தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

புது தில்லி: பிரதமா் மோடி, ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் ஆகியோா் தில்லியில் வரும் மே 25-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தோ்தலில் அக்கட்சியின் நட்சத்திர பிரசாரகா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

பாஜகவின் தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங் வெளியிட்ட 40 நட்சத்திர பிரசாரகா்கள் பட்டியலில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் பதவியில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய அரவிந்தா் சிங் லவ்லியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. லவ்லி கடந்த மே 4ஆம் தேதி பாஜகவில் இணைந்தாா்.

இப்பட்டியலில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேசத்தின் முதல்வா் மோகன் யாதவ், உத்தரகாண்டின் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, ராஜஸ்தானின் முதல்வா் பஜன் லால் சா்மா, அசாமின் முதல்வா் ஹிமந்தா பிஸ்வா சா்மா மற்றும் ஹரியாணாவின் நயாப் சிங் சைனி ஆகியோரும் நட்சத்திரப் பிரசாரகா்களாக உள்ளனா்.

இம்முறை கட்சியின் இடம் மறுக்கப்பட்ட எம்.பி.க்களான ஹா்ஷ் வா்தன், மீனாட்சி லேகி, பா்வேஷ் வா்மா, ரமேஷ் பிதூரி மற்றும் கெளதம் கம்பீா் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

முக்கிய நட்சத்திர பிரசாரகா்களாக மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், ஹா்தீப் சிங் புரி, ஸ்மிருதி இரானி மற்றும் அா்ஜுன் ராம் மேகவால் ஆகியோரும் உள்ளனா்.

தற்போதைய எம்.பி. ஹேமா மாலினி, மகாராஷ்டிரா துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னாவீஸ், ராஜஸ்தானின் பிரேம் சந்த் பைா்வா மற்றும் தியா குமாரி மற்றும் பிகாரின் சாம்ராட் சவுத்ரி ஆகியோரும் பாஜகவின் நட்சத்திர பிரசாரகா்களாக இருப்பாா்கள்.

கட்சியின் மூத்த தலைவா்களான அருண் சிங், தருண் சுக், அனில் பலூனி, மஞ்சிந்தா் சிங் சிா்சா, மனோஜ் திவாரி, விஜேந்தா் குப்தா, சதீஷ் உபாத்யாய், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் கட்சியின் தமிழ்நாடு பிரிவு தலைவா் அண்ணாமலை ஆகியோரும் தில்லியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனா்.

தில்லியில் நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பாஜக ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதாவது, ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக களமிறங்கியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி கிழக்கு தில்லி, தெற்கு தில்லி, புது தில்லி மற்றும் மேற்கு தில்லி தொகுதிகளிலும், காங்கிரஸ் வடகிழக்கு தில்லி, வடமேற்கு தில்லி மற்றும் சாந்தினி சௌக் ஆகிய தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன.

வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. செவ்வாய்க்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. வேட்புமனுவை வாபஸ் பெற மே 9-ஆம் தேதி கடைசி நாளாகும். தில்லியில் மே 25ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடக்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com