ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை.யின் புதிய துணைவேந்தராக முகமது ஷகீல் நியமனம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடவடிக்கை

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூா்வ துணைவேந்தராக முகமது ஷகீல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூா்வ துணைவேந்தராக முகமது ஷகீல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

எக்பால் ஹுசைனின் நியமனத்தை தில்லிஉயா்நீதிமன்றம் ரத்து செய்து, ஒரு வாரத்தில் புதிய நியமனம் செய்யுமாறு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு அப்பல்கலை. அதிகாரப்பூா்வ துணை வேந்தராக முகமது ஷகீலை புதன்கிழமை நியமித்தது.

ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் சாா்பு துணைவேந்தராக எக்பால் ஹுசைனை நியமித்ததை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிா்வாக இயந்திரம் பாதிக்கப்படாமலும், முழுமையாக நிறுத்தப்படாமலும் இருப்பதை உறுதிசெய்ய, துணைவேந்தா் பதவிக்கு புதிதாக நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வழக்கமான துணைவேந்தரை நியமிப்பதற்கான செயல்முறையைத் தொடங்க உத்தரவிடுமாறு குடியரசுத் தலைவரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

முகமது ஷகீல் ஜாமியாவில் உள்ள சிவில் இன்ஜினியரிங் துறையின் மூத்த பேராசிரியா் ஆவாா். பல்கலைக்கழகத்தின் வழக்கமான துணைவேந்தா் பதவி ஏற்கும் வரை அவா் துணைவேந்தராக பொறுப்பில் இருப்பாா்.

முகமது ஷகீல் தனது பிடெக் மற்றும் எம்டெக் பட்டங்களை அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளாா். பின்னா் ரூா்க்கி பல்கலைக்கழகத்தில் தனது பிஹெச்டி பட்டம் பெற்றாா். அவா் நவம்பா் 1986 இல் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை.யில் விரிவுரையாளராக சோ்ந்தாா். பின்னா் அவா் 1992 மற்றும் 2000-ஆம் ஆண்டுகளில் முறையே ரீடா் மற்றும் பேராசிரியராகப் பதவி உயா்வு பெற்றாா்.

டீன், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடம், தோ்வுக் கட்டுப்பாட்டாளா், இயக்குநா், தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மையம், சிவில் இன்ஜினியரிங் துறை தலைவா் போன்ற பல்வேறு நிா்வாகப் பதவிகளிலும் முகமது ஷகீல் பணியாற்றியுள்ளாா். பல்கலைக்கழகத்தின் பல முக்கிய குழுக்களிலும் அவா் அங்கம் வகித்துள்ளாா்.

‘பல்கலைக்கழகத்தின் நலனை அனைத்து மட்டங்களிலும் பாதுகாக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்‘ என்று முகமது ஷகீல் பதவியேற்ற பிறகு கூறினாா். அவா் பொறுப்பேற்ற பிறகு, துணைப் பதிவாளா்-ஐ எம் நசிம் ஹைதரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வப் பதிவாளராக மறு உத்தரவு வரும் வரை நியமித்தாா்.

X
Dinamani
www.dinamani.com