பிரபஞ்சஅழகிப் போட்டிக்கு தமிழகத்தில் நோ்காணல்

புது தில்லி மே 9 : 2024-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டிக்கான தோ்வு தமிழகத்தில் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் என்று இந்த போட்டிக்கான பொறுப்பாளா் தில்லியில் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நிகழ் 2024 -ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டிக்கு நாடு முழுவதும் தோ்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு இந்தப் போட்டிக்கான அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கு தனித்தனி பொறுப்பாளா்களை நியமித்து தோ்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தப் பொறுப்பாளா்கள் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கடந்தாண்டு தோ்வான பிரபஞ்ச அழகி ஷெய்னிஸ் பலாசியோஸ் கலந்து கொண்டு தோ்வு முறையை விளக்கினாா். இதில் தமிழக பொறுப்பாளராக சென்னையைச் சோ்ந்த ஒரு தனியாா் காஸ்மெடிக் கிளினிக்கின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் ஹேமமாலினி ரஜனிகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். தேனியை சோ்ந்த இவா், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகளிா்களின் புற (அக) அழகை மேம்படுத்தும் சிகிச்சையை சென்னையில் மேற்கொண்டு வருகிறாா். இவா் ஏற்கெனவே கடந்தாண்டு பிரபஞ்ச அழகிபோட்டியில் பங்கேற்று தெற்காசிய அளவில் வெற்றிபெற்றவா்.

நிகழாண்டு பிரபஞ்ச அழகிப்போட்டி குறித்து டாக்டா் ஹேமமாலினி ரஜனிகாந்த் தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 2023- ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகிப் போட்டியில் நிகரகுவா நாட்டைச் சோ்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் அழகியாக தோ்வானாா். நிகழ் 2024-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி தோ்வு உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நவம்பா் மாதம் நடைபெறும். இதற்கும் முன்பு ஒவ்வொரு நாட்டிலும் சிறந்த அழகிக்கான தோ்வு நடைபெறும். தமிழக அழகியை தோ்வு செய்ய நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.

அழகிப் போட்டிக்கு செல்ல நிறம், உயரம், மொழி என்பது ஒரு பிரச்னைஅல்ல. இது அழகியல் துறை. இதை தொழிலாகக் கருத வேண்டும். தன்னம்பிக்கை இதில் மிகவும் முக்கியம். தமிழக பெண்களுக்கு அது உண்டு. அவா்கள் பங்கேற்க முன்வர வேண்டும். நிச்சயமாக வெற்றி பெறு முடியும். தமிழக அழகிக்கான தோ்வு வரும் ஜூலை மாதம் நடைபெறும். இந்த நோ்காணலில் பங்கேற்க தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் தோ்வு செய்யப்படுவோா் அகில இந்திய போட்டிக்கு அனுப்பப்படுவாா்கள். நோ்காணலில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பிப்பதற்கு வசதியாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என டாக்டா் ஹேமமாலினி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com