தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு

தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு - இரா.வெங்கடேசன்; பக்.344; ரூ.220; சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-78.
Updated on
1 min read

தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு - இரா.வெங்கடேசன்; பக்.344; ரூ.220; சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-78.

19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல்களின் பதிப்பு வரலாற்றையும் அதன் வளர்ச்சிப் போக்கையும் ஆராயும் இந்நூல், உரைநடை இலக்கண நூல்கள், மரபிலக்கண நூல்கள் ஆகியவற்றின் அமைப்பையும், சமூகப் பயன்பாட்டினையும் விரித்துரைக்கிறது.

19-ஆம் நூற்றாண்டில் வெளியான இலக்கண நூல்களின் பதிப்பு முறைகளில் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றுள்ளதை அறிய முடிகிறது. நூல்களின் அச்சு விவரங்கள் பற்றிய பதிவுகள், அக்காலத்தில் வாழ்ந்த புலமையாளர்களின் திறமைகளைப் பறைசாற்றுகின்றன. இத்தகைய அரிய பணியை ஆரம்ப காலத்தில் சென்னைக் கல்விச் சங்கத்தின் புலவர் பெருமக்களே செய்து வந்துள்ளனர் என்ற தகவலும் புதியது.

மரபிலக்கண நூல்கள் அச்சிடப்படுவதற்கு முன்பு தமிழ் இலக்கணத்தை எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு ஏற்றவகையில் உரைநடை இலக்கண நூல்கள் பல தோன்றியுள்ளன. தொல்காப்பியம், நன்னூல், நேமிநாதம், தண்டியலங்காரம், இலக்கண விளக்கம் முதலிய இலக்கண நூல்கள் தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு வந்துள்ளன. பின்னிணைப்பில் உள்ள "மரபிலக்கண பதிப்பு நூல்கள் பட்டியல்' பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

மொழிக் கல்வியும் தமிழிலக்கண நூல்களின் அச்சுருவாக்கமும், உரைநடை இலக்கண நூல்கள், 19-ஆம் நூற்றாண்டு நூற்பதிப்பு முறைகளும் இலக்கண நூல் பதிப்புகளும், தமிழ் இலக்கண ஆராய்ச்சி ஆகிய இயல்களுடன் பின்னிணைப்பாக, தமிழ்மொழி, பிறமொழி இலக்கணப் பதிப்புகள், பதிப்பு வரலாற்றை அறிய உதவும் ஆய்வேடுகள், கட்டுரைகள், நூல்கள், இலக்கண நூல்களின் முகப்புப் பக்கங்கள் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இவை, இலக்கண ஆய்வாளர்களுக்குப் பெருந்துணை புரியும். தமிழ் இலக்கண வரலாற்றில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டிய அரிய தொகுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com