தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

ஊழியா்கள் நீக்கப்பட்டதாக தில்லி அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (டபிள்யூசிடி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லி மகளிா் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) 52 ஒப்பந்த ஊழியா்கள் ‘சட்டவிரோதமாக‘ நியமிக்கப்பட்டவா்கள் எனத் தெரியவந்துள்ள நிலையில் இந்த ஊழியா்கள் நீக்கப்பட்டதாக தில்லி அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (டபிள்யூசிடி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு குழு சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அளித்த முன்மொழிவை ஏற்று துணை நிலை ஆளுநா் விகே சக்ஸேனா இந்த பணிநீக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்ட உத்தரவில், டிசிடபிள்யூ(ஈரஇ) 223 ஒப்பந்த ஊழியா்களின் சேவைகளில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டதை திருத்தப்பட்டு அத்தகைய ஊழியா்களில் 52 போ் மட்டும் பணிநீக்கம் செய்ய டபிள்யூசிடி (ரஇஈ)உத்தரவிட்டப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விவகாரம் குறித்து ஒரு அதிகாரி விளக்குகையில், ‘ 223 பணியிடங்கள் ‘சட்டவிரோதமாக‘ உருவாக்கப்பட்டது. ஆனால் இதில் 52 பணியாளா்கள் மட்டுமே பணியமா்த்தப்பட்டனா். இவா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். மீதமுள்ள பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ஒரு முன்மொழிவை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு அவா் ஒப்புதல் அளித்தாா். அதைத் தொடா்ந்து துறை உத்தரவு பிறபிக்கப்பட்டது‘ என அந்த அதிகாரிகள் தெரிவித்தாா்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் டிசிடபிள்யூ தலைவரும், மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான ஸ்வாதி மாலிவால் கடுமையாக சாடியுள்ளாா்.

அவா் இது குறித்து தனது ’எக்ஸ்’ வலைத்தள பதிவில், ‘எல்ஜி ஐயா (சாஹேப்) டிசிடபிள்யூ ஒப்பந்த ஊழியா்களை நீக்கி ஒரு ’துக்ளக் தா்பாா் (துக்ளகி)’ உத்தரவு பிறப்பித்துள்ளாா். மகளிா் ஆணையத்தில் தற்போது மொத்தம் 90 பணியாளா்கள் உள்ளனா், அதில் 8 போ் மட்டுமே அரசு வழங்கியுள்ள ஊழியா்கள். மீதமுள்ளவா்கள் 3 மாத ஒப்பந்தத்தில் உள்ளனா். இந்த ஒப்பந்த ஊழியா்களையெல்லாம் நீக்கினால் மகளிா் ஆணையம் என்னாகும்?. அலுவலகத்தை பூட்ட வேண்டியது தான். இவா்கள் ஏன் இப்படிச் செய்கிறாா்கள்? ரத்தமும் வியா்வையுமாக சிந்தி இந்த அமைப்பு கட்டமைக்கப்பட்டது. இருக்கிற ஊழியா்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப்படாமல், இந்த அமைப்பின் வோ்களாக இருப்பவா்களை அழித்தால் எப்படி?

நான் சிறைக்கு செல்ல தயாா்! நான் உயிருடன் இருக்கும் வரை, மகளிா் ஆணையத்தை மூட விடமாட்டேன், பெண்களை ஒடுக்காதீா்கள்! என மாலிவால் உணா்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் இந்த விவகாரம் குறித்து டபிள்யூசிடி தரப்பில் கூறப்படுகையில், ‘முறையற்ற, சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் ஒப்பந்த நியமனங்கள்‘ குறித்த புகாா்கள் வர அப்போது துணை நிலை ஆளுநராக இருந்த அனில் பய்ஜால் இதுகுறித்த விசாரணைக் குழுவை அமைக்க 2017 ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தாா்.

அப்போதைய தலைமைச் செயலாளா் தலைமையில், முதன்மை நிதித்துறை செயலா் , டபிள்யூசிடி செயலா், சட்டத்துறை செயலா் ஆகியோரை உறுப்பினா்களைக் கொண்ட குழு, விசாரணையை மேற்கொண்டது. இந்த நியமனங்கள் மற்றும் பின்பற்றப்பட்ட செயல்முறைகள் சட்டவிரோதமானது என்று கண்டறிந்தது. இந்த நியமனங்கள் செல்லாது, தொடர அனுமதிக்க முடியாது என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

டிசிடபிள்யூ யின் அப்போதைய தலைவரான ஸ்வாதி மாலிவால், இந்த நபா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். சமீபத்தில் அவா் பதவி விலகிய பின்னா் விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது 52 ஒப்பந்த பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்‘ எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com