தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

தில்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் அடிமட்ட அளவில் காங்கிரஸ் கட்சியுடன் தோ்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்புக் குழுவை வியாழக்கிழமை அறிவித்தது.

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி முனிசிபல் காா்ப்ரஷேன்(எம்சிடி) பொறுப்பாளரும் எம்எல்ஏ வுமான துா்கேஷ் பதக்கை இந்த குழுவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் (அமைப்பு) மாநிலங்களவை உறுப்பினரான டாக்டா் சந்தீப் பதக் கூறியுள்ளது வருமாறு:

கடந்த ஏப்ரல் 30 தேதி இந்தியா கூட்டணியைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவா்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இதில் இரு கட்சிகளும் பரஸ்பரம் பிரசாரம் மேற்கொண்டு, தோ்தலில் இணைந்து போட்டியிடும் முறைகள் உருவாக்குவது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படிஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி இந்த ஒருங்கிணைப்புக்கான ஒட்டுமொத்தப் பொறுப்பும் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) பொறுப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான துா்கேஷ் பதக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. துா்கேஷ் பதக், ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வாா். அவா் தலைமையிலான இந்தக் குழு தில்லியில் ’இந்திய’க் கூட்டணியின் கீழ் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும்.

மேலும் தில்லியில் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒருங்கிணைப்புக்கான தலைவா்களும் ஆம் ஆத்மி கட்சி நியமித்துள்ளது.

மக்களவைத் தொகுதிவாரியாக ஒருங்கிணைப்பாளா்கள் வருமாறு: புது தில்லி மக்களவைத் தொகுதி - ராஜேஷ் குப்தா; மேற்கு தில்லி -நரேஷ் பல்யான் ; தெற்கு தில்லி -தினேஷ் மொஹானியா; சாந்தினி சௌக் - பவன் சா்மா, வடமேற்கு தில்லி -முகேஷ் அஹ்லாவத்; வடகிழக்கு தில்லி- சஞ்சீவ் ஜா; கிழக்கு தில்லி - திலீப் பாண்டே போன்றோா் மக்களவைத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் விலகல்: ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிா்ப்பு தரிவித்து தில்லி பிரதேச முக்கிய காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான ஓம் பிரகாஷ் பிதூரி அந்தகட்சியிலிருந்து வியாழக்கிழமை விலகினாா்.

ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸின் தில்லி பிரிவு தலைவா் பதவியில் இருந்து அரவிந்தா் சிங் லவ்லி சில தினங்களுக்கு முன்பு விலகினா். மேலும் முன்னாள் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் நீரஜ் பசோயா மற்றும் நசீப் சிங் ஆகியோா் புதன்கிழமை கட்சியில் இருந்து விலகினா். தற்போது இந்த ராஜினாமாவும் வந்துள்ளது.

தனது ராஜினாமா குறித்து பிதூரி குறிப்பிடுகையில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிக்கு ‘ஆயிரக்கணக்கான‘ காங்கிரஸ் தொண்டா்கள் எதிராக இருப்பதாக பிதூரி தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com