சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன்; பக்.288; ரூ.225; சேகர் பதிப்பகம், சென்னை-78; )044- 6538 3000.
சோழர் காலத்தில் ஆடற்கலை எவ்வாறு சிறப்புற்று விளங்கியது என்பதை விளக்கும் இந்நூல் ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆடலின் வகைகள், ஒப்பனை, ஆடல் ஆசிரியர்கள், பாடல் ஆசிரியர்கள் பற்றியும், இசை ஆசிரியர்கள், இசைக்கருவிகள், அவற்றின் வகைகள் பற்றியும், ஆடல் நடந்த அரங்கங்களான நிருத்த மண்டபம், திருக்காவணம், சதுர்சாலை, நூற்றுக்கால் மண்டபம், நாடக வீதிகள் பற்றியும், ஆடற்கலைஞர்களின் பெயர்கள், பணிச்சூழல், திருமண வாழ்க்கை, வருவாய், சமூகத்தில் அவர்களுக்கிருந்த மதிப்பு போன்றவை பற்றியும், சோழர்கால ஆடற்கலைப் பற்றி நூலாசிரியர் அறிந்து கொள்ள காரணமான முதன்மைத் தரவுகள் பற்றியும் விளக்கமாக இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
ஆடற் சிற்பங்கள் அதிகம் காணப்படும் தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற கோயில்களைப் பற்றி மட்டுமல்லாது, அதிகம் அறியப்படாத பொன் செய், கீழையூர், சீனிவாச நல்லூர், மேலப் பெரும்பள்ளம் போன்ற பல சிறிய ஊர்களின் கோயில்களில் இடம் பெற்றுள்ள ஆடல் சிற்பங்களையும் கண்டுபிடித்து அவற்றைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.
நூலின் தொடக்கத்தில் தொல்காப்பிய காலம் தொடங்கி ஆடற்கலையின் பரிணாம வளர்ச்சியை விளக்கும்படியாக எழுதப்பட்டுள்ள முன்னுரைப் பகுதியே ஆடற்கலை குறித்த ஓர் ஆவணமாக அமைந்திருக்கிறது.
ஆடலில் மட்டுமல்ல, கலையில், வரலாற்றில், இசையில், இறை நம்பிக்கையில் நாட்டமுடைய அனைவருக்குமே இந்நூல் ஒரு கருவூலம் என்றால் அது மிகையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.