

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் - ஜே.வி.நாதன்; பக்.256; ரூ.125; விகடன் பிரசுரம், சென்னை-2; )044-2852 4074/84.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் சிறப்புற அமைந்திருக்கும் திருக்கோயில்களில் அந்தந்த திருத்தலத்துக்குரிய மரம் (தல விருட்சம்) கட்டாயம் அமைந்திருக்கும். அவ்வாறு உள்ள மரங்கள், அந்தக் கோயிலின் தல விருட்சமாக உருவானதற்கான காரண-காரியங்களுடன், புராண-இதிகாசங்கள் மூலமாகக் கதையாகச் சொல்லப்பட்டிருக்கும். அம்மரம் உருவானதன் காரணம், அதை வளர்த்தவர், வழிபட்டவர், அதனால் அவர் அடைந்த பயன்கள் - எனப் பல்வேறு சிறப்புகள் சொல்லப்பட்டிருக்கும். சில திருத்தலங்களுக்கு இரண்டு மூன்று தல விருட்சங்கள் உண்டு.
திருத்தல மரங்களாக, வெள்வேலம், கடுக்காய், ஆலமரம், எட்டி, அத்தி, இலந்தை, அரளி, பன்னீர், சரக்கொன்றை, மகிழம், ஆலமரம், அரச மரம், வெள்ளருக்கு, வேம்பு, வாழை, இரும்பூளை, புரசு, தர்ப்பை, விளா, செண்பகம், மூங்கில், கருங்காலி, மருதம், மா, சிவப்பு சந்தன மரம் முதலிய மரங்கள், அவை எந்தெந்த திருத்தலத்தில் உள்ளன; அவற்றின் மருத்துவ குணங்கள் என்னென்ன? எந்தெந்த ராசிக்கு எந்தெந்த தல விருட்சத்தை வணங்க வேண்டும்? எனப் பல்வேறு தகவல்களை வாரி வழங்கியுள்ளார் நூலாசிரியர்.
குழந்தை பிறக்க, வியாபாரம் செழிக்க, பூர்வ ஜென்ம தோஷம் விலக, பதவி உயர்வு பெற, சுகப்பிரசவம் ஆக, நவக்கிரக தோஷம் நீங்க, திருமணத் தடை நீங்க, பிரிந்தவர் இணைய, பில்லி சூனியம் விலக, எதிரிகளை வெல்ல, நினைத்தது நிறைவேற, கடன் தொல்லை நீங்க -
என்பன போன்ற பயனுள்ள சின்னச் சின்னத் தகவல்களை அந்தந்த கோயில் குருக்கள் தந்துள்ளனர். மருத்துவ குணம் கொண்ட இத்தகைய மரங்கள் சங்க இலக்கியங்களில் உள்ளதைப் பாடல்கள் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளது ஓர் ஆய்வு நூலைப் படித்த திருப்தியைத் தருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.