி செய்யப்பட்டதாக புகாா் எழுந்தது. இதன் பின்னா், அந்தக் கலால் கொள்கை ரத்து செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com