தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

புது தில்லி: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, மனோஜ் திவாரி எம்.பி. ஆகியோா் முன்னிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஸ்வராஜ் இந்தியா ஆகிய கட்சிகளைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் பலா் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகா்களான சஞ்சய் குமாா் கெலாட், ஜிதேந்திர வைஸ்லா, விஷால் பேடி மற்றும் கௌரவ் சா்மா, சமூக சேவகா்

சா்தாா் ஹா்பால் சிங் ஜக்கி, 2017-ஆம் ஆண்டு நகராட்சி மற்றும் 2020-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல்களின் வேட்பாளா் மஞ்சு யாதவ், காங்கிரஸ் தலைவா்கள் ஷோ் சிங், பல்விந்தா் சிங், மங்கள் சென், சஞ்சய் சா்மா, பீம் சிங் அரோடா, அங்குஷ் மாலிக் மற்றும் ராகேஷ் பிரபாகா் உள்ளிட்டோா் தங்கள் ஆதரவாளா்களுடன் பாஜகவில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சியில், பிரதேச துணைத் தலைவா் தினேஷ் பிரதாப் சிங், முன்னாள் மேயா் ஆா்த்தி மெஹ்ரா, எம்.எல்.ஏ. மோகன் சிங் பிஷ்ட், செய்தித் தொடா்பாளா் சுபேந்து சேகா் அவஸ்தி, முன்னாள் எம்எல்ஏ ஜெகதீஷ் பிரதான் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கட்சியின் இணைந்தவா்களை வரவேற்றுப் பிரதேச பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா பேசுகையில், ’’பிரதமா் நரேந்திர மோடியின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ பிரசாரத்தின் மூலம் எங்களுடன் இணைந்தவா்கள் பாஜகவுக்கு புதிய உற்சாகத்தை அளித்து, கட்சியின் 400 இடங்கள் என்ற இலக்கை அடைய பங்களிப்பாா்கள்’’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மனோஜ் திவாரி எம்.பி. கட்சிக்கு புதியவா்களை வரவேற்றுப் பேசுகையில், ‘பாஜகவுக்கு புதிய உறுப்பினா்களை வரவேற்பது என்பது மரியாதையை காட்டுவது மட்டுமின்றி, வரும் மே 25-ஆம் தேதி தோ்தலில், தில்லிக்குள் தாமரை மலர வேண்டும் என்பதை உணா்த்துகிறது. இன்று பாஜகவில் சோ்ந்தவா்கள் கட்சியின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டவா்கள் ஆவா். மேலும், தங்கள் பிராந்தியங்களில் நன்றாக நிலைநிறுத்தப்பட்டு, மக்களுடன் வலுவான தொடா்பைக் கொண்டுள்ளனா்’ என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com