நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம் - அ.ரெங்கசாமி; பக்.464; ரூ.400; தமிழோசைப் பதிப்பகம், 1050, சத்தி சாலை, காந்திபுரம், கோயம்புத்தூர்-12.
Updated on
1 min read

நினைவுச் சின்னம் - அ.ரெங்கசாமி; பக்.464; ரூ.400; தமிழோசைப் பதிப்பகம், 1050, சத்தி சாலை, காந்திபுரம், கோயம்புத்தூர்-12.

பிரிட்டிஷாரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியாவைப் பிடித்து தனது ஆதிக்கத்துக்குக் கொண்டு வர ஜப்பான் நினைத்தது. அதற்கு பெரிய அளவுக்கு இராணுவத்தை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு சயாம் - பர்மா இடையே ரயில் பாதையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டது. இந்த ரயில் பாதையை உருவாக்கும் முயற்சியில் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்தனர். அதில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள்.

நாற்றம் பிடித்த தூய்மையில்லாத கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்ட தமிழ்த் தொழிலாளிகள், நோய் வாய்ப்பட்டாலும், எவ்வித சிகிச்சையும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. இறந்து போனவர்களைத் தீ வைத்து எரிக்கும்போது, உயிரோடு இருந்தவர்களையும் சேர்த்துக் கொளுத்தியிருக்கின்றனர்.

இந்த சயாம் மரண ரயில் பாதைத் திட்டத்தில் வேலை செய்து உயிர் பிழைத்துத் திரும்பி வந்தவர்களைக் கண்டுபிடித்து விவரங்களைச் சேகரித்து, இந்நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

ஜப்பானியர்கள் ரயில் பாதைத் தொழிலாளர்களைப் பாம்புக் கறி தின்னச் சொல்லி மிரட்டியது, அடுத்தடுத்து பலர் மரணத்தைத் தழுவிக் கொண்டிருந்த துயரமான சூழலில் தீபாவளி கொண்டாடக் கட்டாயப்படுத்தியது, ரயில் பாதை அமைக்கும்போது பாறாங்கல் சரிந்து ஒரு தொழிலாளியின் காலில் விழ, அடிபட்ட அவருடைய கால்களின் தோலை எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் உரித்து, பின்னர் எலும்பை ரம்பத்தால் அறுத்து காலைத் துண்டித்த கொடூரம் என நினைத்துப் பார்க்கவே நடுங்க வைக்கும் பல சம்பவங்கள் நமது மனதை உறைய வைக்கின்றன.

ஜப்பான் என்றால் தொழில் வளர்ச்சி, கடும் உழைப்பு, பூகம்ப அழிவுகளைக் கண்டு மனம் தளராமை என்பன போன்ற உயர்ந்த மதிப்பீடுகளோடு இருப்பவர்களுக்கு இந்நூல் கடுமையான அதிர்ச்சியைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com