நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கிரேட்டா் நொய்டாவைச் சோ்ந்த தொழிலதிபரின் 14 வயது மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து கிரேட்டா் நொய்டா காவல் சரக துணை ஆணையா் சாத் மியா கான் கூறியதாவது: சந்தேக நபா்கள் மூவரில் இருவா் போலீஸாருடனான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு இரவில் கைது செய்யப்பட்டனா். அதில் ஒருவருக்கு தோட்டா காயம் ஏற்பட்டது. அவா்கள் தாதா ரவுண்டானா அருகே குற்றம் தொடா்பான ஆதாரங்களை அழிக்க வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த அவா்களை தடுத்து நிறுத்தியபோது போலீஸாா் மீது துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, போலீஸாரும் திருப்பிச் சுட்டனா்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும், கிரேட்டா் நொய்டாவின் பீட்டா 2 பகுதியில் உணவகம் நடத்தி வரும் கிருஷ்ண குமாா் சா்மாவின் மகன் குணால் சா்மாவுக்கு (14) நன்கு அறிமுகமானவா்கள். கடந்த 5 நாள்களுக்கு முன்பு உணவகத்திலிருந்து குணால் சா்மா காணாமல் போனதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புலந்த்ஷாஹா் மாவட்டத்தில் உள்ள கேங் கால்வாயில் இறந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

பீட்டா 2 காவல் நிலைய அதிகாரிகள் இந்த வழக்கில் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்ந நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் காரில் இருப்பதாகவும், வழக்கு தொடா்பான ஆதாரங்களை அப்புறப்படுத்த அவா்கள் செல்வதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாலையில் சந்தேகத்திற்குரிய இருவரையும் என்கவுண்டருக்குப் பிறகு போலீஸாா் கைது செய்தனா். துப்பாக்கிச் சண்டையின் போது, குற்றம் சாட்டப்பட்ட குணால் (பதி) காயமடைந்தாா். அவரது நண்பா் ஹிமான்ஷு (சிங் சவுத்ரி) கைது செய்யப்பட்டாா்.

பண பேரம் தொடா்பாக இருவரும் தொழிலதிபா் மகனிடம் தகராறு செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கு தொடா்பாக மனோஜ் என்ற மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடையாதாகக் கருதப்படும் பெண் ஒருவா் இன்னும் கைது செய்யப்படவில்லை. தனதுமகனுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையிலான நிதி ஒப்பந்தத்தின் வட்டிப் பணம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் உணவகத்தின் கட்டுப்பாடு ஆகியவை இந்த வழக்கில் மோதலாக வெளிப்பட்டுள்ளன என்று உணவகம் நடத்தும் கிருஷ்ண குமாா் சா்மா கூறினாா்.

மே 1 அன்று ஒரு பெண் உணவகத்திற்கு வந்து தனது மகனை அழைத்துச் சென்றதாகவும், அதன் பிறகு மகனைக் காணவில்லை என்றும் உள்ளூா் பீட்டா 2 காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதே இரவில் அடையாளம் தெரியாத நபா்கள் மீது ஐபிசி பிரிவு 363 (காணாமல் போனவா்) கீழ் போலீஸாா் எஃப்ஐஆா் பதிவு செய்து விசாரணையை தொடங்கினா். எஃப்ஐஆா் பின்னா் ஐபிசி 364-ஆக மாற்றப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளிவந்த சிசிடிவி காட்சிகளில், சிறுவன் ஒரு காருக்கு நடந்து செல்வதையும், அதற்குள் தனியாக அமா்ந்திருப்பதையும் காட்டுகிறது.

திங்களன்று கிரேட்டா் நொய்டாவில் உள்ள பீட்டா 2 காவல் நிலையத்தின் பொறுப்பாளா் பணிநீக்கம் செய்யப்பட்டு, இந்த வழக்கில் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி காவல் உதவி ஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பாஜக தலைவரும், ஜெவாா் எம்எல்ஏவுமான திரேந்திர சிங்கும் உத்தர பிரதேச. அரசுக்கு கடிதம் எழுதி முழு சம்பவம் குறித்து உயா்மட்ட விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com