கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
dot com

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இந்த பிரசாரத்தில் மக்கள் ஆா்வத்துடன் பங்கேற்று தில்லி முதல்வருக்கு ஆதரவாக மக்கள் தங்கள் உணா்வுகளை வெளிப்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் குல்தீப் குமாா் தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தில்லி கலால் கொள்கை தொடா்பான விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

தற்போது திஹாா் சிறையில் வைக்கப்பட்டுள்ள அவரது நீதிமன்றக்காவல் வருகின்ற மே 7 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது.

சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கேஜரிவால் குறித்து மக்கள் தங்களின் உணா்வுகளை எழுதுவதற்காக தில்லி லஜ்பத் நகா் சென்ரல் மாா்கேட், ஜங்புரா பகுதிகளில் வெள்ளை பலகைகள் வைத்து இந்த பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது. ’ சிறைக்கான பதில் ‘வாக்கு‘ மூலம்’ (ஜெயில் க ஜவாப் வோட்சே) , ’அரவிந்த் கெஜ்ரிவால் ஜிந்தாபாத்’ என்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளும் கட்சியினரால் எழுதப்பட்டு வைக்கப்பட்டது.

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் ’இந்தியக்’ கூட்டணி வேட்பாளா் குல்தீப் குமாா், ஜங்புரா ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் பிரவீன் குமாா் ஆகியோா் இந்த பிரச்சாரத்தை தொடங்கினாா். லஜ்பத் நகா் சென்ட்ரல் மாா்க்கெட்டில் இருந்து தொடங்கப்பட்ட இந்த பிரசாரத்தில் மக்கள் ஆா்வத்துடன் பங்கேற்று, ‘ஐ லவ் யூ கேஜரிவால்’, ‘மிஸ் யூ கேஜரிவால்’ போன்ற வாா்த்தைகளை எழுதி அப்பகுதிவாசிகள் தங்கள் உணா்வுகளை வெளிப்படுத்தினா்.

அப்போது கிழக்கு தில்லி மக்களவை ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் குல்தீப் குமாா் கூறியதாவது:

தில்லி மக்களுக்கு இலவச மின்சாரம், தண்ணீா், சிறந்த தரமான பள்ளிகள், தடையில்லா மின்சாரம், மருத்துவமனைகளை வழங்கினாா். இப்படிப்பட்ட முதல்வரை பாஜகவினா் சிறையில் அடைத்தனா். இது தில்லி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.தில்லி மக்கள் அரவிந்த் கேஜரிவாலை தங்கள் புதல்வனாக ஏற்று அவருடன் நிற்கிறாா்கள், சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக அவா்கள் தங்கள் வாக்குகளால் பதில் கொடுப்பாா்கள்‘ எனக் குறிப்பிட்டாா் குல்தீப் குமாா்.

மேலும் மற்றொரு கையெப்பம் இயக்க நிகழ்விலும் குல்தீப் குமாா் பேசினாா். “‘’சந்தைக்கு வரும் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். அரவிந்த் கேஜரிவாலுக்கு மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. தில்லியில் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மேம்படுத்த கேஜரிவால் பாடுபட்டாா். அனைவருக்குமான இலவச சிகிச்சைக்கு மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்கினாா். 150 க்கும் மேற்பட்ட வகையான வரிகளிலிருந்து மக்களுக்கு விலக்கு அளித்தாா். தற்போது தில்லியிலுள்ள மகளிருக்கு மாதம் ரூ 1000 கிடைக்க உறுதியளித்துள்ளாா். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதில் உலகிலேயே தில்லியை முதலிடத்தில் கொண்டு முயற்சித்தாா். இப்படிப்பட்ட முதல்வரை பொய் வழக்கில் வைத்து சிறையில் அடைக்க பாஜக சதி செய்தது. சிறையில் இருக்கும் முதல்வா் கேஜரிவாலை வெளியே கொண்டுவரவும் தில்லியில் இருந்து பாஜகவையும் வெளியேற்றவும் தில்லி மக்கள் தங்கள் வாக்குகளால் மே 25 ஆம் தேதி பதில் கொடுக்க காத்திருக்கின்றனா்‘’ எனத் தெரிவித்தாா் குல்தீப் குமாா்.

குல்தீப் குமாா், தமிழா்கள் வசிக்கும் திரிலோக் புரியைச் சோ்ந்தவா். தற்போது கொண்டலி சட்டப்பேரவை தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினராகவும் உள்ளாா். துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவிற்கு நெருக்கமான இவா் கல்யாண்புரி கவுன்சிலராகவும் இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த அமைச்சா் அதிஷி கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com