ஆழ்வார்கள் அருள்மொழி - சாமி.சிதம்பரனார்; பக்.112; ரூ.60; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை -17; )044- 2433 1510.
தமிழகத்தில் கி.பி. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மணமும் பக்தி மணமும் பரப்பிய ஆழ்வார்களின் பாசுரங்களையும் அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும் இந்நூலில் தொகுத்துள்ளார் நூலாசிரியர். ஆழ்வார்கள் பன்னிருவரில் திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார் இருவர் தவிர்த்து மீதமுள்ள பத்து ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ள தமிழ்ச் சுவையை தாமறிந்த வகையில் ஒரு தமிழ்ச் சுவைஞராகத் தொகுத்துள்ளார். சிங்கப்பூர் பத்திரிகையில் "தமிழர் அருள்நெறித் தொடர்' எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 10 தலைப்புகளில் 30 துணைத் தலைப்புகளில் ஆழ்வார்களின் வாழ்க்கைச் சுவை வெளிப்பட்டுள்ளது. சாதி வேற்றுமை துறக்கச் சொல்லி அண்ணலின் அடிகளாக ஒன்றுபடச் சொல்லும் நம்மாழ்வாரின் சமூகக் கருத்தை விவரித்துள்ளார். குலம்தாங்கு சாதிகள் நான்கிலும் எனும் பாசுரத்தில், "மணிவண்ணற்கு ஆள் என்று உள்கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே' என்று நம்மாழ்வார் கூறுவது, சமயத் தலைவர்கள் அனைவரும் கொள்ள வேண்டிய உள்ளுணர்வுக் கருத்து என்பதை அழுத்திச் சொல்லியுள்ளார். ஆண்டாள் பாசுரங்களின் அழகை விவரிக்கும் இவர், ஆண்டாளின் காலத்திய சமூக வாழ்க்கை, பெண்களின் மனப்பான்மை, காதல் கொண்ட மகளிர் உள்ளம், கற்புடை மகளிர் இயல்பு, மங்கையர் கடமை, ஒழுக்கம் இவற்றை எவ்வாறு ஆண்டாள் நாச்சியாரின் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன என்பதை பழந்தமிழர் இலக்கியங்களின் எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார். எல்லோர்க்கும் எளிதில் புரியும் பக்தித் தமிழ்ச் சுவையாக இந்நூல் இருப்பது சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.