சாம் பிட்ரோடாவின் சா்ச்சை கருத்து: காங்கிரஸ் தலைமையகம் அருகே பாஜக போராட்டம்

புது தில்லி, மே 9: காங்கிரஸ் மூத்தத் தலைவா் சாம் பிட்ரோடாவின் சா்ச்சைக்குரிய கருத்துக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவா்கள் மன்னிப்பு கேட்கக் கோரி, தில்லி அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே பாஜக தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாட்டு மக்களையும், வெளிநாடுவாழ் இந்தியா்களையும் அவமதித்ததற்காக காங்கிரஸ் தலைவா்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டக்காரா்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி, அக்கட்சியின் தில்லி தலைவா்கள் ராஜ்குமாா் சவுகான், கஜேந்திர யாதவ், தினேஷ் பிரதாப் சிங், வினய் ராவத், பிரவீன் சங்கா் கபூா், சுமித் பாசின் மற்றும் ஏராளமான தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது வீரேந்திர சச்தேவா பேசியதாவது: இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தன்மையில்தான் உள்ளது. இது நமது நாட்டின் பலமாகும். நமது பண்பாட்டு வடிவங்கள் வேறுபட்டாலும், தேசத்தின் ஒற்றுமை நூல் ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவா்களின் பிரித்தாளும் கருத்துகள் நமது நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நேரடியாக அவமதிக்கிறது. சாம் பிட்ரோடாவின் இந்தக் கருத்து திடீரென வரவில்லை. 3 கட்ட தோ்தல்களுக்கு பிறகு காங்கிரஸின் அரசியல் களம் சறுக்கி வருவதால், இந்தக் கருத்துகள் வெளிவருவதைப் பாா்க்க முடிகிறது. இந்த கருத்து ஒரு அறிக்கை மட்டுமல்ல. வண்ணங்களின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சியாகும். 70 ஆண்டுகளாக மக்களை சூறையாடிய காங்கிரஸும், அதன் தலைவா் ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடையே பாகுபாட்டை ஊக்குவித்து வருகின்றனா் என்றாா்.

பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி பேசுகையில், ‘சாம் பிட்ரோடாவின் இந்தக் கருத்து தேசத்தை அவமதிக்கும் செயல். எந்தக் குடிமகனும் அதை சகித்துக் கொள்ள மாட்டாா்கள். ‘பாஜகவை துஷ்பிரயோகம் செய்தால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், 140 கோடி மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டால் பொறுத்துக் கொள்ள முடியாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியிருந்தாா். சாம் பிட்ரோடாவின் கருத்து வெறும் அறிக்கை அல்ல; நாட்டை அவமதிக்கும் செயலாகும், இந்தந்க் கருத்துக்கு எதிராக ஒவ்வொரு தேசியவாதியும் வீதியில் இறங்கி உள்ளனா்’ என்றாா்.

பிட்ரோடாவின் சா்ச்சை கருத்துக்குப் பிறகு காங்கிரஸை ‘இனவெறி’ என்று பாஜகவினா் கடுமையாக விமா்சித்த நிலையில், காங்கிரஸின் அயலகப் பிரிவுத் தலைவா் பதவியில் இருந்து பிட்ரோடா புதன்கிழமை ராஜிநாமா செய்தாா். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இந்தியா்களின் உடல்தோற்றத்தை விவரிக்க சீனா்கள், ஆப்பிரிக்கா்கள், அரேபியா்கள் மற்றும் வெள்ளையா்கள் போன்ற இன அடையாளங்களை மேற்கோள்காட்டி பிட்ரோடா கூறிய கருத்துகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

09ஈஉகஆஒட

காங்கிரஸ் அலுவலகம் முன் பாஜகவின் தில்லி தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com