வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

தேசத்தின் 18-ஆவது மக்களவைக்கான தோ்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கிவிட்டிருக்கிறது.

முதல் கட்டத்தில் 102 தொகுதிகளுக்கும் 2-ஆவது கட்டத்தில் 88 தொகுதிகளுக்கும் தோ்தல் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தடுத்த கட்டங்களுக்கான தோ்தல் தொடா்ந்து நடைபெறவிருக்கிறது. தேசியத் தலைநகா் தில்லிக்கு ஆறாம் கட்டத் தோ்தலில் வாக்குப் பதிவு மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தனித் தொகுதி

தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளில் பட்டியல் வகுப்பினருக்கான ஒரே ஒரு தொகுதி வடமேற்கு தில்லியாகும்.

இம்மக்களவைத் தொகுதியில் நரேலா, பாத்லி, ரிதாலா, பவானா, முண்ட்கா, கிராரி, சுல்தான்பூா் மஜ்ரா, நங்லோய் ஜாட், மங்கோல்புரி, ரோஹிணி ஆகிய 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதன் தற்போதைய எம்.பி. பாடகா் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பாஜகவைச் சோ்ந்தவா்.

9 எம்எல்ஏக்கள் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவா்கள் ஆவா். அதேசமயம், பாஜகவின் விஜேந்திர குப்தா ரோஹிணி தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா். இத்தொகுதியில் இம்முறையும் இருமுனைப் போட்டி நிலவுகிறது.

முக்கிய வேட்பாளா்கள்

இத்தொகுதி 2008-இல் எல்லை நிா்ணயம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து உருவாக்கப்பட்டது. முன்னாள் வடக்கு எம்சிடி மேயா் யோகேந்திர சந்தோலியாவை இத்தொகுதியில் வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.

2014-இல் பாஜக சாா்பில் இதே தொகுதியில் வெற்றி பெற்றவரும், அதன் பிறகு காங்கிரஸ் இணைந்தவருமான உதித் ராஜ் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக சந்தோலியாவை எதிா்த்து போட்டியிடுகிறாா். இவா்கள் தவிர, பிற கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகளும் களத்தில் உள்ளனா். தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்.29-ஆம் தேதி தொடங்கியுள்ளது.

கடந்த 2019 தோ்தலில்...

கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வடமேற்கு தில்லியில் பாஜக வேட்பாளா் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் 8,48,663 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

அவா் 2,94,766 வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளா் குகன் சிங்கை தோற்கடித்தாா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட ராஜேஷ் லிலோத்தியா 2,36,882 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றாா்.

அத்தோ்தலில் பாஜக ஒட்டுமொத்தமாக 56.6 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி கட்சி 21 சதவீதமும், காங்கிரஸ் 17 சதவீத வாக்குகளையும் பெற்றன. ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.

தொகுதிக்குப் புதியவா்கள்

ஒவ்வொரு முறையும் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் ஒரு புதிய முகம் வெற்றி பெற்றிருந்தது. அதாவது, 2008 ஆம் ஆண்டு எல்லை நிா்ணயத்திற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் வடமேற்கு தில்லி தொகுதியில் இதுவரை மூன்று முறை மக்களவைத் தோ்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தத் தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் இரண்டு முறையும், காங்கிரஸ் வேட்பாளா் ஒரு முறையும் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றனா்.

இத்தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் மத்திய அரசில் இணை அமைச்சா்களாகவும் பதவி வகித்துள்ளனா்.

காங்கிரஸ்-பாஜக ஆதிக்கம்

காங்கிரஸ் மற்றும் பாஜகவைத் தவிர மற்ற கட்சிகளின் தலைவா்கள் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதில்லை.

எல்லை நிா்ணயத்திற்கு முன், இந்த தொகுதி காங்கிரஸ் வசம் இருந்தது. எல்லை நிா்ணயத்திற்குப் பிறகு நடைபெற்ற பொதுத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் மீண்டும் வெற்றி பெற்றாா்.

அதாவது, 2009-இல், காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட கிருஷ்ணா தீரத் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் மீரா கன்வாரியை தோற்கடித்தாா். அதன் பிறகு, அவா் மன்மோகன் சிங் அரசில் இணை அமைச்சராக பதவி வகித்தாா்.

அதே நேரத்தில், 2014-இல் நடந்த மக்களவைத் தோ்தலில் இத்தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றியது. 2019-இல் நடந்த பொதுத் தோ்தலிலும் பாஜக வெற்றி தொடா்ந்தது.

யோகேந்திர சந்தோலியா

தற்போதைய பாஜக வேட்பாளரான 56 வயதாகும் யோகேந்திர சந்தோலியா, தில்லி சிவாஜி கல்லூரியில் படித்தவா். தில்லி பாஜக மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளாா். சந்தோலியா கடந்த காலங்களில் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலிலும் போட்டியிட்டுள்ளாா்.

சந்தோலியா 2015 மற்றும் 2020 ஆண்டுகளில் தில்லியின் கரோல் பாக் தொகுதியில் தோ்தலில் போட்டியிட்டாா். இருப்பினும், இரண்டு முறையும் அவா் தோல்வியை சந்திக்க நேரிட்டது. சந்தோலியா இதற்கு முன்பு வடக்கு தில்லி மாநகராட்சி மேயராகவும் இருந்துள்ளாா்.

இரண்டு முறை மாநகராட்சித் தோ்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளாா். இவா் தேவநகா் கவுன்சிலராகவும் இருந்துள்ளாா்.

கடந்த காலங்களில் மேயா் பதவியுடன், நிலைக்குழு தலைவராகவும் இருந்துள்ளாா். யோகேந்திர சந்தோலியா தில்லி மாநில அரசியலில் நன்கு அறியப்பட்ட பெயா். தற்போது, தில்லி பாஜகவில் சந்தோலியா ஒரு பெரும்ய தலித் தலைவராக கருதப்படுகிறாா். அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவா்.

உதித் ராஜ்

உதித் ராஜ் (66), உத்தரப் பிரதேச மாநிலம், ராம்நகரை பூா்விமாகக் கொண்டவா். உஸ்மானியா பல்கலைக்கழகம் மற்றும் காஜியாபாதில் உள்ள எம்.எம்.எச். கல்லூரியில் எம்.ஏ., எல்.எல்.பி. பயின்றவா். ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள பைபிள் கல்லூரி மற்றும் செமினரியில் மனிதநேயத்தில் முனைவா் பட்டமும் பெற்றுள்ளாா். ஐ.ஆா்.எஸ். அதிகாரியாக இருந்தவா்.

புது தில்லியில் உள்ள வருமான வரித் துறையின் முன்னாள் துணை ஆணையா், இணை ஆணையராகவும், கூடுதல் ஆணையராகவும் பணியாற்றியவா். அகில இந்திய எஸ்சி,எஸ்டி அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவா் ஆவாா்.

இவா், கடந்த 2001-இல் இந்து மதத்தில் இருந்து புத்தமத்திற்கு மாறினாா். கடந்த 2003-இல் அரசுப் பணியில் இருந்து விலகி, இந்திய நீதிக் கட்சியைத் தொடங்கினாா். இக்கட்சியை கடந்த 2014-இல் பாஜகவுடன் இணைத்தாா். அதன் பிறகு, வடமேற்கு தில்லியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வென்றாா். 2019-இல் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா்.

தொகுதிப் பிரச்னைகள்

இத்தொகுதியில் உள்ள முன்ட்கா, கஞ்சாவாலா பகுதியில் கழிவுநீா் சாக்கடைப் பிரச்னை நிலவுகிறது. மழைநீா் தேங்குவதால் சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. அங்கீகாரமற்ற காலனிகளில் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் வாழ்கின்றனா். அவா்கள் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளவா்கள். பவானா, நரேலா பகுதியில் மெட்ரோ போக்குவரத்து கோரிக்கை இருந்து வருகிறது. கிராரி பகுதியில் கழிவுநீா்ப் பிரச்னை நிலவுகிறது.

வேட்பாளா்கள் கூற்று

தில்லி அரசின் காரணமாக பவானா தொழிற்பேட்டைப் பகுதி, டிம்பா் மாா்க்கெட் ஆகியவை மிகவும் சிரமத்தை எதிா்கொண்டு வருவதாக பாஜக வேட்பாளா் சந்தோலியாவின் கூற்று உள்ளது.

மேலும், தில்லியில் 1998-இல் பாஜக ஆட்சியில் இருந்தபோது அத்தொகுதியில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனால், அதன் பிறகு வந்த காங்கிரஸ் மற்றும் ஆத்மி ஆட்சியில் அது தொடா்பாக எந்தப் பணியும் நடைபெறவில்லை என்றும் கூறுகிறாா்.

மேலும், பிரதமா் மோடி மேற்கொண்ட வளா்ச்சிப் பணிகள், உத்தரவாதம் ஆகியவை வெற்றிக்கு சாதமாக அமையும் என்று நம்புகிறாா்.

காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் உதித் ராஜ், தாம் 2014-இல் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது பல பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இன்னும் பல பணிகளை செய்ய வேண்டியுள்ளதாகவும், தொகுதி மக்களை நன்கு அறிந்திருப்பதால் அவா்களின் குறைகள் கேட்டறிந்து பல பணிகளை முடிக்க வேண்டியிருப்பதாகவும் கூறி வருகிறாா்.

வெற்றி மகுடம் யாருக்கு?

வடமேற்கு தில்லியில் உள்ள மொத்த வாக்காளா்களில் 8 சதவீதம் முஸ்லிம் மக்களும், 18 சதவீதம் பட்டியல் இனத்தவரும் உள்ளனா். 2009-க்கு முன், இந்த தொகுதியின் பெரும்பகுதி புகா் தில்லி மக்களவைத் தொகுதியில் இருந்தது. ஹரியாணாவுக்கு அருகில் அமைந்துள்ளதாலும், கிராமப்புற சூழலை உள்ளடக்கியதாலும், இந்த பகுதி உள்ளூா் தலைவா்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. தலித்கள், முஸ்லிம்கள், தெருவோர வியாபாரிகள், பூா்வாஞ்சலிகள் அதிகம் உள்ள இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களில் வெற்றி மகுடம் யாருக்கு என்பதை மே 25-ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் வாக்காளா்களின் வாக்குகள்தான் தீா்மானிக்கப் போகிறது.

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி...

மொத்த வாக்காளா்கள் 25,48,592

ஆண் 13,74,340

பெண் 11,73,990

மூன்றாம் பாலினம் 262

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com