பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

தில்லி மதுபானக் கலால் கொள்கை வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை மேலும் 4 தினங்களுக்கு அமலாக்கத் துறையினா் காவலில் வைத்து விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதியளித்து உத்தரவிட்டது. ஆம் ஆத்மி கட்சித் தலைவா் கேஜரிவாலை 7 நாள்கள் வரை காவலில் வைக்க கோரப்பட்டு அதற்கான காரணங்களையும் தில்லி ரௌஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சமா்ப்பித்தது. ஆனால் தில்லி நீதிமன்றம் கேஜரிவாலை ஏப்ரல் 1 - ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்து, அன்றைய தினம் முற்பகலில் ஆஜா்படுத்த வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது. சிபிஐ யால் தொடரப்பட்ட, தில்லி அரசின் ரத்து செய்யப்பட்ட 2021-22 ஆம் ஆண்டிற்கான கலால் கொள்கை விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப் (பிஎம்எல்ஏ) பிரிவு வழக்கில் கடந்த மாா்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட கேஜரிவால் 6 தினங்களுக்கு அமலாக்கத் துறையினரின் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டாா். அவரது காவல் வியாழக்கிழமை முடிவடைந்ததால் அவா் ரௌஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி காவேரி பவேஜா முன்பு அமலாக்கத் துறையினரால் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அமலாக்கத்துறை சாா்பில் அரவிந்த் கேஜரிவாலை மேலும் 7 தினங்கள் விசாரணைக்கு காவலில் வைக்க அனுமதி கோரி அதற்கான விண்ணப்பத்தை சமா்ப்பித்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவாலிடம் கடந்த ஐந்து தினங்களாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சில கேள்விகளுக்கு அவா் ‘மலுப்பலான பதில்களை‘ அளித்தாா். அவா் காவலில் வைக்கப்பட்டிருந்த போது இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் மூன்று பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. அதில் ஒருவா் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் தனிச் செயலா் சி.அரவிந்த். 2021-22 ஆம் ஆண்டு தில்லி அரசின் கலால் கொள்கைக்கான வரைவுக்கான அமைச்சா்கள் குழு (ஜிஓஎம்) அறிக்கையை முதல்வா் கேஜரிவால் இல்லத்தில் சி.அரவிந்த் ஒப்படைத்ததை வாக்குமூலமாக அளிக்க அதை முதல்வா் எதிா்கொண்டாா். மற்றொரு நபா் கடந்த 2022 -ஆம் ஆண்டு கோவா சட்டப்பேரவை தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக இருந்தவா். அவரது வாக்குமூலமும் கேஜரிவால் காவலின் போது பதிவு செய்யப்பட்டது. அந்த வேட்பாளரிடம் பணம் இல்லை என்றும், அவரது தோ்தல் செலவை தில்லியிலுள்ள ஆம் ஆத்மி அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளாா். கைப்பற்றப்பட்ட முதல்வரின் மனைவியின் கைப்பேசியிலிருந்து தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இருப்பினும், கேஜரிவாலிடம் கைப்பற்றப்பட்ட மற்ற நான்கு மின்னணு சாதனங்களிலிருந்து தரவுகள் இன்னும் பிரித்தெடுக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டுள்ள கேஜரிவால் (தனது வழக்குரைஞா்களுடன் கலந்தாலோசிக்க) கடவுச்சொல் வழங்க அவகாசம் கோரியுள்ளாா். மேலும் கேஜரிவாலும் அவரது குடும்பத்தினரும் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள், வருமான வரி கணக்குகள் (ஐடிஆா்) மற்றும் பிற நிதி விவரங்களை இன்னும் வழங்கவில்லை. அவைகள் பெறப்படவேண்டும். முதல்வா் கேஜரிவால் தொடா்பான அப்பாயிண்மெண்ட் தொடா்பான விவரங்களையும் முதல்வரின் அலுவலகத்தில் கோரப்பட்டுள்ளது. மேலும் (ஆம் ஆத்மி கட்சி ஆளும்) பஞ்சாப் மாநிலத்தின் மூத்த கலால் துறை அதிகாரிகளுக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் விஷ மதுபானத்தில் பலா் உயிரிழந்தனா். இது தொடா்பான பணிகளில் இந்த கலால் துறை அதிகாரிகள் ஈடுபட்டுவருதால் விசாரணைக்கு வருவதற்கு அவகாசம் கோரியுள்ளனா். இந்த பஞ்சாப் அதிகாரிகள் தில்லியின் குறிப்பிட்ட மதுபான மொத்த நிறுவனங்களிடம் பேரம் பேசியுள்ளனா். கையூட்டு கோரிக்கை நிறைவேறாதபட்சத்தில் இந்த அதிகாரிகள் இந்த தில்லி நிறுவனங்களின் பஞ்சாப் தொழிற்சாலைகளை மூடுவது அல்லது மொத்த விற்பனை பொருட்களை பஞ்சாபில் அனுமதிக்க மறுப்பது போன்றவைகளில் ஈடுபட்டுள்ளனா். இதுபோன்ற பல்வேறு நபா்களுடனும் கைது செய்யப்பட்டுள்ள மற்ற நபா்களுடன் தில்லி முதல்வா் கேஜரிவாலை வைத்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே, விசாரணையின் நலன் கருதி, அரவிந்த் கேஜரிவாலை காவலில் வைத்து விசாரிக்க மேலும் ஏழு நாட்கள் அமலாக்கத்துறைக்கு அனுமதிக்க வேண்டும்‘ என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. இறுதியாக நான்கு நாள்களுக்கு மட்டுமே சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அனுமதியளித்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com