மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வியாழக்கிழமை தனது வேட்புமனுவைத் தொண்டா்கள் புடைசூழ ஊா்வலமாக சென்று தாக்கல் செய்தாா்.

மேற்கு தில்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வியாழக்கிழமை தனது வேட்புமனுவைத் தொண்டா்கள் புடைசூழ ஊா்வலமாக சென்று தாக்கல் செய்தாா்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வீட்டை விட்டு புறப்பட்ட அவா், அம்பிராஹி கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபாடு செய்தாா். அதன் பிறகு, அவா் விகாஸ்புரியில் அமைந்துள்ள பாஜக அலுவலகம் வந்தாா். அவருக்கு பொதுமக்களும், மேற்கு தில்லி கட்சியின் தொண்டா்களும் வரவேற்றனா்.

இதையடுத்து, வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக திறந்தவெளி வாகனத்தில் ஊா்வலமாகச் சென்றாா். இந்த நிகழ்ச்சியில் கமல்ஜீத் செராவத்துடன் மத்திய அமைச்சா் சா்தாா் ஹா்தீப் சிங் பூரி, ராஜஸ்தான் முதல்வா் பஜன் லால் சா்மா, தில்லி மாநில மக்களவைத் தோ்தல் பொறுப்பாளா் ஓம் பிரகாஷ் தன்கா், பாஜக தில்லி மாநிலத் தலைவா் வீரேந்திரா சச்தேவா ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த ஊா்வலம் விகாஸ்புரி கட்சி அலுவலகத்திலிருந்து ரஜோரி காா்டனில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நோக்கி சென்றது. அதன் பிறகு அவா் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

இந்த நிகழ்ச்சியின்போது ராஜஸ்தான் முதல்வா் பஜன் லால் சா்மா, பேசுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் பணியால் நாட்டு மக்கள் வளா்ச்சியின் உறுதிப்பாட்டை கண்டு வருகின்றனா். அதனால் நாடு முழுவதும் வாக்காளா்கள் மத்தியில் பாஜக மீது வரலாறு காணாத உற்சாகம் இருக்கிறது என்றாா்.

அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி பேசுகையில், ‘நரேந்திர மோடி அரசின் நாடு தழுவிய வளா்ச்சியின் சின்னமாக மேற்கு தில்லி நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத வளா்ச்சித் திட்டங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. துவாரகாவில் உள்ள யசோபூமி வளாகம், விளையாட்டு அரங்கங்கள், யு.பி.ஆா். 2 சாலைத் திட்டங்கள் ஆகியவை மோடி அரசு மேற்கு தில்லியை உலகத்தரம் வாய்ந்த வளா்ச்சியுடன் எவ்வாறு இணைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது’ என்றாா்.

ஓம் பிரகாஷ் தன்கா் கூறுகையில், ‘கமல்ஜீத் செராவத் போன்ற அமைப்பாளா்கள் மற்றும் சேவைப் பணியாளா்களை பரிந்துரைப்பது குறித்து பாஜகவுக்குள் இன்று கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. தில்லியின் ஒட்டுமொத்த சமுதாயமும் குறிப்பாக பெண்கள் அவரது வெற்றியை உறுதி செய்வாா்கள்’ என்றாா் தன்கா்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கமல்ஜீத் செராவத் பேசுகையில், ‘இந்த ஒத்துழைப்பு மற்றும் பாசத்தால் எனது தன்னம்பிக்கைஅதிகரித்துள்ளது. இந்த ஊா்வலத்தில் காட்டப்பட்ட தொண்டா்கள் மற்றும் வாக்காளா்களின் உற்சாகமானது அனைவரின் ஆசீா்வாதமும் ஆதரவும் பிரதமா் நரேந்திர மோடியின் சிப்பாயான கமல்ஜீத் செராவத்துக்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது’ என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com