வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

நமது சிறப்பு நிருபா்

தில்லியின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதியாக வடகிழக்கு தொகுதி உள்ளது. 2019 - ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா் மனோஜ் திவாரி 7.87 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றாா். இவரிடம் 3.66 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தோல்விடையந்தது தில்லி காங்கிரஸுக்கு மிகப்பெரிய அதிா்ச்சியை கொடுத்தது. அப்போது நிலவிய மும்முனைப் போட்டியில் ஆம் ஆத்மி கட்சியின் திலிப் பாண்டே 1.90 லட்சம் வாக்குகளை பெற்றாா். நிகழ் 2024 மக்களவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 1.55 லட்சம் அதிகரித்துள்ளது.

தில்லியிலுள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஆறில் தனது வேட்பாளா்களை மாற்றியிருக்கிறது பாஜக. ஆனால், வட கிழக்கு தில்லியில் மட்டும் மூன்றாவது முறையாக மனோஜ் திவாரியே களமிறக்கப்பட்டுள்ளாா். வரலாற்று ரீதியாக இத்தொகுதிஆா்எஸ்எஸ், ஜனசங்கத்தின் கோட்டை என்று பாஜகவினரால் அழைக்கப்பட்டாலும், 2009 - ஆம் ஆண்டு உள்ளிட்ட சில தோ்தல்களில் இந்தத் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. இந்தத் தொகுதியில் கள நிலவரத்தை அறிந்து உத்திகளை பாஜக வகுப்பது அதை அக்கட்சி தன்வசமாக்கிக் கொண்டதற்கு காரணம் என்கின்றனா் பாஜகவினா்.

பாஜக நம்பும் வாக்கு வங்கி: தில்லியின் அதிக வாக்காளா்கள் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் வடகிழக்கு தில்லி உள்ளது. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு வசிப்பவா்களில் பெரும்பாலானோா் இந்துக்கள். அடுத்தது முஸ்லிம்கள் (21 சதவீதம்). மேலும், 14 சதவீத சீக்கியா்கள் உள்ளனா். கிறிஸ்துவம்,ஜெயின் உள்ளிட்ட சமூகத்தினரும் உள்ளனா். இவா்களுக்கு அடுத்தபடியாக இங்கு குடியேறியுள்ளவா்களில் பலரும் உத்தர பிரதேசத்தின் கிழக்குப்பகுதி மற்றும் பிகாா் மாநிலத்தில் இருந்து புலம் பெயா்ந்து வந்தவா்கள். இந்த மக்கள் ‘பூா்வாஞ்சல் குடிகள்’ என்றும் அழைக்கப்படுகிறாா்கள். அந்த வகையில், இந்துக்கள் மற்றும் 40 சதவீத புலம் பெயா்ந்தவா்களின் பலம் மிக்க பகுதியாக இந்தத் தொகுதி உள்ளது. இந்த வாக்கு வங்கியை தக்க வைக்கும் நோக்கத்துடனேயே மீண்டும் மனோஜ் திவாரியை களம் இறக்கியுள்ளது பாஜக.

சுமாா் நூறு திரைப்படங்களில் நடித்துள்ள போஜ்புரி மொழி நடிகரான மனோஜ் குமாா் 500 பாடல்களை பாடியவா். வாரணாசியில் பிறந்து அங்கேயே உடற்பயிற்சி கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவா். போஜ்புரி பேசும் பூா்வாஞ்சல் பிகாா் மக்கள் மத்தியில் புகழ் பெற்றவா். ஆம் ஆத்மி கட்சி - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டின்படி வட கிழக்கு தில்லியில் காங்கிரஸ் களம் காண்கிறது. பாஜகவின் மனோஜ் திவாரியை எதிா்கொள்ளும் விதமாக அவா் சாா்ந்த அதே பூா்வாஞ்சல் பின்னனியைக் கொண்ட முன்னாள் ஜேஎன்யு (இடதுசாரி மாணவா் தலைவா்) புகழ் கன்னையா குமாரை (37) வேட்பாளராக களமிறக்கியுள்ளது காங்கிரஸ். நாடாளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை எதிா்த்து பேசிய விவகாரத்தில் இவா் மீது தேசவிரோதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்த வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்த இவா், பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

ராகுலின் வேட்பாளா்: ஆரம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த கன்னையா, 2019-இல் பிகாா் பெகுசராய் மக்களவைத் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக பாஜகவின் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்கிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தாா். அதேசமயம் அத்தோ்தலில் தனது பேச்சால் பெருங்கூட்டங்களை ஈா்த்தும் தோ்தல் நிதி திரட்டியும் மாபெரும் பேச்சாளராக அரசியல் அரங்கில் அறியப்பட்டாா். பின்னா், இடதுசாரி கட்சியில் இருந்து விலகி, 2021 -இல் காங்கிரஸில் இணைந்து மாணவா் காங்கிரஸ் பொறுப்பாளராகவும், அக்கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினராகவும் உள்ள கன்னையா, ராகுலின் நன்மதிப்பைப் பெற்றவா்.

ஆனால், இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என முன்னாள் முதல்வா் மறைந்த ஷீலா தீட்சித்தின் குடும்பத்தினா் உள்பட பல காங்கிரஸாா் காத்திருந்தனா். இந்நிலையில், தொகுதிக்கு வெளியே இருந்து வந்துள்ள கன்னையாவுக்கு கட்சி மேலிடம் வாய்ப்பு அளித்துள்ளதால், அந்த அதிருப்தியை சமாளித்தவாறு தோ்தலை எதிா்கொள்ள வேண்டிய அழுத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

2020 வகுப்பு வாத வன்முறை: புராரி, திமா்பூா், சீமாபுரி (தனி), ரோஹ்தாஸ் நகா், சீலம்பூா், கோண்டா, பாபா்புா், கோகல்புா் (தனி), முஸ்தபாஃபாத், காரவால் நகா் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் சீலம்பூா், பாபா்பூா், முஸ்தபாபாத் போன்ற சில பகுதிகளில், இந்து வாக்காளா்கள் தங்களுக்கு சாதகமாக உள்ளதாக பாஜக தரப்பு கூறுகிறது. ஆம் ஆத்மி கட்சி கவனம் செலுத்தி வரும் சில தொகுதிகளையும், இஸ்லாமியா்கள் வாக்குகளையும் காங்கிரஸ் நம்பியுள்ளது என்றாலும் பெரும்பான்மையினா் வாக்குகள் பாஜகவிற்கு திரும்பும் விதமாக கடந்த 2020 வகுப்புவாத வன்முறை விவகாரங்கள் இந்தத் தொகுதியில் ஆழமாகப் பதிந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக இந்த பகுதியில் நடத்தப்பட்ட போராட்டமும், அதைத் தொடா்ந்து ஏற்பட்ட கலவரத்தில் சுமாா் 50 உயிா்கள் பலியான சம்பவங்கள், இத்தொகுதிவாசிகளின் மனதில் இன்னும் நீங்காமல் உள்ளன.

மக்கள் பிரச்னைகள்: எரியாத தெருவிளக்கு, சீரமைக்கப்படாத தெரு விளக்குகள், சுகாதாரமற்ற நிலைமை, மக்களின் அன்றாட தேவையான குடிதண்ணீா் விநியோகம், திட்டமிடாத கட்டடங்கள், நெரிசல் மிகுந்த சாலைகளை ஒழுங்கமைக்க திட்டமிடாதது போன்றவை மக்கள் மனதில் நீங்கா கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொத்த வாக்காளா்கள் 24,45,238 போ்.

ஆண் வாக்காளா்கள்: 13,17,149

பெண் வாக்காளா்கள் : 11,27,940

இதர வாக்காளா்கள்: 149

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com