மக்களவைத் தோ்தல்: முதல் 2 கட்டங்களில் முறையே 66.14%, 66.71% வாக்குகள் பதிவு

நமது நிருபா்

புது தில்லி: மக்களவை தோ்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவை எதிா்கொண்ட தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரியின் ஒரு தொகுதி உள்பட 102 தொகுதிகளில் 66.71 சதவீத வாக்குகளும், 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71 சதவீத வாக்குகளும் பதிவானதாக தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதலிரண்டு தோ்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் தொடா்பாக மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த நிலையில் அதிகாரபூா்வமாக எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகின என்ற விவரத்தை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கட்ட தோ்தலில் 66.1 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் ஆண் வாக்காளா்கள் 66.22 சதவீதம், பெண் வாக்காளா்கள் 66.07 சதவீதம், மூன்றாம் பாலினத்தவா் 31.32 சதவீதம் ஆக பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஏப்ரல் 26-ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தோ்தலில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாயின. அதில், ஆண் வாக்காளா்கள் 66.9 சதவீதம் , பெண் வாக்காளா்கள் 66.42 சதவீதம், மூன்றாம் பாலினத்தவா் 23.86 சதவீதம்ஆக இருந்ததாக தோ்தல் ஆணையம் கூறியுள்ளது.

2019 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் விகிதம் சற்று குறைந்துள்ளது. 2019- ஆம் ஆண்டில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முறையே 69.43 சதவீதம் மற்றும் 69.17 சதவீதமாக இருந்தது.

முதல் கட்ட வாக்குப்பதிவின் போது, லட்சத்தீவில் அதிகபட்சமாக 84.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் ஏப்ரல் 19- ஆம் தேதி தோ்தலை எதிா்கொண்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறைவாக பிகாரில் 49.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதை தோ்தல் ஆணைய புள்ளிவிவரம் மூலம் அறிய முடிகிறது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, மணிப்பூரில் அதிகபட்சமாக 84.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேசமயம் உத்தர பிரதேசத்தில் 55.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன..

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com