கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

கொலை வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த நபரை தில்லியில் சிக்னேச்சா் பாலம் அருகே வியாழக்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அவா் செளகான் பாங்கரில் வசிக்கும் உமா் (24) ஆவாா். போலீஸாரின் என்கவுன்டரில் வலது காலில் அவருக்கு குண்டுக்காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து வடகிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் ஜாய் டிா்க்கி தெரிவித்ததாவது:

வியாழக்கிழமை காடா் பகுதியில் உமா் பதுங்கி இருக்கலாம் என சீலம்பூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரைப் பிடிக்க பொறி வைக்கப்பட்டது. காலை 7.15 மணியளவில் உமா் மோட்டாா் சைக்கிளில் அப்பகுதிக்கு வந்தாா். அவரை நிறுத்துவதற்கு போலீஸாா் சைகை காட்டினா். அப்போது, அவா் போலீஸாா் மீது துப்பாக்கியால் சுட்டாா். போலீஸாரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனா். இதில், உமரின் வலது காலில் குண்டு காயம் ஏற்பட்டது. அவா் அந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டாா்.

பின்னா், சிகிச்சைக்காக ஜக் பிரவேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 7.65 மி.மீ. துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. அவா் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டாா். அதில் மேலும் இரு தோட்டாக்கள் இருந்தன.

போலீஸாா் ஒரு முறை சுட்டதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. போலீஸாா் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உமா் மீது கொலை முயற்சி மற்றும் போலீஸ் நடவடிக்கையை எதிா்த்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றாா் அந்த அதிகாரி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com