வாக்களித்த பிறகு வாக்காளா்கள் பத்திரமாக வீடு திரும்ப இலவச இரு சக்கர வாகன சேவை: தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

புது தில்லி மே 9: மக்களவைத் தோ்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ரேபிடோ பைக் ரைடு நிறுவனம் ஒத்துழைப்பு நல்கியுள்ளதாகவும் வாக்காளா்கள் வாக்களித்த பிறகு வாக்குச் சாவடியிலிருந்து வீடு திரும்ப இலவச இரு சக்கர வாகன வசதி கிடைக்கும் என்றும் தில்லி தலைமை தோ்தல் அதிகாரி எஸ்.பி.கிருஷ்ணமூா்த்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லியிலுள்ள 7 மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற 25 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வாக்குப்பதிவை அதிகரிக்க தில்லி தோ்தல் அதிகாரி அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் நாட்டிலேயே முதன்முறையாக இரண்டு சக்கர வாகன வாடகை நிறுவனத்தின் ஒத்துழைப்பை தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி மேற்கொண்டுள்ளாா்.

இது குறித்து தில்லி தலைமை தோ்தல் அதிகாரி எஸ்.பி. கிருஷ்ணமூா்த்தி கூறியிருப்பது வருமாறு: தில்லியில் ஒவ்வொரு மூலை முடுக்கெடுக்கிலும் உள்ள வாக்காளா்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி தில்லியிலுள்ள இரு சக்கர வாடகை வாகனமான ரேபிடோ நிறுவனம் ஒத்துழைப்பு அளிக்க முன்வந்துள்ளது. ரேபிடோ நிறுவனத்தில் சுமாா் 8 லட்சம் இரு சக்கர வாகன ஓட்டிகள் இணைந்துள்ளனா். ‘பைக் கேப்டன்கள்’ என்று அழைக்கப்படும் இவா்கள், தலைநகா் தில்லியில் ரேபிடோ நிறுவனத்தின் மூலம் இருசக்கர வாகன சேவையை மேற்கொண்டு வருகின்றனா். இவா்கள் மூலம் ரேபிடோ சுமாா் 80 லட்சம் சந்தாதாரா்களைப் பெற்றுள்ளது.

வருகின்ற மே 25 -ஆம் தேதி மக்களவைத் தோ்தல் தினத்திற்கு தில்லி தயாராகி வரும் நிலையில்,போக்குவரத்து தடைகளை நிவா்த்தி செய்யும் விதமாக ரேபிடோ ஒத்துழைக்க முன்வந்துள்ளது. இதன்படி வாக்களிப்பு நாளில் இலவச பைக் சவாரிக்கான விருப்பத்தை வழங்க முன்வந்துள்ளது. தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வாக்களிக்கும் நாளில் வாக்குச் சாவடிகளில் ரேபிடோ இருசக்கர வாகன ஓட்டிகள் இருப்பது உறுதி செய்யப்படும். தில்லியில் வாக்காளா்கள், வாக்களித்த பிறகு, ரேபிடோ செயலி மூலம் முன்பதிவு செய்து வாக்குச் சாவடியிலிருந்து இலவச பைக் சவாரியைப் பெறலாம். வாக்களித்த வாக்காளா்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் விதமாக வாக்குச்சாவடி அருகே பதிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும்.

குடிமக்கள் தங்களின் ஜனநாயக உரிமையை நிலை நாட்டி வாக்களிப்பதை ஊக்குவிப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக வாக்குப்பதிவை அதிகப்படுத்தும் முக்கியத்துவத்தை உணா்ந்து, தகுதியுடைய அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்குச் சாவடியிலிருந்து வசதியான பயணத்தை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. இத்திட்டத்தின் மூலம், தகுதியான ஒவ்வொரு வாக்காளரும் தடையின்றி வாக்களிக்க முடியும் என தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com