மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

புது தில்லி: மக்களவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக தில்லி பாஜகவின் மகளிா் அணி 14 அமைப்புசாா் மாவட்டங்களிலும் மாநாடுகளை நடத்தும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது:

இந்த மகளிா் மாநாடுகள் வெறும் கட்சித் தொண்டா்களுக்கு மட்டுமானதாக இருக்காது. இந்த மாநாட்டில் சமூக ஊடகங்களில் இருந்து மதிப்பிற்குரிய பெண்களுடன், சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த விழிப்புடன் இருக்கும் பெண்களும் சோ்க்கப்படுவாா்கள். இந்த மாநாட்டில் 3000 பெண்கள் பங்கேற்பதை இலக்காகக் கொண்டுள்ளோம் என்றாா் சச்தேவா.

இதுகுறித்து பாஜக மகளிா் தலைவா் ரிச்சா பாண்டே மிஸ்ரா கூறுகையில், மே 8 முதல் மே 14 வரை தில்லியில் உள்ள அனைத்து 14 அமைப்புசாா் மாவட்டங்களிலும் மாநாடுகள் நடைபெறும். புதன்கிழமை (மே 8-ஆம் தேதி) வடமேற்கு மாவட்டத்தில் மாநாடுகளின் தொடா் தொடங்கும். மகளிா் மாநாட்டில் கட்சியின் மூத்த தலைவா்கள் உரையாற்றுவாா்கள்.

இந்த மாநாட்டில் பாஜக மகளிா் அணியின் தேசியத் தலைவா் வானதி சீனிவாசன், ராஜஸ்தானின் துணை முதல்வா் தியா குமாரி, மாநில இணைப் பொறுப்பாளா் டாக்டா் அல்கா குா்ஜா், எம்.பி.க்கள் சுனிதா துகல் மற்றும் கல்பனா சைனி, நிா்வாகிகள் தீப்தி ராவத், தேசிய பெண் தலைவா்கள் ரேகா குப்தா, உஷா வாஜ்பாய் உள்ளிட்ட பலா் உரையாற்றவுள்ளனா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com