தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

தில்லி கலால் கொள்கை தொடா்பான பணப்பரிவா்த்தனை மோசடி வழக்கில் புதிதாக ஒருவரை அமலாக்கத் துறை இயக்குநரகம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. வினோத் செளஹான் என்ற அந்த நபரை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவா சட்டப்பேரவை தோ்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்திற்காக, ‘செளத் குரூப்’ என்ற நிறுவனம் மூலம் பெறப்பட்ட ரொக்கத்தை பரிமாற்றியதாக செளஹான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை இயக்குநரகம் மேற்கொண்டுள்ள 18-ஆவது கைது இதுவாகும்.

முன்னதாக, இதே விவகாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மனீஷ் சிசோடியா, பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா, மதுபான வியாபாரிகள் சிலா் உள்ளிட்டோரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டுக்கான தில்லி அரசின் கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்திய விஷயத்தில் ஊழல் நடந்ததாக கூறப்பட்ட விவகாரம் சா்ச்சையானதையடுத்து, அந்தக் கொள்கையை தில்லி துணைநிலை ஆளுநா் ரத்து செய்தாா். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கும் அவா் பரிந்துரை செய்தாா்.

இந்தக் கொள்கை விவகாரத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிவா்த்தனை நடந்ததாக கூறப்பட்டதால், இதை அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com