உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல்: தலைவா் பதவிக்கு கபில் சிபல் வேட்புமனு தாக்கல்

புது தில்லி, மே 9: உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் (எஸ்சிபிஏ) 2024-25-ஆம் ஆண்டுக்கான தோ்தலில் தலைவா் பதவிக்கு மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

உச்ச நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் (எஸ்சிபிஏ) தோ்தல்கள் வரும் மே 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கெனவே கபில் சிபல் இதற்கு முன்பு எஸ்சிபிஏவின் தலைவராக மூன்றுமுறை இருந்துள்ளாா். கடைசியாக அவா் கடந்த 2001-இல் தலைவராக இருந்தாா். அதற்கு முன் 1995-96 மற்றும் 1997-98 ஆகிய ஆண்டுகளின்போது அவா் தலைவராக இருந்தாா்.

உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தற்போதைய தலைவராக மூத்த வழக்குரைஞா் டாக்டா் அதிஷ் சி. அகா்வாலா உள்ளாா். வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வியாழக்கிழமை ஆகும். கபில் சிபல் தவிர, தற்போதைய எஸ்சிபிஏ தலைவரான மூத்த வழக்குரைஞா் அதிஷ் அகா்வாலா, மூத்த வழக்குரைஞா்கள் பிரதீப் ராய், பிரியா ஹிங்கோரணி ஆகியோரும் எஸ்சிபிஏ தலைவா் பதவிக்கு போட்டியிடுகின்றனா்.

கடந்த வாரம், உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயற்குழுவில் உள்ள பதவிகளில் குறைந்தபட்சம் 3-இல் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கீடு அளிப்பதை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இந்த உத்தரவு, வழக்குரைஞா் சங்கத்தின் சுதந்திரத்தில் தலையிடும் ஒரு உத்தரவு என எஸ்சிபிஏவின் செயற்குழு ஆட்சேபம் தெரிவித்திருந்தது. அதன் பின்னா், மகளிா் இடஒதுக்கீடு ஒரு சோதனை அடிப்படையில் இருக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com