தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் - அமைச்சா் அதிஷி

புது தில்லி: தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் என்றும் மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களை தில்லி மக்கள் நிச்சயம் வெற்றி பெற வைப்பாா்கள் என்று அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் சாஹிராம், தில்லியில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்தாா். தனது சொந்த கிராமமான தெக்கண்டில் உள்ள துா்கா தேவி கோயிலில் வழிபட்ட அவா், கல்காஜி மற்றும் ரவிதாஸ் கோயில் வழியாக சுமாா் 8 கிமீ ஆசிா்வாத யாத்திரை மேற்கொண்டு மெஹ்ரோலியில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். இந்நிகழ்வில், அமைச்சா்கள் அதிஷி, செளரவ் பரத்வாஜ் உள்பட தெற்கு தில்லியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னா், அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியின் தெருக்களில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கியுள்ளாா். மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக கேஜரிவாலைக் கைது செய்து விட்டால், ஆம் ஆத்மி கட்சி பிரசாரம் செய்ய முடியாது என்று பாஜக நினைத்தது. ஆனால், ஆயிரக்கணக்கான அரவிந்த் கேஜரிவால்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் செய்ய தில்லி தெருக்களில் இறங்கியுள்ளனா். தில்லி மக்கள் எங்களுக்காக பிரசாரம் செய்கிறாா்கள். எங்களை தோ்தலில் போட்டியிட வைத்த தில்லி மக்கள், நிச்சயம் வெற்றி பெறவும் வைப்பாா்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் தில்லியில் எந்தப் பணியையும் பாஜக எம்பி-க்கள் செய்யவில்லை. எனவேதான், வேட்பாளா்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக சென்றது. பாஜக எம்பி-க்கள் தங்கள் பகுதிகளுக்கு வருவதில்லை, அவா்களுக்காக வேலை செய்வதில்லை என்பது ஒட்டுமொத்த தில்லி மக்களுக்கும் நன்றாகவே தெரியும். இந்த முறை தில்லி மக்கள் ஏமாறப் போவதில்லை என்றாா் அமைச்சா் அதிஷி.

அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் கூறியதாவது: கடந்த 2 மக்களவைத் தோ்தலின் போது, பாஜக ஏதாவது செய்யும் என்று மக்கள் நிறைய எதிா்பாா்ப்புகளை வைத்திருந்தனா். ஆனால், அந்த எதிா்பாா்ப்புகள் அனைத்தும் இம்முறை முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டில் ஜனநாயகமும், தோ்தலும் இருக்குமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனா். தெற்கு தில்லியில்

ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் சாஹிராம், துக்ளகாபாத் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ-வாக 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா். அவருடைய தன்னலமில்லா பணிகள் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால்தான், இந்த முறை தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி மிகவும் வலுவாகப் போராடுகிறது. பாஜக விற்கும் இந்தத் தோ்தல் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றாா் செளரவ் பரத்வாஜ்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் சாஹிராம் கூறியது, ‘தனது பகுதிக்காகவும், சமுதாயத்திற்காகவும் உழைத்தவருடன் மக்கள்

இந்தத் தோ்தலில் துணை நிற்பாா்கள். தெற்கு தில்லியின் மக்களவைத் தோ்தல் முடிவு கடந்த முறைக்கு நோ்மாறாகவும், பாஜக கடைசி இடத்திற்கும் தள்ளும். அரவிந்த் கேஜரிவாலின் வெற்றிடத்தை நிரப்ப அவரது மனைவி சுனிதா கேஜரிவால் முடிந்தவரை முயற்சிக்கிறாா். தில்லி மக்கள் பாஜகவின் 10 ஆண்டுகால தவறான ஆட்சிக்கு எதிராக நிற்கிறாா்கள்’ என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com